Enable Javscript for better performance
கபாலி யாருடைய முகம்? நேராகச் சொல்லுங்கள் ரஞ்சித்!!- Dinamani

சுடச்சுட

  

  கபாலி யாருடைய முகம்? நேராகச் சொல்லுங்கள் ரஞ்சித்!!

  By சி. சரவணன்  |   Published on : 31st July 2016 12:16 PM  |   அ+அ அ-   |    |  

  இந்தியத் திரையுலகம் எதிர்பார்த்த கபாலி திரைப்படம் வெளிவந்ததிலிருந்து எதிர்மைறையாகவும் நேர்மறையாகவும் திறனாய்வுகளைப் பெற்று வருகிறது.

  கபாலி மீதான எதிர்மறைக் கருத்துக்களில் முதன்மையாகக் குறிப்பிடப் படவேண்டியவை -

  * திரைப்படக் கட்டணம் விருப்பம்போல் நிர்ணயிக்கப்பட்டது.

  * முதல் காட்சிக்கு ரஜினி ரசிகர்களுக்கு டிக்கெட் வழங்கப்படவில்லை.

  மேற்படி குற்றச்சாட்டுகளில் நிச்சயம் உண்மை இருக்கிறது.

  அரசாங்கத்துக்குச் செல்ல வேண்டிய வருமானவரிப் பணமும், மக்களுக்குச் செல்ல வேண்டிய வரிச்சலுகையும் ஏமாற்றப்பட்டன. கூடவே, ரஜினியின் 30 ஆண்டுகால ரசிகர் மன்றத்தினரும் ஏமாற்றப்பட்டனர். இவை குறித்து தயாரிப்பாளர்கள் கவலைப்படாமல் இருந்தாலும், ரஜினிகாந்த் கவலைப்பட வேண்டும்.

  கபாலி மீதான குற்றச்சாட்டில் அடுத்துக் குறிப்பிட வேண்டியது, ரஜினி படம்போல் இந்தப்படம் இல்லை என்பதுதான். நிச்சயமாக, வழக்கமான ரஜினியின் சண்டைக்காட்சிகள், ஆட்டம், பாட்டம், நச்சென்ற வசனங்கள் எதுவும் இல்லை.

  மேற்படி குற்றச்சாட்டில் உண்மை இருந்தாலும், ரஜினியின் முதுமையைக் கவனத்தில் கொள்ளவேண்டி உள்ளது. அவரால் விறுவிறுப்பான சண்டைக் காட்சிகளிலோ, காதல் காட்சிகளிலோ, ஆடல் காட்சிகளிலோ நடிக்க முடியாது. எத்தனை பொய் உருவங்களும் ரஜினியின் மெய்த்தோற்றத்தை உருவாக்கிவிட முடியாது. எல்லாமே டூப் என்கிற கிண்டலையே ரஜினி சந்தித்திருக்கவேண்டி இருக்கும்.

  வழக்கமாகப் பறந்து பறந்து அடிக்கும் ரஜினிக்கான பொய் உருவங்கள், அவருடைய இளம் பருவத்தில் ஏற்புடையதாக இருந்தன. நடுப்பருவத்திலும் மெய்யாகவே பார்க்கப்பட்டன. ஆனால், 60 வயதைக் கடந்துவிட்ட பிறகு அவருடைய தோற்றத்தில் முதுமை தெளிவாக முகம் காட்டுகிறபோது பொய் உருவங்களை எப்போதும் சண்டையிட வைக்க முடியாது. காதல் காட்சிகளில் 20 வயது நடிகைகளோடு ஆட்டம் போட்டால் ஏளனத்தையே சந்திக்க நேரிடும்.

  எனவே, முகத்தில் நடிப்பை வெளிபடுத்துவதற்குரிய பாத்திரத்தை தேர்ந்தெடுப்பதற்கான தேடலை ரஜினி தொடங்கியிருந்தார். அந்த நேரத்தில், ரஞ்சித்தின் எதார்த்த படைப்புகளை ரஜினி நம்பினார். அந்த நம்பிக்கையில்தான் கபாலி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

  கபாலியாக நடித்திருக்கும் ரஜினியின் முக அமைப்பு அந்தக் கதாபாத்திரத்துக்கு ஒத்துப்போயிருக்கிறது.

