ஆயுள் பலம் அதிகரிக்க...
சுமார் 1400 ஆண்டுகளுக்கு மேலான பழைமையும், பல்லவர் கால கட்டடக்கலை நுணுக்கங்களையும் கொண்டது.
சுமார் 1400 ஆண்டுகளுக்கு மேலான பழைமையும், பல்லவர் கால கட்டடக்கலை நுணுக்கங்களையும் கொண்டது, திண்டிவனம் அருகேயுள்ள ஆலகிராமம் என்ற ஊரிலுள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை எமதண்டீஸ்வரர் திருக்கோயில். கல்வெட்டுகளில் இவ்வூர் "ஆர்காமூர் பற்று' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்லவர் காலத்தில் கட்டப்பட்டு, பிற்காலச் சோழர்கள், விஜயநகர மன்னர்களின் பங்களிப்பைப் பெற்ற இத்தலத்தின் வரலாறு, திருக்கடையூர் புராணத்தின் தொடர்ச்சியாக, ஈசன் எமதர்மனுக்கு அருளிய பெருமையைக் கூறுகிறது.
ஒருசமயம், தர்மப் பணிகளைத் தொடர முடியாமல் அவதியுற்ற எமதர்மன், பல தலங்களுக்குச் சென்று சிவலிங்கத்தைப் போற்றி வழிபட்டார். அவர் தொண்டி நதிப் பகுதியில் அமைந்துள்ள இத்தலத்துக்கு வந்து தவம் செய்தபோது, எமதர்மனின் தவத்துக்கு இரங்கிய ஈசன், அவரது பாவம் தீர அங்கேயே கங்கையை வரவழைத்தார் (இன்றும் இக்கோயிலின் எதிரே ஸ்ரீ கங்காதேவி அருள்புரியும் கங்கை குளம் உள்ளது).
Advertisement
எமதர்மன் அந்தக் கங்கையில் நீராடி ஈசனை வணங்க, சிவபெருமான் அவருக்குக் காட்சி கொடுத்து பாவம் நீக்கி, இழந்த "தண்டத்தை' மீண்டும் அவரிடமே வழங்கச் செய்தார். எமதர்மனின் பாவம் நீங்கப் பெற்று, மீண்டும் தர்மப் பணிகளைச் செய்யத் தேவையான ஆற்றலையும் "தண்டத்தையும்' வழங்கியதால், இத்தல இறைவன் "எமதண்டீஸ்வரர்' என அழைக்கப்படுகிறார்.
இவரே சகல தோஷங்களையும் நீக்குபவராகத் திகழ்வதால், இங்கே நவகிரகச் சந்நிதி என்று தனியாக இல்லை. ஸ்ரீ திரிபுரசுந்தரி அன்னையுடன் எமதண்டீஸ்வரரைத் தொழுதாலே நாளும், நவகோள்களும் நன்மையைத் தரும் என்பது ஐதீகம்.
பல ஆண்டுகளாகப் புனரமைக்கப்படாமல் இருந்த இவ்வாலயத்தில் வீற்றிருந்த நாக தேவதைகள் நிலைபெற முடியாமல் தவித்ததை, ஸ்ரீ மதுர காளியம்மன் தனது பக்தர்கள் மூலம் வெளிப்படுத்தி, கோயிலைப் புனரமைப்பு செய்ய அருள்புரிந்ததும் இத்தலத்தின் மகிமையைக் கூட்டுகிறது.
அண்மையில் மகாகும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்று கோயில் புதுப்பொலிவுடன் திகழ்கிறது. கருவறையில் உள்ள சுயம்பு மூலவர் பல்லவர் காலத்திற்கே உரிய சதுர வடிவ ஆவுடையார் மீது கம்பீரமாக வீற்றிருக்கிறார்.
