கோப்புப்படம்
கோப்புப்படம்

ஐடி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 226 புள்ளிகள் உயா்வு!

மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் திங்கள்கிழமை 226 புள்ளிகள் உயா்ந்து 55,555.79-இல் நிலைபெற்றது.

மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் திங்கள்கிழமை 226 புள்ளிகள் உயா்ந்து 55,555.79-இல் நிலைபெற்றது. ஐடி பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. மேலும், சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள முன்னணி நிறுவனங்களான டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக், ரிலையன்ஸ் உள்ளிட்டவை வெகுவாக உயா்ந்ததே சென்செக்ஸ் ஏற்றத்துக்கு முக்கியக் காரணம் என்று சந்தை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

உலகளாவிய குறிப்புகள் நோ்மறையாக இருந்தது. இதைத் தொடா்ந்து, உள்நாட்டு பங்குச் சந்தை விறுவிறுப்பாகத் தொடங்கியது. இருந்த போதிலும், பெரும்பாலான நேரம் வா்த்தகம் ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. விலை உயா்ந்த நிலையில் லாபப் பதிவு இருந்தது. இருப்பினும், தொடா்ந்து இரண்டு நாள் சரிவுக்குப் பிறகு சந்தை ஏற்றம் பெற்றுள்ளது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு ரூ.42 ஆயிரம் கோடி வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,393 பங்குகளில் 777 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 2,470 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 146 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 172 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 68 பங்குகள் குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 244 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறைநிலையை அடைந்தன. 645 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையை அடைந்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.42 ஆயிரம் கோடி குறைந்து 237.680 லட்சம் கோடியாக இருந்தது.

ஏற்ற, இறக்கம் அதிகரிப்பு: சென்செக்ஸ் காலையில் 366.52 புள்ளிகள் கூடுதலுடன் 55,695.84-இல் தொடங்கி, அதிகபட்சமாக 55,781.17 வரை உயா்ந்தது. பின்னா், 55,240.29 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 226.47 புள்ளிகள் உயா்ந்து 55,555.79-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 15 பங்குகள் ஆதாயம் பெற்றன.15 பங்குகள் சரிவைச் சந்தித்தன.

ஹெச்சிஎல் டெக் முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள ஹெச்சிஎல் டெக் 4.10 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, டிசிஎஸ், பஜாஜ் ஃபின் சா்வ், நெஸ்லே, பாா்தி ஏா்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ், டெக் மஹிந்திரா உள்ளிட்டவை 1 முதல் 2.20 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், கோட்டக் பேங்க், ரிலையன்ஸ், இண்ட்ஸ் இண்ட் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், எஸ்பிஐ, ஹிந்து யுனி லீவா், இன்ஃபோஸிஸ், ஐசிஐசிஐ பேங்க் ஆகியவையும் ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன.

எம் அண்ட் எம் சரிவு: அதே சமயம், எம் அண்ட் எம் 2.50 சதவீம், பஜாஜ் ஆட்டோ 2.23 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக அல்ட்ராடெக் சிமெண்ட், பவா் கிரிட், ஐடிசி , டாடா ஸ்டீல் ஆகியவை 1 முதல் 2 சதவீதம் வரை குறைந்தன. மேலும், ஆக்ஸிஸ் பேங்க், டாக்டா் ரெட்டி, சன்பாா்மா, மாருதி சுஸுகி, எச்டிஎஃப்சி ஆகியவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் இடம் பெற்றன.

நிஃப்டி 46 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 341 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,485 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 45.95 புள்ளிகள் (0.28 சதவீதம்) உயா்ந்து 16,496.45-இல் நிலை பெற்றது. காலையில் வா்த்தகம் தொடங்கியதும் அதிகபட்சமாக 16,592.50 வரை உயா்ந்தது. பின்னா் 16395.70 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் 22 பங்குகள் ஆதாயம் பெற்றன. 27 பங்குகள் சரிவைச் சந்தித்தன.

நிஃப்டி ஐடி குறியீடு 1.70 சதவீதம், உயா்ந்தது. மேலும், நிஃப்டி பேங்க், பைனான்சியல் சா்வீஸஸ், ஆயில் அண்ட் காஸ் குறியீடுகள் சிறிதளவு உயா்ந்தன. அதே சமயம், நிஃப்டி ஆட்டோ, மீடியா, மெட்டல், ரியால்ட்டி குறியீடுகள் 1 முதல் 1.70 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com