/

கல்வி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்கக் கோரி வழக்கு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி பெயர்களில் இணைந்துள்ள ஜாதிப் பெயர்களை நீக்கக் கோரி பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Updated On :1 ஆகஸ்ட் 2013, 9:58 pm

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி பெயர்களில் இணைந்துள்ள ஜாதிப் பெயர்களை நீக்கக் கோரி பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்குரைஞர் எஸ்.சரவணன் மனு தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பல பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் ஜாதிப் பெயர்களும் இணைந்துள்ளன. ஜாதி முறை என்பது நமது சமுதாயத்தை பல்வேறு வகைகளில் சீரழிக்கிறது. நமது நாட்டில் நடைபெறும் எல்லா விதமான வன்முறைகள், சுரண்டல்கள் மற்றும் ஊழல்களுக்கு ஜாதி

முறையே மூல வேராக உள்ளது.

இதனால்தான் தமிழ்நாட்டில் தெருக்களுக்கு சூட்டப்பட்டுள்ள ஜாதிப் பெயர்கள் நீக்கப்படும் என்று 1979-1980-இல் பெரியார் நூற்றாண்டின்போது அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார். அதேபோல் 1997-ல் ஜாதிக் கலவரங்களை தவிர்க்கும் நோக்கில் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு சூட்டப்பட்டிருந்த பெயர்கள் மாற்றப்பட்டன.

இந்நிலையில் அரசால் மற்றும் அரசின் நிதியுதவியால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களின் பெயர்களில் செட்டியார், நாடார், நாயுடு, கள்ளர், ஐயர் என ஜாதிப் பெயர்கள் இடம்பெற்றிருப்பது உடனடியாக அகற்றப்பட வேண்டும். கல்வி நிறுவனங்களை உருவாக்கிய நிறுவனர்கள் மற்றும் நிலம் உள்ளிட்ட சொத்துகளை வழங்கிய நன்கொடையாளர்களின் பெயர்கள் அந்தக் கல்வி நிறுவனங்களுக்கு சூட்டப்பட்டிருப்பதில் தவறில்லை. ஆனால் ஜாதிப் பெயர்களும் இணைந்திருப்பதை ஏற்க இயலாது.

ஆகவே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று சரவணன் தனது மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு, தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு தொடர்பாக அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை செப்டம்பர் 10-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.