நான் தற்சமயம் தனியார் துறையில் பணியாற்றுகிறேன். அரசு வேலைக்கு தீவிரமாக முயற்சி செய்து வருகிறேன். எப்பொழுது அரசு வேலை கிடைக்கும்?
சரவணன், சிவகங்கை.
உங்களுக்கு கும்ப லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். ஆறாம் வீட்டிற்கதிபதியான சந்திர பகவான் இரண்டாம் வீட்டில் புத பகவானின் சாரத்தில் (ரேவதி நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார். பொதுவாக கும்ப லக்னத்தில் பிறந்தவர்கள் ஆரம்பத்தில் கஷ்டப்பட்டாலும் பிற்காலத்தில் அதிகப் புகழ் பெறுகின்றனர். இந்தப் புகழை அடைய அரிய பெரிய தியாகங்களைச் செய்ய வேண்டியுள்ளது.
இவர்கள் பிறந்தவுடன் தந்தைக்கு நிறைய செல்வம் ஏற்படும் என்றும், அதில் சரிபாதி அழிந்துவிடும் என்றும் கூறுவார்கள். அசையாப் பொருள்களான வீடு, நிலபுலன்கள் மனைவியின் பெயரில் இருப்பது நல்லது.
வியாபாரம், தொழில் வேண்டுமானால் சொந்தப் பெயரில் நடத்தலாம்.
லக்னம், விரயாதிபதியான சனி பகவான் விரய ஸ்தானத்திலேயே செவ்வாய் பகவானின் சாரத்தில் (அவிட்டம் நட்சத்திரம்) ஆட்சி பெற்று நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். சனி பகவான் வலுத்திருப்பதால் தீர்க்காயுள் உண்டு.
ஐந்தாம் வீட்டிற்கும், எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் ஒன்பதாம் வீட்டில் குரு பகவானின் சாரத்தில் (விசாகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். கணிதத்தில் வல்லவராகவும், காமர்ஸ் படிப்பில் தேர்ச்சியும் உண்டாகும். நான்காம் வீட்டிற்கும், ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் எட்டாம் வீட்டில் சந்திர பகவானின் சாரத்தில் (அஸ்த நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார்.
கன்னி ராசிக்கு அதிபதியான புத பகவானுடன் பரிவர்த்தனை பெற்றிருப்பதால் சுக்கிர பகவானுக்கு நீச்சபங்க ராஜயோகமும், பரிவர்த்தன ராஜயோகமும் உண்டாகிறது. இரண்டாம் வீட்டிற்கும், பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் பகவானின் சாரத்தில் (சித்திரை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார்.
தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் குரு பகவானின் சாரத்தில் (விசாக நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். குரு பகவான் செவ்வாய் பகவானின் சாரத்திலும், செவ்வாய் பகவான் குரு பகவானின் சாரத்திலும் பரிவர்த்தனை பெற்றிருப்பதற்கு "சார பரிவர்த்தனை' அல்லது "சூட்சும பரிவர்த்தனை' என்று பெயர்.
இதனால் குருமங்கள யோகம் உண்டாவதோடு அவர்களுக்கு உண்டான ஆதிபத்யங்களும் (2 & 3, 2 & 10, 3 & 11, 10 &11) பலம் பெற்றுவிடும்.
ஏழாம் வீட்டிற்கு அதிபதியான சூரியபகவான் ஒன்பதாம் வீட்டில் ராகு பகவானின் சாரத்தில் (சுவாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார். ஒரு கிரகத்திற்கு நீச்சபங்க ராஜயோகம் ஏற்பட்டால் மற்ற அனைத்து நீச்ச கிரகங்களும் நீசபங்க ராஜயோகம் ஏற்பட்டுவிடும் என்பது ஜோதிட விதி.
கேது பகவான் நான்காம் வீட்டில் சூரிய பகவானின் சாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். ராகு பகவான் பத்தாம் வீட்டில் சனி பகவானின் சாரத்தில் (அனுஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். நீச்சபங்க ராஜயோகம், விபரீத ராஜ யோகம், குரு மங்கள யோகம், புத ஆதித்ய யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உண்டாகின்றன.
அரசு கிரகங்கள் சிறப்பான வலிமை பெற்றுள்ளதால் உங்களுக்கு அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் இன்னும் ஓராண்டுக்குள் வேலை கிடைக்கும். தற்சமயம் சுக்கிர பகவானின் தசை நடப்பதும் சிறப்பானதாகும். தொடர்ந்து பலம் பெற்ற தசைகள் நடப்பதால் எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.