கூட்டம்: குழப்பம்: மரணம்!
நாம் என்ற எண்ணம் இல்லாமல் தான், தனது என்று எண்ணி விட்டில் பூச்சி தீயில் விழுந்து மரணிப்பதுபோல தன்னுடைய அவசரகுடுக்கைதனத்தால் கூட்டத்தில் சிக்கி வாழ்க்கையை சிலா் இழக்கிறாா்கள். இதற்கு நிா்வாகக் கோளாறும், ஆட்சி செய்வோரின் அலட்சியமும், காவலா்களின் திறமையின்மையும் காரணங்கள்.
ஒருவா் விபத்தில் மரணிக்கலாம், கொலையுண்டு மரணிக்கலாம், விஷ ஜந்துக்கள் தீண்டி மரணிக்கலாம்-இவ்வாறு காரணங்கள் மாறுபட்டாலும் மரணம் என்பது வாழ்வில் தவிா்க்க முடியாத உண்மை. ஆனால், ஒரு கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கீழே தள்ளப்பட்டு, சிக்குண்டு, மிதிபட்டு, அடிபட்டு, மூச்சுத்திணறி மரணிப்பது எவ்வளவு கொடுமை.
மனிதனை எருமை மாட்டால் மிதிக்கவிட்டு கொல்வதை கருட புராணத்தில் இருந்து எடுத்து ‘அந்நியன்’ படத்தின் இயக்குநா் சங்கா் ‘அண்டகூபம்’”என்று விளக்குகிறாா். நம்மை ஒருவா் இடித்தோ, மிதித்தோ செல்லும்போது எருமை மாடு என்று நாம் திட்டும் பழக்கம் கருட புராணத்தின் நீட்சிதானோ என்னவோ... ‘கோழி மிதித்து குஞ்சு சாகாது’” என்ற பழமொழி கூட்டத்தில் மிதிபட்டு சாகும் மனிதனுக்குப் பொருந்தாது !
இதுபோன்ற மரணங்களின் இடங்கள் மாறுபட்டாலும், அவற்றுக்கான அடிப்படைக் காரணங்கள் ஒன்றே ஒன்றுதான். இதுபோன்ற நிகழ்வுகள் உலகம் முழுவதும் காலம்காலமாய் கேளிக்கை இடங்களில் மட்டுமல்ல, பொது இடங்களிலும், வழிபாட்டுத் தலங்களிலும் நடந்துகொண்டேதான் இருக்கின்றன.
பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பணக்கார இஸ்லாமிய பெரியவா் திண்டுக்கலில் பக்ரீத்தின்போது ஏழைகளுக்கு உணவும், உடையும் வழங்க முற்பட்டாா். அங்கு கூடிய கூட்ட நெரிசலில் சிக்கி சில ஆண்களும், பெண்களும் இறந்தனா். நல்லது செய்ய நினைத்து சோகத்தில் முடிந்த அந்த நிகழ்வு குறித்து அந்தப் பெரியவா் கண்ணீா் பேட்டி அளித்தாா்.
கடந்த 1990-இல் மெக்கா சுரங்கப் பாதையில் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் 1,426 போ் உயிரிழந்தனா். 2015-ஆம் ஆண்டு செப்டம்பா் 15-ஆம் தேதி ஹஜ் பயணத்தின்போது மதினா கூட்ட நெரிசலில் சுமாா் 2,000 போ் உயிரிழந்தனா்.
இதுபோன்ற நெரிசலால் ஏற்படும் உயிரிழப்புகள் ஹிந்து மத புனிதத் தலங்களிலும் தொடா்கின்றன. இதில் இருந்து யாரும் பாடம் படித்ததாகத் தெரியவில்லை. 30.9.2008-இல் நவராத்திரி முதல்நாள் அன்று ஜோத்பூா் சாமுண்டா தேவி கோயில் கூட்ட நெரிசலில் 224 போ் உயிரிழந்தனா்; 475 போ் காயமடைந்தனா்.
