சென்செக்ஸ் 1,069 புள்ளிகள் வீழ்ச்சி

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை, பங்குச் சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 1,069 புள்ளிகளை இழந்தது. 

மும்பை: இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை, பங்குச் சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 1,069 புள்ளிகளை இழந்தது. 

நாடு தழுவிய 4.0 பொதுமுடக்கம் மே 31-ஆம் தேதி வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் பங்குச் சந்தையில் கடுமையாக எதிரொலித்தது. மேலும், சிறப்புப் பொருளாதாரத் திட்டங்கள் குறித்த தொடர் அறிவிப்புகள் முதலீட்டாளர்களுக்கு உற்சாகம் அளிக்கவில்லை. இது தவிர இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கிவிட்டது. இது போன்ற பாதகமான தகவல்கள் சந்தையில் கரடியின் ஆதிக்கத்துக்கு வழி வகுத்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. 

பங்குச் சந்தையில் பார்மா, ஐடி பங்குகள் மட்டுமே ஓரளவு தாக்குப் பிடித்தன. மற்ற துறைப் பங்குகள் கொத்துக் கொத்தாக விற்பனைக்கு வந்தன. குறிப்பாக வங்கி, நிதி நிறுவனங்கள்,  ஆட்டோ பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன. இதன் காரணமாக தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரைவேட் பேங்க், பேங்க், பைனான்சியல் சர்வீசஸ்,  மீடியா, ஆட்டோ,  பிஎஸ்யு பேங்க், நிஃப்டி ரியால்ட்டி குறியீடுகள்  5 முதல் 7 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. தேசிய பங்குச் சந்தையில் 273 பங்குகள் மட்டுமே ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன. 1,326  பங்குகள் சரிவைச் சந்தித்தன. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 3.75 சதவீதம், பிஎஸ்இ ஸ்மால் கேப் குறியீடு 2.9 சதவீதம் வீழ்ச்சி அடைந்தன.

சென்செக்ஸ் காலையில் 250 புள்ளிகள் கூடுதலுடன் 31,248-இல் தொடங்கி அதற்கு மேல் உயரவில்லை. பங்குகள் விற்பனை அதிகரித்ததால் சென்செக்ஸ் 29,968.45 வரை கீழே சென்றது. இறுதியில் 1,068.75 புள்ளிகள் (3.44 சதவீதம்) குறைந்து 30,028.98-இல் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 313.60 புள்ளிகள் (3.43 சதவீதம்) குறைந்து 8,823.25 -இல் நிலைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com