  kabali-review-3.jpg 

  இளம் வயதுப் போராளியாக, சமூக அக்கறையுள்ளவராக, நடுத்தர வயதிலும் முதுமை வயதிலும் கணவராக, மகளுக்குத் தந்தையாக ரஜினியின் முகபாவனைகள் நிச்சயமாகக் கமலை நினைவுக்கு வரவழைக்கின்றன. இவைபோன்ற கதாபாத்திரங்களைக் கமல் மட்டும்தான் ஏற்று நடிப்பார் என்று பேசப்படுகிற நிலையில், ரஜினி தனது வயதுக்கேற்ற கதாபாத்திரத்தையே தேர்ந்தெடுத்துள்ளார். கபாலியில் நடித்திருக்கும் தற்போதைய தலைமுறை நடிகர்களோடு ஒப்பிடும்போது, ரஜினியின் நடிப்பில் பொறுமையும் அனுபவமும் தெளிவாகவே வெளிப்படுகிறது.

  ரஜினிகாந்த் இனிமேல் இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிக்கப்போகிறார் என்பதெல்லாம் உண்மையாக இருந்தால், சூப்பர்ஸ்டார் என்ற உயரத்தோடு, எதார்த்த நடிப்பை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு ரசிகர்களுக்குத் தயக்கம் இருக்கிறது.

  இனிமேல் படத்தின் வெற்றி தோல்வி பற்றி கவலைப்படுவதற்கு ரஜினிக்கு ஒன்றுமில்லை. எனவே, அறிவியல் கதைப் படங்களையும் வரலாற்றுக் கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்தால், தமிழுக்கு இவரால் நிச்சயம் பெருமை கிடைக்கும். சிவாஜியின் வணிகப் படங்களைவிட வீரபாண்டிய கட்டபொம்மனும், திருவிளையாடலும் இன்று வரை மக்கள் மனத்தில் நிற்கின்றன. ரஜினிகாந்த் எதார்த்த நடிப்பைத் தொடர முடிவு செய்துவிட்டால், ‘தன்னை நம்பி’ வரலாற்றுப் படங்களைத் தேர்வுசெய்வது அவருக்கும் நல்லது, தமிழ்த் திரையுலகுக்கும் நல்லது.

  இந்தப் படத்தில் ஒளிப்பதிவு, தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் வியப்பைத் தரவல்லன. ரஜினி பேசுகிறபோது ஒலிக்கின்ற பின்னணி இசை குறித்து சந்தோஷ் நாராயணன் சிந்தித்திருக்க வேண்டும். கொலைக்களக் கதையில் குடும்பவியலை நுழைத்தது, ரஜினியை இயக்கியது மற்றும் நடிகர் நடிகைகளைத் தேர்வு செய்தது, தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் சின்ன வயதிலேயே ரஞ்சித் சாதித்திருக்கிறார்.

  ஆனால், கபாலி மீதான குற்றச்சாட்டில் எழுதப்படாமல் சொல்லப்படுவதில் முதன்மையானது ரஞ்சித்தைப் பற்றியே.

  வெறும் காட்சிப்படுத்தல்கள் மட்டும் திரைப்படமாகாது. கதை சொல்லத் தெரிந்திருக்க வேண்டும்.

  திரைப்படத்தில் ஒரு நாவலைப் படிப்பது போன்ற பொறுமையை ரஞ்சித் தருகிறார். கதை சொல்லத் தெரிவதுதான் படைப்பாளிக்கு வெற்றியைத் தரும். அட்டகத்தியிலும் மெட்ராஸிலும் தெரியும் எதார்த்தம், பல இடங்களிலும் கபாலியில் தவறவிடப்பட்டுள்ளது.

  மொழுமொழு பச்சைக் குழந்தை முகத்தைக் கொண்டுவந்து காட்டிவிட்டு, கபாலியைக் கொல்வதற்கான கொலையாளி என்று தன்ஷிகாவைக் காட்டும்போது நம்பகத்தன்மை வர மறுக்கிறது. 

  ஒரே குண்டுச் சுடுதலுக்கே 5 பேர் சாகும்போது, 5 குண்டுகள் பாய்ந்தபிறகும் ரஜினிக்கு ஒன்றும் ஆகாது என்று சொல்வதும், கதை சொல்லுதலுக்கான அழகியலாகத் தெரியவில்லை.

