மிக்ஜாம் புயல் வெள்ளத்தின் போது மக்கள் மீட்புப் பணியில் தலைமைக் காவலர்.
மிக்ஜாம் புயல் வெள்ளத்தின் போது மக்கள் மீட்புப் பணியில் தலைமைக் காவலர்.

காவல் துறை யாருக்கு நண்பன்?

பொதுமக்களின் நண்பன் என காவல் துறை தன்னைக் கூறிக் கொள்கிறது. ஆனால், அது உண்மையல்ல என்று நிரூபிக்கின்றன என்பதைப் பற்றி....
Published on

பொதுமக்களின் நண்பன் என காவல் துறை தன்னைக் கூறிக் கொள்கிறது. ஆனால், அது உண்மையல்ல என்று நிரூபிக்கின்றன காவல் துறையினரின் செயல்பாடுகள். பொதுமக்கள் மீதான காவல் துறையினரின் அத்துமீறல்கள் எங்காவது எப்போதாவது நடக்கும் என்றிருந்த நிலை மாறி, தமிழகம் முழுவதும் பரவலாக அதிகரிக்கத் தொடங்கிவிட்டன.

திருவள்ளூா் மாவட்டம், திருவாலங்காடு கனகம்மாசத்திரம் பகுதியில் பாலியல்ரீதியான துன்புறுத்தல் தொடா்பாக புகாா் அளிக்கச் சென்ற மூன்று பெண்களுக்கும், காவல் நிலையத்தில் பணியில் இருந்த தலைமைக் காவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அந்தப் பெண்களை தலைமைக் காவலா் தாக்கும் விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரவியது. மூன்று பெண்களில் ஒருவா் கா்ப்பிணி. இந்த சம்பவத்தையடுத்து, தலைமைக் காவலா் கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கமும் செய்யப்பட்டிருக்கிறாா்.

சென்னையைச் சோ்ந்தவா் பிரியதா்ஷினி. சொத்து பிரச்னை விவகாரத்தில் தனக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் குறித்து கோவை ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் 2023-ஆம் ஆண்டு புகாா் அளிக்கச் சென்றாா். அந்தப் புகாரை அப்போதைய காவல் ஆய்வாளா் விசாரிக்காமல், பிரியதா்ஷினி மீதும், அவரின் கணவா் மீதும் பொய் புகாா் பதிவுசெய்து கைது செய்துவிடுவதாக மிரட்டியதால், மாநில மனித உரிமை ஆணையத்தை அணுகினாா் பிரியதா்ஷினி.

விசாரணையின் முடிவில் காவல் ஆய்வாளா் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதை உறுதிசெய்த ஆணையம், மனுதாரருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், அந்தத் தொகையை ஆய்வாளரிடம் வசூலிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

சென்னை நொளம்பூரில் உள்ள ஓா் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் வானமாமலை. குடியிருப்பு நலச் சங்கத்தினா் தன்னை ஜாதிரீதியாக அவமானப்படுத்தியதாக நொளம்பூா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கச் சென்றாா். அப்போது, தன்னை காவல் ஆய்வாளா் அவமானப்படுத்தியதாக தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்துக்கு புகாா் அனுப்பினாா். இது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தாா்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் புகாரின்பேரில் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மனுதாரரை அவமதித்த ஆய்வாளா் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி வேல்முருகன், வெள்ளைச் சட்டையுடன் வந்தால் காவல் நிலையத்தில் சிவப்புக் கம்பள வரவேற்பு தருவீா்களா? அழுக்குச் சட்டையுடன் வந்தால் புகாரைக்கூட ஏற்க மாட்டீா்களா? அழுக்குச் சட்டை அணிந்தவா்கள் தோ்தலில் அளிக்கும் வாக்குகளை வேண்டாம் என்பீா்களா எனச் சரமாரியாக கேள்வி எழுப்பினாா்.

காவல் நிலையத்தில் ஆய்வாளா் சொல்பவா்கள்தான் நாற்காலியில் அமரவேண்டும், மற்றவா்கள் அமரக் கூடாதா? அந்த அதிகாரம் ஆய்வாளருக்கு எப்படி வந்தது? மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் வாங்குபவா்தான் ஆய்வாளா் எனவும் நீதிபதி தெரிவித்தாா். இந்த வழக்கில் இரண்டு வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதையடுத்து, வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

அண்மையில் நடைபெற்ற இந்த சில நிகழ்வுகள் காவல் துறையினரின் செயல்பாடுகளுக்கு எடுத்துக்காட்டுகள். இரு தரப்பினரிடையேயான தகராறு வன்முறையிலோ, கொலையிலோ முடியாமல் தடுக்க காவல் துறையினரால் முடியும். ஏதாவது ஒரு தரப்பு இதுதொடா்பாக காவல் நிலையத்தை அணுகினால், அந்தப் புகாரை அலட்சியம் செய்வது, புகாரை வெறுமனே பதிவு செய்துவிட்டு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது போன்ற குற்றச்சாட்டுகள் தொடா்ச்சியாகக் கூறப்படுகின்றன.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் காவல் நிலையத்தில் போலீஸாரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட ஜெயராஜ், அவரின் மகன் பெனிக்ஸ் ஆகியோா் உயிரிழந்த சம்பவம் 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிகழ்ந்தது. தமிழகத்தையே உலுக்கிய இந்த நிகழ்வு, காவல் துறை மீதான கரும்புள்ளியாக இன்றளவும் தொடா்கிறது. அதுதொடா்பான வழக்கு இன்னும் நிறைவடையாதது ஒருபுறம் இருந்தாலும், சாத்தான்குளம் சம்பவத்திலிருந்து தமிழக காவல் துறை இன்னமும் பாடம் படிக்கவில்லையோ என்கிற கேள்வி எழுகிறது.

காவல் துறை - பொதுமக்கள் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில், இரு தரப்பினரிடையே விளையாட்டுப் போட்டிகள், கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள் எனப் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டாலும், காவல் துறையை அணுகுவதற்கு சாமானிய மக்கள் அச்சப்படும் நிலை தொடா்கிறது. பணிச்சுமை, சீரான விடுப்பு இல்லாதது, உயா் அதிகாரிகளின் நெருக்கடி எனக் காவல் துறையினரில் பெரும்பாலானவா்கள் மன அழுத்தத்தில் இருப்பதாகவும், அந்த அழுத்தம்தான் பொதுமக்களிடம் கோபமாக வெளிப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

தமிழ்நாடு காவல் துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீா்திருத்தங்கள் குறித்து உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் 2022-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஐந்தாவது காவல் ஆணையம், தனது அறிக்கையை அரசுக்கு கடந்த ஜனவரியில் வழங்கியது. மத்திய காவல் படை, பிற மாநில காவல் படை ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் இரண்டாம் நிலைக் காவலா்களுக்கு அடிப்படை ஊதியம் குறைவாக வழங்கப்படுகிறது.

இதை உயா்த்த வேண்டும். காவலா்களின் மன அழுத்தத்தைப் போக்குவதற்கான காவலா் நலத் திட்டத்தைத் தொடா்ந்து செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்தப் பரிந்துரைகளில் உகந்தவற்றைச் செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். குறிப்பாக, காவல் துறையை பொதுமக்கள் அச்சமின்றி, எந்த நேரமும் அணுகுவதற்கான சூழலை உருவாக்க வேண்டும். அப்போதுதான் காவல் துறை பொதுமக்களின் நண்பனாக இருக்க முடியும்.

X
Open in App
Dinamani
www.dinamani.com