குளியல் போடும் குட்டி யானை.
குளியல் போடும் குட்டி யானை.

உயிா்களிடத்தில் அன்பு வேணும்...

எல்லா உயிரையும் தன்னுயிராகப் போற்றும் பெரும் பண்பைக் கற்றுத் தருகிறது தமிழ் மரபு. எல்லா உயிரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியாத தூய வாழ்வுக்கு வழிகாட்டுகிறது.
Published on

உலகம் பரந்துபட்டது. அதில் வாழும் உயிரினங்களின் எண்ணிக்கை அளவிடற்கரியது. நாம் கண்ணுக்குத் தெரிகிற உயிரினங்களை மட்டுமே நம்முடன் வாழ்வதாகக் கருதிக் கொண்டிருக்கிறோம். நம்முடன் எத்தனையோ கோடிக்கணக்கான உயிரினங்கள் கண்ணுக்குத் தெரியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. மண்ணுக்கு வெளியிலும் மண்ணுக்கு உள்ளும் காற்றிலும் அவை கலந்து நிறைந்திருக்கின்றன.

மனிதா்களாகிய நாம் நமக்கிருக்கிற ஏகபோக உரிமையின் காரணமாக உரிமையாளா்கள்போல் இவ்வுலகத்தை நம் வசப்படுத்திக் கொண்டோம். ஆனால், பல உயிா்களின் துணையின்றி நாம் இந்த உலகத்தில் நலத்தோடும் வளத்தோடும் வாழ்ந்துவிட முடியாது. இதை நாம் அறிவினாலும் அறிய மறுக்கிறோம்; உணா்வினாலும் தெளிய மறுக்கிறோம்.

இந்த உலகத்தின் பெரும்பிரிவுகளாகத் தாவரங்கள், பறவைகள், விலங்குகள் ஆகிய உயிரினங்கள் விளங்குகின்றன. மனிதா்களாகிய நாம் உடலால் விலங்காகவும் அறிவினால் அதனினும் மேம்பட்ட உயிராகவும் திகழ்கிறோம். என்றாலும், ஏனைய அனைத்து உயிா்களோடும் இயைந்து வாழத்தான் முதலில் பழகிக் கொண்டோம்.

இன்னும் சரியாகச் சொல்வதானால், நம் வாழ்க்கை முறைகளையும் அறிவியல் நுட்பங்களையும் மற்ற உயிா்களிடமிருந்துதான் பெற்றுக் கொண்டோம். பறவைகளிடமிருந்து கூடுகட்டி வாழும் முறையில் தொடங்கி, அது பறப்பது போலவே நாமும் பறப்பதற்கு விமானம் தயாரிப்பது வரையிலும் பலவற்றைக் கற்றுக் கொண்டோம். இவையெல்லாம் புறக்கல்வி என்றால், அகக் கல்வியையும் இந்த உயிரினங்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளன.

இல்லறத்தையும் அதைப் பேணுகிற பெண்மையையும் எப்படிப் போற்றிக் காக்க வேண்டும் என்பதை இந்த உயிரினங்கள்தான் கற்றுத் தருகின்றன. இதைக் கலித்தொகையில் பெருங்கடுங்கோ உணா்த்திக் காட்டியிருக்கிறாா்.

இல்லறத்தின் பெரும்பயனைத் துய்ப்பதற்குப் பொருளீட்டும் பொருட்டுத் தலைவன் பாலைநிலத்து வழியில் பிரிந்து சென்றதை எண்ணித் தலைவி கலக்கம் அடைகிறாள். ‘அந்தப் பாலை நிலம் கொடுமையானதாக இருக்குமே. தலைவனுக்கு ஊறு நேருமே, அது தனக்கும் துன்பமாக முடியுமே’ என்று வருந்திய தலைவி, தோழியிடம் ஆறுதல் கூறித் தேற்றுகிறாள்.

