விருதுகளுக்கு அப்பால்
விருதுகளுக்கு அப்பால் - கிருங்கை சேதுபதி; பக்.192;ரூ.200; முல்லை பதிப்பகம், சென்னை-40; ✆ 98403 58301.
தினமணியில் வெளியான 28 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். தமிழிலக்கியங்களில் அதிலும் பெருமளவில் திருக்குறளில் சொல்லப்பட்ட கருத்துகளை நூலாசிரியர் தன் பார்வையில் வெளிப்படுத்தியிருக்கிறார். ஒவ்வொன்றையும் வேறுபட்ட கண்ணோட்டத்தில் நோக்கி, நுட்பமாக ஆராய்ந்து, அதில் காணக் கிடைத்த அரிய உண்மைகளை வெளிப்படுத்தியிருக்கிறார். எடுத்துக்காட்டாக, குழலினிது யாழினிது என்று தொடங்கும் குரலில் வரும் மழலைச் சொல்லை குழந்தைகளின் பேச்சு என்கிற அளவில் மட்டுமே எல்லாரும் புரிந்து கொண்டிருப்போம். குழலும் யாழும் ஆதிக்கருவிகள். 'எடுத்தவுடன் இக்கருவிகள் பாடலைத் தருவதில்லை. சற்றே சரிசெய்யும் வரை, அவை தன் போக்கில்தான் ஒலியெழுப்பும். மழலை மொழியின் மாண்பும் அத்தகையதுதான்' என்று அந்தக் குறளை நாம் புரிந்து கொண்டிருக்கமாட்டோம். கல்லுதல் என்றால் தோண்டுதல். அதனை அடியாகக் கொண்டுதான் கல்வி பிறந்தது. எனவே தொட்டனைத்தூறும் மணற்கேணி போல கற்றனைத்தூறும் அறிவு என்று திருவள்ளுவர் சொல்லியிருப்பது கற்க கற்கவே அறிவு பெருகும் என்பதை விளக்குகிறது என்கிறார் நூலாசிரியர்.
இப்போது ஆண்-பெண் உறவு, திருமணம் எவ்வாறு மாறிவிட்டது, வாழ்வின் சிக்கல்களைத் தீர்ப்பதில் இன்றைய இளம்தலைமுறையினர் எவ்வாறு குறைந்த திறனுடையவர்களாக இருக்கிறார்கள் என்பன போன்ற பல விஷயங்கள் விளக்கப்பட்டுள்ளன.
பண்பாட்டு விழுமியங்களின் வேர்களுக்கு நீர் பாய்ச்சும் பணியை பண்டிகைகள் செய்வதாக ஒரு கட்டுரை சொல்கிறது. புத்தகங்களை வாசிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் கட்டுரை, வள்ளலாரின் மாண்பை விளக்கும் கட்டுரை, இலவசமாகக் கிடைக்கும் காற்றும் நீரும் நாளை இலவசமாகக் கிடைக்காது என்று எச்சரிக்கும் கட்டுரை, மதுவை மட்டுமல்ல, தீயவை அனைத்தையும் வெறுப்பதைவிட அவற்றைத் துறப்பது நன்று எனக் கூறும் கட்டுரை என சமகாலப் பிரச்னைகளுக்கான சிறப்பான தீர்வுகள் இந்நூல் முழுக்கச் சொல்லப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.