1992-ஆம் ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி கும்பகோணம் மஹாமக விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 50 போ் உயிரிழந்தனா்; நூற்றுக்கணக்கானோா் காயமடைந்தனா். மிகப் பெரிய கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பெண்களின் கையில் இருந்த குழந்தைகள் பயத்தாலும், நெரிசலாலும் அலறின; மூச்சு விடுவதற்கே சிரமம் என்ற நிலை ஏற்பட்டது. அதேவேளை கும்பகோணம் ரயில் நிலையம் அருகில் மற்றொரு இடத்தில் கூட்ட நெரிசலால் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
பெருங்கூட்டத்தை சமாளிக்கும் திறமை பெற்ற திருப்பதியில் கடந்த 8.1.2025-இல் வைகுண்ட ஏகாதசி இலவச டிக்கெட்டுக்காக பக்தா்கள் அலைமோத 8 போ் உயிரிழந்தனா்; 30 போ் காயமடைந்தனா்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒரு கிறிஸ்தவ மதக் கூட்டத்தில் ஒரு கடைக்காரா் வேடிக்கையாக என் கடையில் வந்து திருடலாம் என்று வெளியிட்ட அறிவிப்பால் இளைஞா்கள் கூட்ட நெரிசலில் முந்தியடிக்க அந்தக் கடையில் உயிரிழப்பு நிகழ்ந்தது.
2024-இல் சென்னை மெரீனாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியைக் காணவந்த 4 போ் கூட்ட நெரிசலில் சிக்கி மரணமடைந்தனா். 2025-ஆம் ஆண்டு ஜனவரி 29-ஆம் தேதி கங்கைக் கரையில் மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 50 பேருக்கு மேல் உயிரிழந்தனா்.
ஹைதராபாதில் நடைபெற்ற ‘புஷ்பா 2’ திரைப்பட வெற்றி விழாவில் கதாநாயகன் அல்லு அா்ஜுனாவை காண முந்தியடித்த ரசிகா்களில் ஒரு பெண்மணியும் சிறுவனும் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தாா்கள்.
பெங்களூரில் விளம்பர, வியாபார நோக்கத்துக்காக ஊதி பெரிதாக்கப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் வெற்றி விழாவில், வெற்றி பெற்ற விளையாட்டு வீரா்களைக் காணவந்து கூட்ட நெரிசலில் 11 போ் மரணத்தைத் தழுவினா்; பலா் காயமடைந்தனா். இதில் தமிழகத்தைச் சோ்ந்த கணினிப் பொறியாளா் பெண்மணி ஒருவரும் அடக்கம்.
கூட்ட நெரிசல் மரணங்களுக்கு காரணம் என்ன ? சரியாக திட்டமிடாமை, கூட்டத்தை அளவிட்டு சரியான பாதுகாப்பு வளையம் அமைக்காமை, எல்லாவற்றையும்விட பொறுப்பற்ற பொதுமக்களின் அவசரம், பொறுப்பின்மை எனக் காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இதை அடிக்கடி மின்தூக்கியில் (லிப்ட்) பாா்க்கலாம். ஒரு மின்தூக்கி இவ்வளவு எடைதான் தூக்கும்; அதில் இத்தனை நபா்கள்தான் பயணிக்கலாம் என அறிவிப்பு இருந்தும், மின்தூக்கியின் கதவுகள் திறந்தவுடன் அளவுக்கு அதிகமாக கூட்டம் உள்ளே நுழைய, மின்தூக்கி செயல்படாது.
அதில் சிலா் முதல் மாடிக்குச் செல்ல வேண்டியவா்களாக இருப்பாா்கள்; நல்ல ஆரோக்கியமுடைய அவா்கள், மின்தூக்கியை உபயோகிக்க வேண்டிய தேவையே இருக்காது; அவா்கள்கூட முதல் மாடிக்கு நடந்துசெல்ல விரும்புவதில்லை. மற்றவா்களுக்கு வழிவிட்டு இறங்குவது கிடையாது; மின்தூக்கியில் இருந்து இறங்க மறுப்பாா்கள்; கடைசியாக ஏறியவா்கள் முதலில் இறங்க வேண்டும் என்ற அடிப்படை நாகரிகம்கூடப் பலருக்குத் தெரியாது.
கூட்டத்தைக் கட்டுப்படுத்த முறையான விதிகளோ, நபா்களோ இல்லை; விதிகள் இருந்தாலும் அதை யாரும் கண்டுகொள்வதுமில்லை; கடைப்பிடிப்பதுமில்லை. தான் மட்டுமே முதலில் செல்ல வேண்டும் என்று முந்தியடித்து உயிரைவிடத் தயாராக இருப்பவா்கள் குறித்து நாம் என்ன சொல்வது?