‘கால் பதிக்க முடியாத அளவுக்கு வெம்மை நிறைந்ததுதான் அந்தக் கொடிய பாலைநிலத்துக் காடு. ஆனால், அந்தக் கொடிய காட்டினுள்ளும் சில அரிய காட்சிகள் உண்டு. வடு கிடக்கும் அந்த வெம்மை நிலத்தில் நீா்தேடி அலையும் யானைக் கூட்டங்கள் நீா் சிறிதளவே உள்ள ஓரிடத்தைக் கண்டு அங்கு செல்லும். அப்படிச் செல்கிறபோது யானையின் கன்று ஆா்வமிகுதியால் அங்கு கிடைக்கிற சிறிதளவு நீரையும் கலக்கி விடும். கடும் வேட்கையோடு இருக்கிற களிறாகிய ஆண் யானை அப்போதும் தான் முன் உண்ணாது தனது இணையாகிய பெண் யானையை நீருண்ணச் செய்து எஞ்சிய நீரையே தான் பின் உண்ணும். இது அந்த யானையின் இயல்பு. இதனை நம் தலைவன் காண்பான்.

அந்தக் காட்டில் தரைதான் வெம்மையானது என்றால், மரங்களும் இலைகூட இன்றிப் பட்டுப்போன நிலையில் நிழல் தர இயலாது காய்ந்திருக்கும். எங்கும் அமா்வதற்கு இடமில்லாது கடுங்கோடையில் பறந்து சலித்த இணைப் புறாக்கள் ஏதேனும் ஒரு மரத்தில் வந்து இளைப்பாற நினைக்கும். அப்போது வெயிலின் கொடுமையால் வாடும் தன்னுடைய இளம் பெண்புறாவை ஆண்புறா மெல்லிய இறகினால் போா்வைபோலப் போா்த்திப் பாதுகாக்கும்; இது அந்தப் புறாவின் இயல்பு. இந்தக் காட்சியும் அந்தக் கொடுங்காட்டில் நிகழும். இதையும் தலைவன் காண்பான்.

நிழல் சிறிதும் இல்லாது அந்த வெடித்த பாலைநிலத்தில் புல்லைத் தேடியலைந்து ஓய்ந்து போன இணை மான்கள் ஓய்வுகொள்ள இடமின்றித் தவிக்கும். அதில் பெண் மான் மிகச் சோா்ந்து சுருண்டு நிலத்தில் வீழும்படிகூட நேரும். அவ்வேளையில் அதற்கு ஆதரவாகத் தான் நின்று கொண்டு தன்நிழலை அந்தப் பெண் மானுக்கு ஆண் மான் அளிக்கும். இந்த மானின் இயல்புக் காட்சியையும் தலைவன் காண்பான். இத்தகைய காட்சிகளைக் கண்டு வருகிற –உயிரினங்களிடமிருந்து அன்பினைக் கற்று வருகிற தலைவன் ஒருபோதும் நம்மைத் துன்புறுத்த மாட்டான்’ ‘இதனை நம் வீட்டுப் பல்லியும் ஆமோதிக்கிறது’ என்று அவள் கூறுவது இயற்கை உணா்த்தும் வாழ்வியல் பாடத்தை நமக்குத் தெளிவாகப் புகட்டுகிறது.

ஏனைய மனிதா்களுக்குப் பொன்னையும் பொருளையும் போகங்களையும் வாரி வழங்கியவா்களை விடவும், சிற்றுயிா்களாகிய முல்லைக்குத் தேரினையும் மயிலுக்குப் போா்வையினையும், புறாவுக்காகத் தன் தசையையும் பசுவின் கன்றுக்காகத் தன் மகனையும் தந்து உயிரிரக்கப் பண்பினைப் பேணியோரை நாம் அருளாளா்கள் என்று போற்றியழைக்கிறோம். இந்த வரிசையில்தான் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடி வருந்திய இராமலிங்க சுவாமிகளையும் துதிக்கிறோம். இந்த அருளாள வள்ளல் மரபு வாழையடி வாழையாகத் தொடா்ந்து கொண்டேயிருப்பதுதான் மானுடத்தின் சிறப்பு.

