

தமிழகத்தில் மட்டுமல்லாது, தேசிய அளவிலும், ஏன் உலக அளவிலும் தற்போது பெண் உரிமைகள் குறித்து அரசியல் முதல் அனைத்துத் துறைகளிலும் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் பெண்ணுரிமை குறித்தும், தற்கால பெண்கள் பாதுகாப்பு குறித்தும் அலசி ஆராயும் வகையில் இந்நூல் எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆண்களால் பெண்கள் வேலைக்கானவராக பார்க்கப்படுவது குறித்தும், குழந்தைப் பருவத்திலேயே சிறுமியருக்குத் திருமணம் செய்யும் முறை இன்னும் நம் நாட்டில் நிகழ்வது குறித்தும் நூலாசிரியர் கவலையோடு பதிவு செய்துள்ளார்.
தனது வீட்டிலிருந்தே பெண் உரிமை குறித்து பேசத் தொடங்கும் நூலாசிரியர், பெண்களின் பணிச் சூழல்கள் உள்ளிட்ட 40 தலைப்புகளில் ஆய்வு நோக்கில் கருத்துகளைப் பதிவு செய்திருப்பது சிறப்பு. 512 பக்கங்கள் கொண்ட இந்நூலின் விலை ரூ.520ஆகும்.
பெண் அன்றும் இன்றும், நர்மதா தேவி, பாரதி புத்தகாலயம்.
தமிழரின் பழைமையான வாழ்வியலைக் கற்பிக்கும் நூல்களில் திருமூலரின் திருமந்திரத்துக்கு தனிச் சிறப்பு உண்டு. இயற்கையில் மனிதனும் ஒரு விலங்காகப் பார்க்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால், மனிதரை மற்ற விலங்கிலிருந்து வேறுபடுத்தவும் எத்தனையோ குணங்களைக் குறிப்பிடுகின்றனர். இந்தச் சூழலில் திருமூலரோ மனிதனின் மானுட நேயமே மனிதனை தனிச்சிறப்பான உயிரினமாகக் காட்டுகிறது என அறுதியிட்டுக் கூறுகிறார். அதனடிப்படையில்தான் இந்த நூலும் திருமூலரியத்தை வழிமொழிந்துள்ளதாகக் கூறலாம். மனித நேயத்தை வலியுறுத்தும் திருமூலர் இறை நம்பிக்கையைச் சிதைக்காமல் அதற்கு ஊக்கமூட்டும் வகையில் புதிய பாதையைக் காட்டுகிறார் என்கிறது இந்த நூல்.
"உள்ளமே கோயில், உடலே ஆலயம்' என வாழ்ந்து காட்டிய திருமூலரின் வாழ்க்கை, அவரது பயிற்சி வழிமுறைகளான மூச்சுப்பயிற்சி உள்ளிட்ட 5 வகையான உடல்நலப் பயிற்சிகளை விரிவாக விளக்கியிருக்கிறார் நூலாசிரியர்.
194 பக்கங்கள் அடங்கிய இந்நூலின் விலை ரூ.230.
பழங்குடிகள் குறித்து அண்மைக்காலமாக ஏராளமான நூல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. கால மாற்றத்தில் தங்களது கலாசார பண்பாட்டைத் தொலைக்காமலும், கால ஓட்டத்தில் மற்றவர்களுக்கு இணையான ஓட்டத்தைத் தொடங்காமலும் இருக்கும் இனக் குழுக்களில், நரிக்குறவர் இடம் பெற்றிருப்பது எதார்த்த உண்மை.
பெரிய, சிறிய மற்றும் கிராமந்தோறும் நடைபெறும் கோயில் திருவிழாக்கள் முதல் அனைத்து மக்கள் கூடும் இடங்களிலும் தங்களது பாரம்பரிய பாசி, ஊசி மணிகளை விற்பதை வழக்கமாகக் கொண்டுள்ள நரிக்குறவர்களின் அகம், புறத்தை விளக்கும் தனித்தன்மை நூல் இன்னும் வரவில்லை என்ற ஏக்கத்தை இந்நூல் போக்கும் என நம்பலாம்.
சிறுகதைகளாகவும், அவற்றிற்கிடையேயான தொடர்பால் நாவலாகவும், எதார்த்தத்தைப் பேசுவதால் கள நிலவரத்தை விளக்கும் ஆய்வு நோக்குக் கட்டுரைகளாகவும் இந்த நாவல் திகழ்வதாக அதன் அணிந்துரையில் குறிப்பிட்டிருப்பதை உண்மை என வழிமொழியும் வகையில் நூலின் போக்கு உள்ளது. இந்நூல் 136 பக்கங்களுடன், ரூ.200 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உதிரிகள் (தமிழக அரசின் விருது பெற்ற நாவல்), சாந்தா கோவிந்தன், யாப்பு வெளியீடு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.