உண்பது....  உடலில் சேர!

இந்த ஏழு தாதுக்களின் நெருப்பானது, வயிற்றின் உள்ளே நீர்க்கசிவின் இடையே உள்ள ஜாடராக்னி
உண்பது....  உடலில் சேர!
Updated on
2 min read


எனக்கு Aplastic Anemia நோய் உள்ளது. அதாவது, எலும்பு மஜ்ஜை சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதை நிறுத்திவிட்டது. எனவே மாதம் ஒரு முறை இரத்தம் செலுத்த வேண்டியுள்ளது. இதற்கு ஆயுர்வேத மருந்து உள்ளதா?


-P.கதிர்வேல்,
பழையபாளையம், நாமக்கல்.

உண்ட உணவின் சாராம்சமான பகுதியானது உடலில் உட்புறத் தாதுக்களில் பரவியுள்ள நெருப்புகளில் சரி வர பக்குவமாகாமல், நீர்த்த நிலையிலேயே உடலிலிருந்து வெளியேறத் தொடங்கினால், நீங்கள் குறிப்பிடும் இந்த உபாதை தோன்றக் கூடும். உணவினுடய செரிமானத்தின் மூலம் உண்டாகும் அன்னச்சத்தானது, அந்தந்த உடற்பகுதியாக மாற்றுவதை திறம்படச் செய்யும் இந்த வகை நெருப்புகள், உங்களுக்கு மந்தமான நிலையில் செயல்படுவதாகவே தோன்றுகிறது.

உடலின் மூலப்பொருள் தாது எனப்படும்.
1)ரஸம்-அன்னத்தின்ஸுரம்
2) ரக்தம்
3)மாம்ஸம்-தசையாக மாறக்கூடியது
4)மேதஸ்-கொழுப்பு
5)அஸ்தி-எலும்பாக உருவமெடுப்பது
6)மஜ்ஜா-எலும்பினுள் உள்ள சாரப்பொருள்
7)சுக்கிரம்-ஆண் பெண் இருபாலரின் உடலில் உள்ள இனப்பெருக்கச் சத்து.

இவை ஏழும் தாதுக்கள். இந்த ஏழு தாதுக்களின் நெருப்பானது, வயிற்றின் உள்ளே நீர்க்கசிவின் இடையே உள்ள ஜாடராக்னி எனும் பசித்தீயின் செயல்பாடுகளைக் கொண்டே, அவற்றில்
ஏற்றமும் இறக்கமும் காணும்.

கொழுந்து விட்டெறியும் நிலையில், ஜாடராக்னியும், தாதுக்களில் பரவியுள்ள நெருப்பும் தான் பற்றிய - தன்னைத் தாங்குகிற பொருளையே உண்டுவிடக்கூடும். அவற்றின் பலமற்ற நிலையில் பெரிய விறகை அதாவது எளிதில் செரிக்காத உணவை அதன் மேல் போட, அவை அணைந்துவிடும். உணவே தராமலிருந்தாலும் அணைந்துவிடும். அதனால் நீங்கள் மாதம் ஒரு முறை இரத்தம் செலுத்திக் கொள்வதால், மஜ்ஜையை போஷாக்குடன் வளர்க்கும். அதிலுள்ள நெருப்பானது வளருமா என்பது கேள்விக்குறியாகிவிடுகிறது. இதற்கு மாற்று யோசனை தேவைப்படுகிறது.

உட்செல்லும் உணவை உடலுக்கேற்றதாக மாற்றி உடலின் பகுதியாக அமைப்பதே ஜீரணசக்தி. உணவை அன்னச்சத்தாக மாற்றுவதுடன் நிற்காமல் அதனை ரத்தமாக, தசையாக, எலும்பு மஜ்ஜையாக என்று உடலிலுள்ள ஒவ்வொரு பகுதியாக மாற்றும் சக்தி இது. வெளிப்பொருளான உணவை - உடலாக மாற்றும் திறமை இதற்கு உண்டு. முதலில் தங்களுடைய ஜீரண சக்தி மேம்படச்செய்யும் வகையில் உணவும் - மருந்தும் - செயல்களும் அமைந்தால், இப்பிரச்னைக்கான தீர்வானது தொடங்கப் பெறலாம்.

உணவுப் பொருள்களில் இருவகை உண்டு. சில எளிதில் ஜீரணமாகும். நெருப்பிற்குச் சிராய், சத்தை, ஓலை போன்றவை இவை. பழைய அரிசி, கொள்ளு, பொரி, கசப்பு மற்றும் துவர்ப்புச்சுவை இதனுள் அடங்கும். நெல்பொரி 300 கிராம், சுக்கு, தனியா, திப்பிலி வகைக்கு 5 கிராம் சேர்த்து 1 ணீ லிட்டர் தண்ணீரில் வேக வைத்து 900 மிலி ஆக வெந்து குறைந்ததும் வடிகட்டி, சிறிது இந்துப்பு கலந்து காலை உணவாக, மூன்று வாரங்கள் வெதுவெதுப்பாகச் சாப்பிட, உங்களுடைய ஜீரணசக்தியானது கூடிவிடும். மதியம் மிளகு, சீரகம், பூண்டு சேர்த்த ரஸம் தயாரித்து சூடான புழுங்கலரிசி சாதம், கருவேப்பிலைத் துவையல், நன்கு வெந்த கறிகாய் கூட்டு, நெல்லிக்காய் தயிர்ப்பச்சடி, தயிரைத் தவிர்த்து மோர் அன்னம், நார்த்தங்காய் வற்றல் என்ற வகையில் அமைத்துக் கொள்ளவும். இரவில் சுத்தமான கோதுமை மாவினால் தயாரித்த சுக்கா ரொட்டி, பச்சைப்பயறு சின்ன வெங்காயம் சேர்த்து வேக வைத்த கூட்டு சாப்பிடுதல் நலம். இரவில் படுக்கும் முன் சீரகம் போட்டுக் காய்ச்சிய வெந்நீர் அருந்தவும். இவற்றின் மூலம் ஜீரண சக்தி கூடும்.

தாடிமாதி கிருதம் எனும் ஆயுர்வேத நெய் மருந்தை உருக்கி, சுமார் 15 மி.லி. காலை, மாலை வெறும் வயிற்றில் இருபத்தியோரு நாட்கள் வரை சாப்பிட்டு,

அதன் பிறகு கருந்திராட்சை ஊறிய தண்ணீரை, கசக்கிப் பிழிந்து வடிகட்டி, காலையில் குடித்து நீர்பேதியாகச் செய்யும் ஆயுர்வேத சிகிச்சை முறை, மருத்துவர் ஆலோசனைப்படி செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அதன் பிறகு வாசாகுடூச்யாதி கஷாயம், நவாயஸமண்டூரம் மாத்திரை, திராஷாதி லேஹ்யம் என்று வரிசைக் கிரமமாக செய்யப்படும் சிகிச்சை முறைகளையும் நீங்கள் செய்து கொண்டால், இந்த உபாதைக்கான தீர்வு கிடைக்கக்கூடும்.

(தொடரும்)
பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை } 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com