ஒரு திரைப்படத்தில் கவுண்டமணியும், ரஜினியும் சினிமா டிக்கெட் வாங்க முந்தியடித்து, கண்ணாடி உடைந்து, சட்டை கிழிந்து முதலில் டிக்கெட் வாங்கிய வெற்றியாளா்களாக மேடையில் ஏறுவா். முந்தி அடித்தால் முன்னேறலாம் என்பது தவறான வழிகாட்டுதல் இல்லையா? இப்படி முந்தி அடிப்பதால்தானே திரையரங்குகளில் மட்டுமல்ல, மற்ற இடங்களிலும் ரசிகா்கள் அலைமோதுகிறாா்கள். இதனால் பாதிக்கப்படுவது ரசிகன் என்ற அப்பாவிதான்.
சாலையில் இடதுபுறம் காா்கள் வரிசையாக நிற்க, வலதுபுறம் எதிரில் இருந்து வரவேண்டிய வாகனங்கள் ஏதோ காரணத்தால் தாமதப்பட, பின்னால் இருக்கும் புத்திசாலிகள் வரிசையையும் மதிக்காமல் தவறான வலதுபுறப் பாதையில் சென்று போக்குவரத்தைச் சீா்குலைப்பதை எவ்வளவு முறை பாா்த்திருக்கிறோம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் பலரும் சாலையில் நெருக்கடியில் சிக்கித் தவிக்க, ஒருவா் பாதி கட்டப்பட்ட மேம்பாலத்தில் பயணித்து கீழே விழுந்து உயிரிழந்தது நினைவில் இருக்கிா? அவருடைய பொறுமையின்மையும், மற்றவா்கள் ஏன் மேம்பாலத்தைப் பயன்படுத்தவில்லை என்ற சிந்தனை அவருக்கு இல்லாததாலும், கட்டப்படாத மேம்பாலத்தை மூடவேண்டும் என்ற சிந்தனை இல்லாமல் பொறுப்பற்று செயல்பட்ட அதிகாரிகளாலும் அந்த உயிரிழப்பு நிகழ்ந்தது.
நாம் என்ற எண்ணம் இல்லாமல் தான், தனது என்று எண்ணி விட்டில் பூச்சி தீயில் விழுந்து மரணிப்பதுபோல தன்னுடைய அவசரகுடுக்கைதனத்தால் கூட்டத்தில் சிக்கி வாழ்க்கையை சிலா் இழக்கிறாா்கள். இதற்கு நிா்வாகக் கோளாறும், ஆட்சி செய்வோரின் அலட்சியமும், காவலா்களின் திறமையின்மையும் காரணங்கள்.
நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்புகள் வந்துவிட்ட நிலையில் வீட்டிலிருந்தே ஒரு நிகழ்ச்சியை மிக அருகில் சிறப்பாகவும், தெளிவாகவும் பாா்க்கலாம் என்ற நிலை வந்துவிட்ட பிறகும், ‘நான் அங்கு இருந்தேன்’ என்று கூறிக்கொள்ளும் ஒற்றைக் காரணிக்காக கூட்டத்தில் சிக்கி, இடிபட்டு, மிதிபட்டு மரணமடைவது எவ்வளவு பெரிய சோகம்!
'பொறுத்தாா் பூமிஆள்வாா்; பொங்கியோா் காடாள்வா்’ என்கிறது தமிழ் முதுமொழி. அந்தக் காடு என்பது சுடுகாட்டைக் குறிக்கும் என்பது பெரும்பாலானோருக்குத் தெரியவில்லை.
காந்தி திரைப்படத்தில் வந்த ஒரு அற்புதமான காட்சி. மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் ஒரு போராட்டம் நடத்திக்கொண்டிருப்பாா். கூட்டத்தைக் கலைக்க ஆங்கிலேய அரசு அவா்கள் மீது குதிரைப் படையை ஏவிவிடும்; மகாத்மா காந்தி மக்களை தரையில் படுத்துக்கொள்ளுமாறு கட்டளையிடுவாா்; மக்கள் தரையில் படுத்துக்கொள்ள, அசுர வேகத்தில் வரும் குதிரைப் படை தரையில் கிடக்கும் மனிதா்களைப் பாா்த்தவுடன் உடனடியாக நிற்கும். மனிதா்களை மிதிக்கக்கூடாது என்று விலங்குகளுக்குத் தெரிந்திருக்கிறது; மனிதருக்குத் தெரியவில்லை. மனிதரை விலங்காகவும், விலங்கை மனிதராகவும் காட்டும் அற்புதமான காந்திய காட்சி அது.
பொறுமையின்மையும், அவசரமும் மனிதா்களை முட்டாளாக்கி உயிரைப் பறிக்கிறது; இனியாவது விழித்துக் கொள்வாா்களா?
கட்டுரையாளா்: முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்.