ஞாயிறு கொண்டாட்டம்

தாவரங்களைப் பற்றிய அறிவும் விழிப்புணர்வும் தேவை!

'மனித வாழ்க்கைக்கு தாவர அறிவு அவசியம் தேவை. உணவு முதல் மருந்து வரை தாவரங்களின் இடம் மிகப் பெரியது.

தினமணி செய்திச் சேவை

'மனித வாழ்க்கைக்கு தாவர அறிவு அவசியம் தேவை. உணவு முதல் மருந்து வரை தாவரங்களின் இடம் மிகப் பெரியது. கல்வியில் அதற்கான முக்கியத்துவம் குறைந்து வருகிறது. தங்கள் பிள்ளைகளை மருத்துவராக, பொறியாளராக்க வேண்டும் என்றே பெற்றோர் நினைக்கிறார்கள்.

தாவரவியல் படிக்க வைக்க யாரும் முன்வருவதில்லை. இந்தப் புறக்கணிப்பு நாளை மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். அதனால்தான் தாவரங்கள் பற்றிய அறிவையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறேன்' என்கிறார் முனைவர் அ.லோகமாதேவி.

பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரியில் தாவரவியல் பேராசிரியரான இவர், தாவரவியல் சார்ந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் 20 நூல்களை எழுதியிருக்கிறார். இவரது கட்டுரைகள் சர்வதேச தாவரவியல் தளங்களிலும், அமெரிக்காவின் அரிசோனா மாகாண பல்கலைக்கழகத்திலும் இடம் பெற்றுள்ளன. பல விருதுகளைப் பெற்றுள்ள இவரது தூண்டுதலில், மாணவர்கள் புதிய தாவரங்களைக் கண்டுபிடித்து உலக அளவில் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர்.

அவரிடம் பேசியபோது:

'எனது சொந்த ஊரான கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு உள்பட்ட வேட்டைக்காரன்புதூர் இயற்கை எழில் சூழ்ந்த கிராமம். இதனால் எனக்கு சிறுவயதிலேயே செடி, கொடி, பூக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். பட்டப் படிப்பில் தாவரவியலை விரும்பிப் படித்து, முனைவர் பட்டமும் பெற்றேன்.

இன்று நடைபெறும் பல்வேறு சூழல் கேடுகளுக்குக் காரணம் தாவரங்களைப் புறக்கணிப்பதும், அது சார்ந்த விழிப்புணர்வும் இல்லாததுதான். இன்று நாம் ஓர் ஆபத்தான சூழலில் வாழ்கிறோம். தாவரங்களையும் மரங்களையும் அழித்து இயற்கையை படுகொலை செய்து கொண்டிருக்கிறோம். யானைகள் ஊருக்குள் வருவதும், காலம் தப்பி மழை வருவதும் இதனால்தான்.

'குன்றிமணி' மிகவும் விஷத்தன்மை வாய்ந்தது. அதை குழந்தைகளிடம் கொடுத்து சாதாரணமாக மக்கள் விளையாடுகிறார்கள். நாட்டுக்கருவேல மரத்துக்கும், சீமைக் கருவேல மரத்துக்கும் வேறுபாடு தெரிவதில்லை. சீமைக்கருவேல மரம்தான் ஆபத்தானது. 'கானோகார்பஸ் லான்சி ஃபோலியஸ்' என்ற தாவரவியல் பெயர் கொண்ட துபை மரம், வெளிநாடுகளில், குறிப்பாக வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். அதை இங்கே விளம்பரப்படுத்தி விற்றிருக்கிறார்கள். அதில், வெளியாகும் மகரந்தத் தூள் சுவாசக் கோளாறு ஏற்படுத்தக்கூடியது. எனவே பல நாடுகளில் அதைத் தடை செய்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் அந்த மரத்தை தடை செய்து, அதை அழிப்பதற்குத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசும் அதைத் தடை செய்து, வெட்டி அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க ஆணையிட்டுள்ளது. ஆனால், புதுக்கோட்டை உள்ளிட்ட பெரும்பாலான நெடுஞ்சாலை ஓரத்தில் வளர்க்கப்பட்டு, அப்படியேதான் இருக்கின்றன.

அறியப்படாதவை ஆயிரம்

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள தாவரங்கள் கண்டறியப்பட்ட அளவுக்கு, கிழக்குத் தொடர்ச்சி மலையில் கண்டறியப்படவில்லை. அந்தியூர் வனப் பகுதி பழங்குடியினரான சோளிகர்களின் தாவரவியல் தொடர்புகள் குறித்த ஆய்விலும் ஈடுபட்டுள்ளேன். பல மூலிகைகளின் தன்மை பற்றிப் பழங்குடியினர் அறிந்து வைத்திருக்கிறார்கள். நோய்வாய்ப்படும் காலத்தில் யானைகளுக்கு பாகன்கள் அளிக்கும் மூலிகைத் தாவரங்கள் பற்றி ஆய்வு செய்திருக்கிறேன்.

ஆய்வில் கண்ட தீர்வு

எங்கள் ஊரில் கயிறு தொழிற்சாலைகள் வந்து, தேங்காய் நார்க் கழிவுகள் ஊரெங்கும் குவிக்கப்பட்டிருந்தது. அதைத் தீ வைத்து எரித்து, அந்தப் புகை பலரது சுவாசக் கோளாறுகளுக்குக் காரணமாக மாறியது. அதைச் சிலபூஞ்சைகளின் உதவியால் மட்கச் செய்து, 45 நாள்களில் உரமாக்கும் யோசனை வந்தது. அந்த ஆய்வைச்

சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் நிதி உதவியுடன் செய்தேன். அது நன்றாகச் செயல்பட்டது. அந்த ஆய்வை எனது 26 வயதில் மேற்கொண்டு முனைவர் பட்டத்தை வாங்கினேன். எல்லாத் தொழிற்சாலைகளிலும் அந்தச் செயல்முறைகளைச் செய்யத் தொடங்கிவிட்டனர். அந்த ஆய்வு தொடர்பான ஆறு சர்வதேச ஆய்வறிக்கைகள் இங்கிலாந்தில் வெளியாயின. சால்போர்ட் பல்கலைக்கழகத்தின் அறிவியல் இதழிலும் வெளிவந்தது.