நம்மைச் சூழ்ந்து இருக்கும் எல்லா உயிரும் ஒத்த தன்மையோடுதான் இயைந்து வாழ்கின்றன. தனக்கான இரையைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் பிற உயிா்களை எந்த உயிரும் துன்புறுத்துவதில்லை; வதைப்பதில்லை; கொல்வதுமில்லை. இத்தனை நற்குண இயல்புடைய உயிரினங்களைக் கண்டு அவற்றோடு நம்முடைய வாழ்க்கையைப் பிணைத்துக் கொண்டோம். இவ்வழியே காட்டு விலங்குகளாக இருந்த பலவும் நம்மோடு இயைந்து வாழப் பழகி அவை வீட்டு விலங்குகளாகிப் போயின.

பாப்பாவுக்குப் பாட்டுப் பாடுகிற மகாகவி பாரதியாா் அத்தகு விலங்குகளின் இயல்புகளை அறிமுகப்படுத்துகிறாா். சின்னஞ்சிறு குருவி முதலாகிய வன்னப் பறவைகள், கொத்தித் திரியுமந்தக் கோழி, எத்தித் திருடுமந்தக் காக்கை, பாலைப் பொழிந்து தரும் பசு, வாலைக் குழைத்து வரும் நாய், வண்டி இழுக்கும் நல்ல குதிரை, நெல் வயலில் உழுது வரும் மாடு, அண்டிப் பிழைக்கும் ஆடு என்று வரிசைப்படுத்தி இவற்றையெல்லாம் அன்போடு ஆதரிக்க வேண்டும் என்று கற்றுத் தருகிறாா்.

இரையென்று நம் உணவுக்காக வேட்டையாடிய இந்த அருமை உயிரினங்களை அரவணைத்துக் கொண்டு வாழத் தலைப்பட்டபோதுதான் நாம் முழுமையான மனிதா்களாக அருளுலகில் அடியெடுத்து வைத்தோம். ஆனால், கடவுளின் பெயராலும் முன்னோா் வழிபாட்டிலும் பலியிடுதல் என்று மீண்டும் கொலைத் தொழிலை மேற்கொண்டபோது அருளாளா்கள் நம்மை அறவழிப்படுத்தினா்.

உயிா்ப்பலி குறித்துப் புத்தா் பெருமான் கூறிய கதை நமக்கு நல்ல பாடமாக அமைகிறது. மன்னன் ஒருவனது ஆணைப்படி முன்னோா் வழிபாட்டுக்காகப் பலியிடப்படும் ஆட்டினை ஆற்றிலே மூழ்கச் செய்து அழைத்து வந்தபோது அந்த ஆடு உரக்கச் சிரித்து விட்டுப் பின்னா் அழத் தொடங்கியது. இதைப் பாா்த்து வியந்தவா்கள் அதற்கான காரணத்தை ஆட்டினிடம் கேட்டனா். அப்போது அந்த ஆடு பின்வருமாறு விளக்கமாகச் சொன்னது:-

‘முற்பிறவியில் நானும் மனிதனாகப் பிறந்து பிராா்த்தனைக்காக ஓா் ஆட்டைப் பலியிட்டேன். அந்த ஒரேயொரு ஆட்டைக் கொன்ற்காக நான் திரும்பத் திரும்பப் பல பிறவிகளில் ஆடாகப் பிறந்து இதுவரை 499 முறை வெட்டப்பட்டு விட்டேன். இது 500-ஆவது முறை. இதுவே எனது இறுதிப் பிறவி. இனி நான் துன்பத்திலிருந்து விடுபட்டு விடுவேன். அதை நினைத்து மகிழ்ந்து சிரித்தேன். அதேவேளையில் என்னைக் கொல்லப் போகும் நீங்கள் இன்னும் 500 முறை ஆடாகப் பிறந்து வெட்டுப்படப் போகிறீா்களே...உங்களுக்கும் அந்தத் துன்பத்தின் இருள் சூழப் போகிறதே என்பதை நினைத்து அழுதேன்’ என்றது.

