முகப்பு
வெள்ளிமணி

திருக்கடையூர் ரகசியம்

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர்களும் அருளிய திருப்பதிகங்களைப் பெற்று விளங்குவது திருக்கடவூர்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 12:14 PM
திருக்கடையூர்
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 12:10 PM

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர்களும் அருளிய திருப்பதிகங்களைப் பெற்று விளங்குவது திருக்கடவூர் என்னும் திருக்கடையூர் திருத்தலமாகும்.

மார்க்கண்டேயர் இங்கு இறைவனைப் பூசிக்கின்றபோது உயிர் கவர வந்த யமனை இறைவன் சம்ஹரித்தருளியதால், அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்றாகவும் விளங்குகிறது.

குங்கிலியக்கலயநாயனார், காரியநாயனார் ஆகியோர் அவதாரம் செய்து அருளியது, அபிராமி அம்மனின் அருள்பெற்ற அபிராமி பட்டர் அந்தாதி பாடி அரசனுக்கு அமாவாசையை பௌர்ணமியாக்கி காட்டியது எனப் பல சிறப்புகளுடைய தலம்.

Advertisement

இத்தலத்தின் மூலவர் அமிர்தகடேஸ்வரர். இறைவி அபிராமி அம்பாள். நித்திய திருக்கல்யாண திருத்தலம். இங்கு பக்தர்கள் அவரவர் ஜென்ம நட்சத்திரம் அன்று வழிபட்டால் ஆயுள் விருத்தி ஏற்படும். சஷ்டியப்த பூர்த்தி, உக்ரரத சாந்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், ஜென்ம நட்சத்திரம், ஆயுஷ்ய ஹோமம் ஆகியவை செய்வதற்கு மிகவும் ஏற்ற தலம்.

அமிர்தகடேஸ்வரர் கோயிலின் பிரதான மேற்கு ராஜகோபுர நுழைவாயில் வழியாக நுழைந்தால் முதலில் கொடிமரத்தையும் நந்தியையும், பிறகு முதல் பிரகாரத்தை அடுத்துள்ள சிவன் சந்நிதி கோபுர நுழைவாயிலின் கீழே வலதுபுறத்தில் உள்ள அதிகார நந்திகேஸ்வரர், சுயசாம்பிகையையும் தரிசிக்கலாம். பிறகு விநாயகரின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகக் கருதப்படும் அமிர்த கலசத்துடன் காட்சிதரும் கள்ள வாரணப் பிள்ளையாரை தரிசனம் செய்யலாம்.

முதல் பிரகாரத்தில் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி, கஜலட்சுமி, சிவகாமி அம்மன் சமேத நடராஜர் அருள்கிறார்கள். பிறகு சங்கு மண்டபம் வழியாக மூலவர் அமிர்தகடேஸ்வரரை வழிபட்டு, பிறகு தெற்கு நோக்கிய பாலாம்பிகை சமேத காலசம்ஹார மூர்த்தியை தரிசிக்கலாம். இந்த சந்நிதியில் திருக்கடையூர் ரகசியம் என்று சொல்லக்கூடிய மகா ம்ருத்யுஞ்ச மந்திர தகடு உள்ளது. அடுத்து, இதற்கு நேர் எதிரில் பிரகாரத்தில் உள்ள எமதர்மராஜனையும் தரிசிப்பது மரபாகும்.

பிறகு முதல் பிரகாரத்தில் உள்ள அனலன், ப்ரத்யூஷன், ப்ரபாச, ஸ்ரீதரன், சோமன், துருவன் உள்பட பல்வேறு மூர்த்தங்களை ஒவ்வொன்றாக வழிபடுகிறோம்.

அடுத்து அபிராமி அம்மன் கோயிலுக்குச் சென்று மூலவர் அபிராமி அம்மன், கோஷ்டத்தில் உள்ள இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தியை தரிசனம் செய்து, திருச்சுற்றில் உள்ள புகழ்பெற்ற சரஸ்வதி தேவி, வள்ளி - தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி, அபிராமி பட்டரை தரிசனம் செய்கிறோம்.

அதன் பின்பு கொடிமரத்தின் முன்புறம் வணங்கிவிட்டு, முனீஸ்வரர் சந்நிதி சென்று வழிபட்டு, சிதறு தேங்காய் எறிந்து செல்வதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்தக் கோயிலில் சித்திரை மகோற்சவம் ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்கி, மே 2-ஆம் தேதி தெப்பத் திருவிழாவுடன் நிறைவு பெறுகிறது.

இதில் முக்கிய நிகழ்வான ஏப்ரல் 23-ஆம் தேதி இரவு திருக்கல்யாணம், ஏப்ரல் 26-ஆம் தேதி காலை 9 மணிக்குமேல் 10.30 மணிக்குள் பாலாம்பிகா சமேத காலசம்ஹாரமூர்த்தியின் வீரநடன தரிசனமும், இரவு 9 மணிக்கு மேல் காலசம்ஹார பெருவிழா நிகழ்ச்சியில் எமதர்மராஜன் வதம், அனுகிரகம் நிகழ்ச்சிகளும் நடக்கும். ஏப்ரல் 28}ஆம் தேதி காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடக்கிறது.

தரிசனத்துக்காக காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில், மயிலாடுதுறையில் இருந்து பொறையார் செல்லும் பேருந்து மார்க்கத்தில் சுமார் 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

- தஞ்சாவூர் இரா.சுரேஷ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.