நாடி வந்தால் நன்மை
சத்யானந்த சித்தரின் மகிமை பற்றி..
பதினெட்டாம் நூற்றாண்டில், தென் தமிழ்நாட்டில் பிறந்த சத்யானந்தா என்பவர் சிவன் மீது பற்று கொண்டு சிதம்பரம் வந்து சிவத்தொண்டு புரிந்துவந்தார். உயரமான உருவம், நீண்ட ஜடாமுடி, தேஜஸ் பொருந்திய முகத்துடன் காணப்பட்ட இவரை "ஸ்ரீசத்தியானந்த சித்தர்' என்று மக்கள் அழைத்தனர்.
அங்கிருந்து திருவண்ணாமலைக்கு வந்து சிலகாலம் கழித்தவர், பின்னர் சென்னை கிண்டியில் வில்வ மரங்கள் நிறைந்த தோப்புக்கு வந்து சேர்ந்தார். அவரை அந்த இடத்தின் உரிமையாளர் எம்.ஜே. லோகநாத முதலியார் நிரந்தரமாகத் தங்கவைத்து, ஆன்மிகப் பணியைத் தொடரச் செய்தார்.
அந்த இடத்தில் கோழியின் கழிவுகள் நிறைந்திருந்தன. அதையே அவரைத் தேடிவரும் பக்தர்களுக்கு பிரசாதமாக அளித்ததால் "கோழிபி சித்தர்' என்ற பெயர் நிலைத்துவிட்டது.
"இவர் உடலை பல துண்டுகளாகப் பிரித்துப் போட்டு தியானத்தில் ஈடுபட்டுள்ளார்' என்றும், "மதம் மாறியோருக்கு இவர் அளிக்கும் கோழியின் கழிவுகள் தங்கமாகும். நோய் உள்ளோருக்கு அளிக்கும்போது விபூதியாகும். சிறுவர்களுக்கு இனிப்பாகும். ரசவாதக் கலையில் உலோகங்களைத் தங்கமாக மாற்றும் கலையை அறிந்தவர்' என்றும் கூறப்படுகிறது.
இவரது மகிமையை அறிந்த ஆங்கிலேய அலுவலர்கள் இவரைச் சோதிக்க விரும்பினர். ரேஸில் எந்தக் குதிரை ஜெயிக்கும் என்று கேட்டு, அவர் சொல்லும் எண்கள் கொண்ட குதிரைகள் ஜெயித்துள்ளதாகவும், இதையடுத்து அவர்களும் சித்தரை வழிபடத் தொடங்கியுள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது.
வட இந்தியாவில் ஆன்மிகப் பயணத்தை மேற்கொண்ட இவர், இமயமலையில் பல ஆண்டுகள் தவம் செய்தார். புணே மகாராஜாவை சந்தித்துவிட்டு வரும் வழியில் ஷீரடி சாயி பாபாவைச் சந்தித்து, அங்கேயே சில ஆண்டுகள் தங்கியுள்ளார்.
நண்பராகிவிட்ட இவரைப் பிரிய மனம் இல்லாத ஷீரடி சாயிபாபா இங்கேயே தங்குமாறு கூற, சித்தரோ தான் கிண்டியில்தான் ஜீவ சமாதி அடைவேன் என்று கூறி புறப்பட்டு வந்துள்ளார். 1904}இல் ஜீவ சமாதி அடைந்தார்.
இதற்கு முன்பே இவர் தனக்கு வலப் பக்கத்தில் ஷீரடி சாயி பாபா கோயில் அமைக்க வேண்டும் என்றும், இடப்பக்கத்தில் பிற்காலத்தில் தொழிற்பேட்டை அமையும் என்றும் கூறியுள்ளார்.
அவர் ஜீவ சமாதியான இடத்தில் 1918}இல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 1946}இல் ஜீவசமாதி விரிவாக்கம் செய்யப்பட்டதோடு, பக்கத்தில் மூலவர் இல்லாமல் கோயில் எழுப்பப்பட்டது. 1948}இல் லோகநாத முதலியாரிடம் வந்த முகம் தெரியாத பக்தர், கோயிலில் வைக்கும்படி துணியால் மூடிய சிலை ஒன்றை அளித்துவிட்டு மறைந்துள்ளார். துணியை விலக்கியபோது, அந்தச் சிலை ஷீரடி சாயிபாபா சிலையாக இருந்துள்ளது.
ஷீரடிக்கு வெளியே முதல் முதலில் ஒரு முழு உருவச் சிலை கொண்ட சாயிபாபா கோயில் கிண்டியில்தான் அமைக்கப்பட்டது . இந்தச் சிலை 1949}இல் புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய்பாபாவால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. புட்டபர்த்தி சாயி பாபாவும் பல முறை இங்கு வந்து தங்கி, பூஜைகள் நடத்தியுள்ளதோடு, கிண்டி கோயில் அறக்கட்டளையிலும் அறங்காவலராக மறையும்வரை இருந்துள்ளார்.
இரவில் சத்தியானந்த சித்தரும், ஷீரடி சாயி பாபாவும் நேரில் சந்தித்துப் பேசுவது போன்ற குரல்களைப் பலமுறை கேட்டுள்ளதாக லோகநாத முதலியாரின் குடும்பத்தினர் கூறுகின்றனர். வியாழக்கிழமைகள், பௌர்ணமி நாள்களில் இங்கு விசேஷம்.
குழந்தைப்பேறு கிட்ட, திருமணத் தடை விலக, பிரச்னைகளில் சிக்கியோர் கஷ்டங்கள் தீர, நோய்வாய்ப்பட்டவர்கள் குணமாக எனப் பல்வேறு கோரிக்கைகளுக்காக பலரும் இங்கு வந்து வழிபட்டு நலம் பெறுகின்றனர்.
சென்னை கிண்டி பேருந்து நிறுத்தம், மெட்ரோ ரயில் நிலையத்துக்கு எதிரே உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலின் உள்புறம் இந்த ஜீவசமாதி அமைந்துள்ளது.
- தி. நந்தகுமார்