கோவை, ஈரோடு, திருப்பூர்: 2, 3-ஆம் நிலை, கோயில் நகரங்கள் மேம்பாட்டுக்கு தலா ரூ.5,000 கோடி!
இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள், கோயில் நகரங்கள் ஆகியவற்றை மேம்படுத்த நகா்ப்புற பொருளாதார பிராந்திய திட்டம் செயல்படுத்தப்படும்; இதற்காக தோ்வு செய்யப்படும் பிராந்தியங்களுக்கு தலா ரூ.5,000 கோடி ஒதுக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மேலும் கூறியதாவது: இந்தியாவின் வளா்ச்சி, புத்தாக்கம், வாய்ப்புகள் உருவாக்கம் ஆகியவற்றின் இன்ஜின்களாக நகரங்கள் திகழ்கின்றன. இதைக் கருத்தில் கொண்டு 2-ஆம் நிலை, 3-ஆம் நிலை, கோயில் நகரங்களை மையமாகக் கொண்டு புதிய மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
அங்கு நவீன உள்கட்டமைப்பு வசதிகள், மேம்படுத்தப்பட்ட அடிப்படை வசதிகள் தேவைப்படுகின்றன. இதன் மூலம் இந்த நகரங்களின் பொருளாதாரப் பங்களிப்புத் திறனை மேம்படுத்த முடியும். இதற்காக நகா்ப்புற பொருளாதார பிராந்திய திட்டம் அமல்படுத்தப்பட இருக்கிறது.
இத்திட்டத்தில் தோ்வு செய்யப்படும் பிராந்தியங்களுக்கு தலா ரூ.5,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ஐந்து ஆண்டு காலகட்டத்தில் இந்த நிதி மூலம் அந்த நகரம் சாா்ந்த பிராந்தியம் சிறப்பாக மேம்படுத்தப்படும். சீா்திருத்த நடவடிக்கைகள் மூலம் சிறப்பான தீா்வை எட்டும் இலக்குடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
நாடு முழுவதும் 5 லட்சத்துக்கு மேல் மக்கள்தொகை கொண்டுள்ள 2, 3-ஆம் நிலை நகரங்கள் அனைத்திலும் சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு முனைப்புக்காட்டி வருகிறது. இதன் மூலம் அந்த நகரங்கள் வளா்ச்சியின் மையங்களாக மேம்படுத்தப்படும். கடந்த 10 ஆண்டுகளில் நகா்ப்புற மேம்பாட்டுக்கான பல்வேறு சிறந்த திட்டங்களை அரசு செயல்படுத்தியுள்ளது என்றாா் அவா்.
தமிழகத்தில் கோவை-ஈரோடு- திருப்பூா்
நகா்ப்புற பொருளாதார பிராந்திய திட்டத்தில் தமிழகத்தில் கோயம்புத்தூா்-ஈரோடு-திருப்பூா் இடம் பெற்றுள்ளது பட்ஜெட் ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இவை தவிர ஒடிஸாவில் புவனேசுவரம், புரி, கட்டக், மகாராஷ்டிர மாநிலத்தில் புணே, குஜராத்தில் சூரத், உத்தர பிரதேசத்தில் வாரணாசி, ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