  அட்டகத்தி தினேஷ் வெட்டப்படும் காட்சிகள் யாவும் பழைய படங்களையே நினைவூட்டுகின்றன. உச்சகட்டத்துக்கு முன்னர் கதாநாயகனுக்கு நெருக்கமானவர்கள் யாவரும் கொல்லப்படுவார்கள் என்பதைப் பல பழைய படங்கள் சொன்னது மட்டுமல்லாமல், மெட்ராஸில் ரஞ்சித்தே ஏற்கெனவே சொல்லிவிட்டார். தன்ஷிகாவின் நாடகக் கொலை முயற்சிகள், சூர்யாவின் ஆதவன் திரைப்படக் காட்சிகளாகவே தெரிகின்றன.

  கடைசிகட்ட துப்பாக்கிச் சண்டைக் காட்சிகளில் நம்பகத்தன்மையே இல்லை.

  நாயகனிலும் தளபதியிலும், கமலையும் மம்முட்டியையும் கொல்வதற்கு மணிரத்னம் தயங்கவில்லை. இந்தியனில் தாத்தா கமலைக் காப்பாற்றுவதற்கு ஷங்கரும் தயங்கவில்லை. படத்தின் உச்சகட்டக் காட்சிகளில், தான் சொல்லவந்ததைச் சொல்வதற்கான துணிச்சலை ரஞ்சித் பெறுவது நல்லது.

  ஒரு நாவலை திரைப்படமாகப் படைக்க முயற்சி செய்யும்போது, அகிலன்தான் தெரிய வேண்டுமே தவிர ராஜேஷ்குமார் தெரியக்கூடாது.

  திரைக்கதை அமைப்பில் ரஞ்சித் மீதான மேற்படி குற்றச்சாட்டுகள் இயல்பானவை. எல்லா இயக்குநர்கள் மீதும் இதுபோன்ற விமரிசனங்கள் எழும்.

  கமல் ஒரு நல்ல நடிகர். நல்ல கதாசிரியர். ஆனால், மற்ற கதையாசிரியர்களின் படங்களில் நடிக்கும்போது பெற்ற வெற்றியைவிட, அவரே எழுதுகிற கதைப் படங்கள் நிறைய தோல்வியைச் சந்தித்திருக்கின்றன.

  ரஞ்சித்தும் தன்னிடம் கதை வறட்சி உள்ளதா? திரைக்கதையில் தொய்வு தென்படுகிறதா? என்பதை யோசிக்க வேண்டும். பாலசந்தர், பாரதிராஜா, ஷங்கர், மணிரத்னம் உள்ளிட்ட இயக்குநர்கள் பிற கதையாசிரியர்களையும் நம்பியுள்ளனர். ரஞ்சித்தும் நல்ல கதைகளைப் பிறரிடமும் தேடும்போது வலிமையான இயக்குநராகத் தொடரமுடியும்.

  கபாலியில் தெரிகிற கதை, திரைக்கதை சிறு பிழைகளைப் பின்வரும் காலங்களில் திருத்திக்கொள்ள முடியும். எனவே, ரஞ்சித் மீது வைக்கப்படும் கதை, திரைக்கதை மீதான குற்றச்சாட்டைப் பற்றியும் இந்தக் கட்டுரையில் அலச விரும்பவில்லை.

  ஆனால், “தனது ஜாதிச் சிந்தனையை உச்சநடிகர் படத்தில் திணித்திருக்கிறார்” என்பதே ரஞ்சித் மீதான முதன்மைக் குற்றச்சாட்டு ஆகும். இந்தக் குற்றச்சாட்டைப் பற்றித்தான் இங்கு பார்க்கவேண்டி உள்ளது.

  கபாலியில் ரஞ்சித் சொல்லிய கதை இதுதான்.