இக்கோயிலின் வியத்தகு காட்சியாக, ஆறடி உயரத்தில் நின்ற கோலத்தில் அபய, வரத முத்திரைகளுடன் அருள்பாலிக்கும் அன்னை ஸ்ரீ திரிபுரசுந்தரி வீற்றிருக்கிறாள். அன்னையின் திருமுகம், வாரத்தின் ஏழு நாள்களிலும் ஏழு விதமான முகபாவங்களோடு திகழ்வது மெய்சிலிர்க்க வைக்கும்.
ஆன்மிகத் தலம் மட்டுமல்லாமல் வரலாற்று ஆய்வாளர்களுக்குப் பல்வேறு தகவல்களை வழங்கும் இடமாகவும் இத்தலம் திகழ்கிறது.
2015-ஆம் ஆண்டு நடந்த திருப்பணியின் போது கண்டறியப்பட்ட விநாயகர் சிற்பம், கி.பி. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். வட்டெழுத்துக் கல்வெட்டுகளுடன் 75 செ.மீ. உயரமும், 40 செ.மீ அகலமும் கொண்ட இத்தல விநாயகர், கல்வெட்டுச் சான்றுகளின்படி காலத்தால் முந்தையவர் என்பதால் "மூத்த விநாயகர்' எனப் போற்றப்படுகிறார்.
கோயிலில் உள்ள சிற்பங்கள் ஒவ்வொன்றும் கலை நுணுக்கங்கள் நிறைந்தவை. கி.பி. 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவிஷ்ணு சிற்பம், தலையில் வெண்கொற்றக்குடையுடன், சங்கு சக்கரம் ஏந்தி, பூமாதேவியும், மார்க்கண்டேயரும் வணங்கும் கோலத்தில் மிக அபூர்வமாக வடிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிவபெருமானின் 28}ஆவது திருநாமமாகக் கருதப்படும் லகுலீசுவரர் சிற்பம் பல்லவர் காலப் "பாசுபத சைவ' மரபின் தொன்மையை உறுதிப்படுத்துகிறது. மேலும், 12 கரங்களுடன் மயில் வாகனத்தில் வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமான், கம்பீரமாகத் தோற்றமளிக்கும் தட்சிணாமூர்த்தி சிற்பங்கள் இக்கோயிலின் கலைப் பொக்கிஷங்களாகும்.
பிரதோஷ தினத்தில் மாலை வேளையில் இங்கு நந்தி பகவான் சுவாசிப்பதை உணர முடிவதாகக் கூறுகிறார் அர்ச்சகர். இத்தலத்தின் கல்வெட்டுகளில் ராஜேந்திர சோழன் காலத்து நிவந்தங்கள், வழிபாட்டு தானங்கள் குறித்த செய்திகள் காணப்படுகின்றன. காஞ்சி மகா பெரியவர் 1943 முதல் 1972 வரை ஐந்து முறை இத்தலத்துக்கு வந்து தங்கி இறைவனை தரிசித்துள்ளார். பிரகாரத்தில் உள்ள சித்தரின் ஜீவ சமாதியும், சனீஸ்வரர், நாகர் சிலைகளும் தனித்துவமான ஆன்மிக அதிர்வுகளைத் தருகின்றன.
இங்கு மாத சிவராத்திரி, சங்கடஹர சதுர்த்தி நாள்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. நெய் தீபமேற்றி வழிபட, குழந்தை வரம், தடைபட்ட திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. நவகோள்களின் தோஷம் நீங்கவும், எம பயம் நீங்கி ஆயுள் பலம் பெறவும் இத்தலம் மிகச் சிறந்த வழிபாட்டுத் தலமாகும்.
தரிசனத்துக்காக காலை 6.30 முதல் பகல் 12 வரையும், மாலை 4.30 முதல் இரவு 7.30 வரையும் திறந்திருக்கும் இந்தக் கோயில், திண்டிவனம் } விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கூட்டேரிப்பட்டிலிருந்து மேற்கே சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
- முனைவர் எஸ்.பாலசுப்ரமணியன்