முகப்பு
வெள்ளிமணி

நீர்வளூர் ஹிரண்ய சம்ஹார நரசிம்ம மூர்த்தி!

காஞ்சிபுரத்திலிருந்து சென்னை வரும் வழியில் 15 கி.மீ. தொலைவில் உள்ளது நீர்வளூர்! இவ்வூர், சின்மயசத்திரம் அருகில் உள்ளது.

Updated On : 27 ஏப்ரல் 2018, 12:00 am IST
பகிர்:

காஞ்சிபுரத்திலிருந்து சென்னை வரும் வழியில் 15 கி.மீ. தொலைவில் உள்ளது நீர்வளூர்! இவ்வூர், சின்மயசத்திரம் அருகில் உள்ளது. மேலும் அருகிலேயே இருக்கும் மதுரமங்கலம் சென்று ஸ்ரீ வைகுந்தப் பெருமாளை சேவித்து கண் நோய் தீர்க்கும் ராமானுஜரின் சீடரான எம் பாரையும் சேவித்து நலம் பெறலாம்.
நீர்வளூர் ஸ்ரீ வீற்றிருந்த லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில் அஹோபில மடத்து ஜீயர் ஸ்வாமிகளாய் திகழ்ந்த 6 -ஆம் பட்டம் ஸ்ரீ ஷஷ்ட பராங்குச
யதிந்ர மஹா தேசிகனால் 1503 -ஆம் வருடம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இத்திருக்கோயில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுங்குவார் சத்திரத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் பாம்பன் ஆயில் மில்லுக்கு பின்பக்கம் சுமார் 2 கி.மீ தூரத்தில் உள்ள நீர்வளூரில் அமைந்துள்ளது. 
மூலவர் அருள்மிகு லட்சுமி நாராயணப் பெருமாள். உற்சவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள். "இடந்திட்டு இரணியன் நெஞ்சை இரு பிளவாய் முன் கீண்டாய் குடந்தை கிடந்த என் கோவே..' என்ற பெரியாழ்வார் பாசுரத்தின்படி, 6-ஆம் பட்டம் ஜீயர் ஸ்வாமிகளால் அஹோபிலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட ஹிரண்ய சம்ஹார நரசிம்ம மூர்த்தியையும் இத்தலத்தில் கண்டுகளிக்கலாம். இத்திருமேனியின் அருட்காட்சி கண்ணையும் கருத்தையும் கவரும் விதத்தில் அமைந்திருப்பது மயிர்கூச் செரியும் அனுபவமாகும். 
ஹிரண்யனை வதம் செய்து பிரகலாதனை காத்த வைபவம் நம் கண்முன்பே தெரிய கண்களில் நீர்வழிய மெய் மறந்து நிற்கிறோம். பிரகலாதனை காத்த நம் மூர்த்தி நம்மையும் காப்பான் என திட மனதுடன் சேவித்து மகிழ்வோம். சாப அனுக்கிரக ஸ்வாமி என்று போற்றப்படும் இவர், நம் சாபங்களை எல்லாம் நிவர்த்தி செய்து நம்மை வாழவைக்கவே இங்கு இருக்கிறார் என்று தோன்றுகிறது. 
நீர்வளூர் கிராமம் முன் காலத்தில் ஸ்ரீ பாஷ்யபுரம் என்கிற பெயரோடு விளங்கிவந்தது. இத்தலத்து மூர்த்தி பக்தர்களுக்கு அருள்தந்து காட்சியளித்து வந்தவர். பின்னர், காலப்போக்கில் எங்கு மறைந்து போனார் என்று தெரியவில்லை. பகவத் ராமானுஜரே 6-ஆம் பட்டம் ஜீயர் ஸ்வாமிகளின் கனவில் தோன்றி பெருமாளின் இருப்பிடத்தைக் காண்பித்து கொடுத்ததாக ஜகீகம்! அதன்படியே இத்திருக்கோயில் நிர்மாணிக்கப்பட்டது என்று தெரிகிறது. ஆகவே, இவ்வூர் ஸ்ரீ பாஷ்யபுரம் என்ற பெயர் பெற்றது.
மேலும், ஒளவை பிராட்டி இங்கு வந்தபோது ஊர்மக்கள் அரசனின் உத்தரவுப்படி பிராட்டியாருக்கு தண்ணீர் தர மறுத்ததால் ஒளவை பிராட்டியின் சாபத்தால் நீர்வளூர் என்பது நீர் வற்றியூராகியது என்பர். பின்னர், ஜீயர் ஸ்வாமிகளின் மகிமையால் இவ்வூர் வளம் பெற்றது. இன்றும் வற்றாத "ஜீயர் குளம்' என்கிற ஏரி குடிநீருக்கும் விவசாயத்திற்கும் பயன்படுகிறது.
பாஞ்சராத்ர ஆகமப்படி செயல்படும் இக்கோயில் விமானம் "ஜெய கோடி' விமானம் என அழைக்கப்படுகிறது. தாயாருக்கு தனி சந்நிதி கிடையாது. கட்ட முற்பட்டபோது தடங்கல்கள் வந்ததாகக் கூறுகின்றனர். மேலும் பெருமாளே கனவில் வந்து தானே உபயநாச்சியாரோடு இருந்து லட்சுமி நாராயணராக இருந்து அருள்வழங்குவதால் தாயாருக்கு தனி சந்நிதி வேண்டாம் என கூறிவிட்டார் எனப்படுகிறது.
விஜயநகர மன்னர் மகளின் கொடுமையான வியாதியை போக்கடித்த இப்பெருமாளுக்கு அம்மன்னனே கோயில் கட்டியுள்ளார். 
வங்காள தேசமன்னருக்கு இப்பெருமாளின் அருளால் புத்திர பாக்கியம் ஏற்பட்டதால் அம்மன்னன், ராஜ கோபுரத்தை கட்டிக் கொடுத்துள்ளார். இப்போதும் கோயில் மிகவும் சிறப்பான முறையில் ஆராதிக்கப்பட்டு வருகிறது.
நரசிம்ம ஜெயந்தி, திருஆடிப்பூரம், ராமநவமி, ஆகிய வைபவங்களும் மிக சிறப்பாக நடைபெறுகிறது. மேலும் பெருமாள், ஆண்டாள், காளிங்க நர்த்தன கண்ணன், நம்மாழ்வார், ராமானுஜர், சுவாமிதேசிகன் ஆகியோர் நமக்கு அருள்புரியவே காத்துக் கொண்டு இருக்கின்றனர். பக்த பிரஹலாதனை காத்த நீர்வளூர் ஹிரண்ய சம்ஹார நரசிம்மரை சேவித்து அருள்பெறுவோம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.