'18-வது அட்சக்கோடு': நாம் தேடுவது அதைத்தான்! -வாஸந்தி

அசோகமித்ரனின் ’பதினெட்டாம் அட்சக்கோடு’ நிஜாம் ஆட்சியிலிருந்த ஹைதராபாத்தில் வசித்த தமிழ்க் குடும்பத்து மூத்த மகனின் அனுபவங்களைப் பற்றின கதை.
18-வது அட்சக்கோடு / வாஸந்தி
18-வது அட்சக்கோடு / வாஸந்தி

உங்களைக் கவர்ந்த புத்தகம் எது? உங்கள் வாழ்வின் திசையைத் திருப்பிய புத்தகம் எது? என்று அடிக்கடிப் பேட்டியாளர்கள் கேட்கிறார்கள். ஒரு புத்தகம் ஒருத்தரின் வாழ்வின் திசையைத் திருப்புமானால் வேறு புத்தகங்கள் படிக்கும் அவசியமே நேராது. ’மனிதன் சுந்தரமாகப் பிறந்தான். ஆனால் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கிறான்’ என்ற பிரெஞ்சுப் புரட்சியாளர் ரூஸோவின் வரிகளைப் படித்ததும் பிரெஞ்சுப் புரட்சி வெடித்தது என்பார்கள். புரட்சிக்கான காலம் கனிந்திருந்ததால் புரட்சி வெடித்தது. காலம் கனியப் பல வருஷத்து அனுபவமும் வாசிப்பும் தேவைப்பட்டிருக்க வேண்டும்.

என்னைப் பொருத்தவரை வாசிப்பு என்பது தொடர்ச்சியான மேம்படுத்தும், வளப்படுத்துமனுபவம். வாசிக்கத் தெரிந்த நாள்களிலிருந்து அது சுகானுபவத்தைத் தரும் அனுபவமாக இருந்திருக்கிறது. அது ஒரு ஆன்மிக அனுபவம் என்று இன்று புரிகிறது. ஆங்கில மொழி வழிக் கல்வி பயின்றதால் பள்ளியில் முதல் நாவல் புத்தக வாசிப்புப் பரிச்சயம் எனக்கு ஜேன் ஆஸ்டின், சார்லெட் ப்ராண்டே சகோதரிகள் ஆகியோரிலிருந்து ஆரம்பமானது. ’ப்ரைட் அண்ட் ப்ரெஜுடீஸ்’ முடிந்ததும் ஒரு வெறியுடன் ஜேன் ஆஸ்டினின் அத்தனைப் புத்தகங்களையும் வாசகசாலையிலிருந்து வாங்கி வாசித்தது நினைவுக்கு வருகிறது.  

அதேபோல டிக்கன்ஸ், ட்யூமா, விக்டர் ஹ்யூகோ என்று மாய்ந்து மாய்ந்து படித்த அதே வேகத்தோடு பள்ளிப் பருவத்தில் கல்கியையும், ஜெயகாந்தனையும் படித்து ரசித்ததுண்டு. கல்லூரி நாள்களில் ருசிகள் மாறின. ருஷ்ய எழுத்தாளர்கள் டால்ஸ்டாய், தாஸ்தயேவ்ஸ்கி, செக்காவ் என்று துவங்கி காமூ, தாமஸ்மான், காஃப்கா என்று விரிந்தபோது அதில் அமிழ்ந்து பித்தானது நேற்றுபோல் இருக்கிறது. டால்ஸ்டாயின் ‘போரும் சமாதானமும்’ படித்து அனுபவித்த பிரமிப்பை நான் என் மாமா ஒருவரிடம் வெளிப்படுத்தியபோது, ‘அந்த நாவலா? எனக்கு ரொம்ப போரடித்தது’ என்று அவர் சொன்னதும் எனக்கு அவரைப் பிடிக்காமலேயே போய்விட்டது!. ஒவ்வொரு பருவத்திலும் அந்தக் காலகட்டத்து வாசிப்பு தரும் தாக்கம் ஒரு மகத்தான அனுபவம். பின்னால் படிக்கும்போது அதே மாதிரியான தாக்கம் இருக்கும் என்று நிச்சயமில்லை. ஆனால் எல்லா பருவத்து வாசிப்பு அனுபவங்களும்தான் நமது ரசனையை வளர்க்க உதவுவது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்த அனுபவமும் என்னைச் சுற்றி நடக்கும் அரசியல் நிகழ்வுகளைப் பற்றின பிரக்ஞையும் இனவெறி, பெண்ணியம் பற்றிய சிந்தனைகளும், விழிப்புணர்வும் என்னை வேறு தளத்திற்கு இட்டுச் செல்ல, என் வாசிப்பின் விஸ்தீரணம் அகண்டது. அந்தப் புத்தகங்களையெல்லாம் பட்டியலிடுவது அர்த்தமற்றது. குறிப்பிடப்படவேண்டியது, தென்னாப்பிரிக்கக் கருப்பர்கள் நிறவெறியினால் படும்  துயரை விளக்கும் ஆலன்பேட்டனின் ’க்ரை தி பிலவட் கன்ட்ரி’  என்ற நாவல்.