பயிற்சிகளும் நெகிழ்ச்சிகளும் !

'அறக்கல்வி இயக்கம்' சார்பில் வாசிப்பு ஆர்வமுள்ள மாணவர்களைத் தேர்ந்தெடுத்து 'யான்' அமைப்பின் மூலம் அறக்கல்வியைப் பயிற்சியாக அளித்து வருகிறேன். இதில் இயற்கை அறம், காந்திய அறம், வணிக அறம் போன்ற பல்வேறு அறங்களைக் கற்பிக்கிறோம். இயற்கையைவிட்டுத் துண்டித்து கைப்பேசி, தொலைக்காட்சி என்று 11 மணி நேரம் திரை பார்க்கும் இந்தக் காலத்தில், சூழல் அறிவை இளைய தலைமுறைக்குக் கொடுக்க வேண்டியுள்ளது. குழந்தைகளுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் பல்வேறு பயிற்சிகளை நான் நடத்தி வருகிறேன்.

குழந்தைகளிடம் வகுப்பறைப் பாடமாக எடுக்காமல் கள அனுபவமாக வனம், மலை என்று சுட்டிக் காண்பித்து, இயற்கைச் சூழலில் அதை சொல்லிக் கொடுப்பதால், அவர்களுக்கு மிகவும் பிடிக்கிறது. பெரிய மனமாற்றமாகவும் சூழல் மாற்றமாகவும் உணர்கிறார்கள். எப்போதும் வீடு, தொலைக்காட்சி, கணினி, கைப்பேசி என்று இருக்கும் அவர்கள், பெரிய விடுதலையாக அதை ஆர்வமுடன் கற்றுக் கொள்கிறார்கள்.

ஆய்வுகளுக்கு ஆதரவு

டாக்டர் சர்வலிங்கம் குழுவினர் எங்கள் கல்லூரி வளாகத்திலேயே புதிதாக ஒரு தாவரத்தைக் கண்டுபிடித்து, பொள்ளாச்சி மகாலிங்கத்தின் நினைவாக 'ஆப்ரோஹைபாந்தஸ் மகாலிங்கமி' என்று பெயர் வைத்தனர். அதேபோல் எங்கள் துறை ஆய்வு மாணவர் கனகராஜ், கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் ஆனைமுடி மலை, ஸ்கை ஐலேண்ட் பகுதியில் ஒரு புதிய தாவரத்தைக் கண்டுபிடித்துள்ளார். இதற்கு சர்வதேச அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. கிழக்குத் தொடர்ச்சி மலையில் கண்டறியப்படாமல் உள்ள தாவரங்களைக் கண்டறிய வேண்டும் என்கிற கனவு இருக்கிறது.

தாவரவியல் எழுத்துப் பணி

'வலைப்பூ'வைத் தொடங்கி எழுதத் தொடங்கினேன். இதழ்களிலும் தாவரவியல் கட்டுரைகளை எழுதினேன். தமிழில் 14 புத்தகங்களை எழுதி இருக்கிறேன். போதை நச்சுத் தாவரம் பற்றி எழுதிய 'ஸாகே' பரவலாகப் பேசப்பட்டது. தாவரவியல் அகராதியை உருவாக்கி வருகிறேன். அது ஆங்கிலத்தில் பத்தாயிரம் சொற்கள் கொண்டது. அதைத் தமிழில் உருவாக்குகிறேன். அதற்கு இணையான சொற்களும் விளக்கமும் அளிக்க வேண்டி இருக்கிறது. அதற்காக நிறைய சரிபார்க்க வேண்டியிருக்கிறது. அந்தப் பெரிய வேலையைச் செய்து வருகிறேன். விரைவில் முடித்து விடுவேன்.

வெளியே சென்றால் ஆபத்து என்கிற மனநிலையில் பிள்ளைகளைச் சூழலோடு இணையாமல் துண்டித்து, நான்கு சுவர் அடைப்புக்குள் வளர்த்து வருகிறோம் . இது மிகவும் ஆபத்தானது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வையும் தாவரங்கள் பற்றிய புரிதலையும் ஏற்படுத்த வார இறுதி நாள்களில் திருப்பூர், ஈரோடு என்று பயணம் செய்து , என் நேரத்தைச் செலவிட்டு சூழல் வகுப்புகளை எடுத்து வருகிறேன். எதிர்காலச் சமுதாயத்துக்கு ஏதோ செய்ததுபோல் இதில் எனக்கு ஓர் ஆத்ம திருப்தி கிடைக்கிறது. இன்றும் என்னை நான் ஒரு தாவரவியல் மாணவியாகத்தான் உணர்கிறேன்' என்கிறார் அ.லோகமாதேவி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசு, கிரிக்கெட் வாரியம் என்ன முடிவெடுத்தாலும் அதனை பின்பற்றுவோம்: பாகிஸ்தான் கேப்டன்

இந்தியாவின் குரல்...

வாழ்க்கையை நேசிக்கிறேன்

தனிநபர்: 20 லட்சம் நூல்கள்

”5 வரிகளுக்கே கதறும் பாஜக!” ராகுல் Vs ராஜ்நாத் சிங்! | செய்திகள்: சில வரிகளில் | 02.02.26

SCROLL FOR NEXT