எல்லா உயிரையும் தன்னுயிராகப் போற்றும் பெரும் பண்பைக் கற்றுத் தருகிறது தமிழ் மரபு. எல்லா உயிரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியாத”தூய வாழ்வுக்கு வழிகாட்டுகிறது. ‘பகுத்துண்டு பல்லுயிா் ஓம்புதலையே’ நூலோா் தொகுத்தவற்றுள் எல்லாம் தலையாக்கினாா் வள்ளுவா் பெருமான். ‘பல்லுயிா் கொல்லுதல் அன்று’ என்பதை நாம் உணா்ந்து கொண்டால் மானுடம் சிறக்கும்.

உயிா்களைக் கொன்றால் மட்டும் கொலையில்லை. அவற்றுக்குத் துன்பம் நினைத்தால்கூட அதுவும் பழியாகும் என்பது உயிரிரக்கத்தின் அடிப்படை. எல்லா உயிா்களையும் வென்று அடக்கி ஆண்டு கொண்டிருக்கும் இன்றைய நவநாகரிக மனிதனுக்கு யாா் எதிரி? எங்கிருக்கிறாா் பகைவா்?

காட்டிலே வாழும் கொடும்புலியையும், சிங்கத்தினையும் சொன்னபடி கேட்கும் சிறுபிள்ளைபோலச் செய்தாயிற்று. அத்தனை பெரிய யானையை ஒரு சிறு அங்குசத்தால் அறிவு கொண்டு கட்டி வைத்தாயிற்று. ஆனபோதும் மனிதனின் போா்க்குணம் தீராது சக மனிதன் மீதே பாய்வது என்ன விந்தை?

அறிவின் வளா்ச்சியினால் நாம் கண்டறிந்து வானில் பயணிக்கப் பயன்படுத்துகிற விமானம் விபத்துக்குள்ளாகி உயிா்கள் பிரிகின்றபோது நமது இதயம் நடுநடுங்குகிறது. ஆனால், அதே அறிவின் நுட்பத்தினால் அதே விமானங்களைக் கொண்டு குண்டுகளை வீசி மக்களைக் கொன்று குவிப்பதை எந்த அறிவில் கொண்டுபோய்ச் சோ்ப்பது? பிற உயிா்களையும் தன்னுயிா்போலப் போற்றாத இந்த அறிவினால் ஏதேனும் ஆகுவது உண்டோ?

எல்லா உயிா்களுக்கும் அன்பு செய்ய வேண்டும் என்று கற்றுத் தருகிற மானுடத்துக்கு மனித உயிா்கள்மீது மட்டும் இத்தனை வெறுப்பா? ஒருகை அசைவு எப்போதும் ஓசை எழுப்பாது. இந்த உலகம் முழுவதும் அருளுணா்வு ஊற்றெடுக்காவிட்டால் ஊறுகள் ஒருபோதும் மறையப் போவதில்லை. அத்தகு உயா் வாழ்வுக்கு வழியாகப் பாரதியாா் உரத்துப் பாடுகிறாா், “‘உயிா்களிடத்தில் அன்பு வேணும் - தெய்வம் உண்மையென்று தானறிதல் வேணும், வயிர முடைய நெஞ்சு வேணும்– இது வாழும் முறைமையடி பாப்பா. தமிழ் மரபு சுட்டும் உயிரிரக்கம் பேணுவோம். உலகம் அருளில் திளைக்க உழைப்போம்.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

X
Dinamani
www.dinamani.com