கண்களில் நீரை வரவழைத்த, மனதை உலுக்கிய புத்தகம் அது. ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய மற்றொன்று காப்ரியல் கார்சியா மார்க்சீஸின் ‘ஒன் ஹண்ட்ரெட் இயர்ஸ் ஆஃப் ஸாலிட்டியூட்’. முன்பு ஜோன் ஆஸ்டினைத் தேடிப் படித்தது போல் மார்க்கீஸ் எழுதும் எல்லாப் புத்தகங்களையும் வாங்கிப் படிக்கும் வெறி எனக்கு அடங்கவில்லை. சில புத்தகங்கள் எத்தனை முறை படித்தாலும் மனதை உலுக்கும். நான் படித்த தமிழ் புத்தகங்களில் பல வருட இடைவெளிக்குப் பிறகு மறுமுறை வாசித்தபோதும் புதிய வீச்சோடு என்னை உலுக்கிய புத்தகம் அசோகமித்ரனின் ’பதினெட்டாம் அட்சக்கோடு’ நிஜாம் ஆட்சியிலிருந்த ஹைதராபாத்தில் வசித்த தமிழ்க் குடும்பத்து மூத்த மகனின் அனுபவங்களைப் பற்றின கதை.

இந்திய விடுதலைக்கு சற்று முன்பிருந்து சற்று பிந்தி வரையிலான காலகட்டம். ஒரு அசாதாரண காலகட்டத்தில் அரசியல் திருப்பங்களும், நிகழ்வுகளும் சாதாரண மனிதரின் வாழ்வை எப்படித் தாக்கி நண்பர்களையும் விரோதிகளாக்குகின்றன என்பதை இத்தனை அற்புதமாக வேறு எந்தத் தமிழ் நாவலிலும் சித்தரிக்கப்பட்டிருப்பதாக நான் அறியவில்லை. நிஜாம் அரசு இந்திய சுதந்திரத்துக்குப்பின் தனியாகப் பிரிவதற்குப் போர்க்குரல் எழுப்பியதுமே முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே சுவர் எழும்பித் துவேஷமாவதும், இந்துக்கள் பலவீன நிலைக்குத் தள்ளப்படுவதும் ரஜாக்கர்களின் போர் தோல்வியடைந்து பின்வங்கியதுமே முஸ்லீம்கள் பலவீனமடைந்து பீதி கொள்வதும் ஜாலமே இல்லாத எளிய வார்த்தைகளில் படிப்பவரை உலுக்கும்படியாகப் பதிவாகியிருந்ததும் நாவலின் தனிச்சிறப்பு. யார் ஜெயித்தார்கள், யார் தோற்றார்கள் என்கிற கணக்கு இல்லை இது. இப்படிப்பட்ட தருணங்களில் மானுடம் தோற்றது என்பதுதான் செய்தி. பிரபல ஆங்கில நாவலாசிரியர் டி.எச்.லாரன்ஸ் சொல்கிறார். ‘ஒவ்வொரு மகத்தான நாவலிலும் கதாநயகன் என்பது எதைக்குறிக்கும்? எந்தக் கதை மாந்தரையும் அல்ல. எல்லாவற்றிற்கும் பின்னால் ஒளிரும் பெயர் சொல்லமுடியாத தீக்கனலைத்தான் குறிக்கிறது.’ அந்தக் கனல் வாசித்த பின் நமக்குள் ஒளியேற்றுவது. புத்தகங்களில் நாம் தேடுவது அதைத்தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com