  தமிழ்நாட்டிலிருந்து மலேசியாவுக்குத் தோட்டத் தொழில் வேலை செய்வதற்காகச் செல்லும் கபாலி, அங்கு தமிழர்களுக்குக் குறைவான கூலி கொடுக்கப்படுவதை எதிர்த்துக் குரல் கொடுக்கிறார். அவர் குரல் வெற்றிபெறவே, மலேசியத் தமிழர்களின் தலைவர் தமிழ்நேசன், கபாலியைத் தன் குழுவில் சேரச் சொல்கிறார். தவறான தொழில்களுக்கு இடம் தர மறுப்பதால், பங்காளி வீரசேகரே தமிழ்நேசனைக் கொன்றுவிடுகிறார். அம்பாகச் செயல்பட்ட வீரசேகரனை விட்டுவிட்டு வில்லாகச் செயல்பட்ட மலேசியக் குழுத் தலைவனை ரஜினி கொல்கிறார். இதனால், ரஜினியை மலேசியத் தமிழர்கள் தங்கள் தலைவராக ஏற்றுக்கொள்கின்றனர். இதனால், தமிழ்நேசனுக்கு அடுத்து தலைவராக வரவேண்டிய தமிழ்மாறன் பொறாமை கொண்டு, ரஜினியின் குடும்பத்தை அழிக்கத் திட்டம்போட்டு, அந்தத் திட்டத்தில் தோல்வியடைந்து, கபாலியால் வெட்டிக் கொல்லப்படுகிறார். கொலைக் குற்றத்துக்காக 25 ஆண்டுகால சிறைக்குச் செல்கிறார் கபாலி. விடுதலையடைந்து திரும்பிவந்து பார்த்தால், தமிழர்கள் மத்தியில் போதைப்பொருள் கலாசாரம் திணிக்கப்பட்டுள்ளது. இதனால், இதற்குக் காரணமான டோனி மற்றும் வீரசேகரன் கும்பலை ஒழிக்கத் தொடங்குகிறார். இந்நேரத்தில் தனது மனைவியும் மகளும் உயிருடன் இருப்பதை அறிந்து அவர்களுடன் சேர்கிறார். கடைசியில், வில்லன்களைச் சுட்டுக் கொல்கிறார்.

  இந்தக் கதையில் ஜாதிச் சிந்தனை தெரிகிறதா? எதுவும் இல்லை.

  ஆனால் தமிழ்நேசன், தமிழ்மாறன், வீரசேகரன் அனைவரும் இதர பிற்படுத்தப்பட்டவர்களாகவும், கபாலி தாழ்த்தப்பட்ட வகுப்பினராகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதுதான் ரஞ்சித் மீதான குற்றச்சாட்டு.

  இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்குச் சென்றாலும் தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறக்கூடாது என்று இதர பிற்படுத்தப்பட்டவர்கள் விரும்புகிறார்கள் என்பதையே கபாலியின் கதாபாத்திரம் எடுத்துரைக்கிறது என்று குற்றம் சாட்டுகின்றனர்.

  “நீங்கள் ஆண்ட பரம்பரைடா, இனி நாங்கள் ஆளப் பிறந்தவங்கடா” என்ற வசனம், தமிழக அரசியலில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதையே சுட்டிக்காட்டுகிறது என்றே குற்றம் சாட்டப்படுகிறது.

  அதேபோல், “நாங்கள் கோட்சூட் போட்டால் உங்களுக்குப் பிடிக்காதா, முன்னேறினா உங்களுக்குப் பிடிக்காதுன்னா சாவுங்கடா” என்ற வசனமும், ஒரு தாழ்த்தப்பட்டவர் இதர பிற்படுத்தப்பட்டோரைப் பார்த்தே சொல்லப்படுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

  ரஞ்சித் எழுதியிருக்கிற வசனங்களைக் கூர்ந்து கவனித்தால், ஒரு உண்மை புலனாகும்.

  டோனியுடனான கடைசி வசனங்கள் யாவும், தமிழன் என்ற அடையாளத்திலேயே கபாலி பேசியிருப்பார். ஆனால் தமிழன் நிலை, இந்த இடத்தில் தாழ்த்தப்பட்டவர் நிலையாக ஏன் மாறிப்போனது?

  ‘ஏழாம் அறிவு' படத்தில் முருகதாஸ் வசனத்தில் சூர்யாவும் ஸ்ருதியும், தமிழனுக்காகவும் தமிழுக்காவும் பேசினால் கைதட்டினார்கள். ஆனால், தமிழன் நிலையிலிருந்து ரஞ்சித் வசனம் எழுதினால், ஒரு தமிழன் பேசக்கூடிய வசனமாக யாரும் கருதவில்லை.

  காரணம் என்ன?

  ரஞ்சித்தை யாரும் தமிழனாக ஏற்றுக்கொள்ளவில்லை.

  தமிழ்நாட்டைப் பொருத்தவரையில், தமிழர் பட்டியலில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிராமணர்களுக்கும் இடமில்லை.

  தமிழ் தமிழ் என்று பேசுவதற்குக்கூட, திராவிடத்தில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டுமே உரிமை உண்டு. தாழ்த்தப்பட்டவர்கள் பேசினால் அவர்கள் தமிழுணர்வில் பேசுபவர்களாக அடையாளப்படுத்தப்படமாட்டார்கள். ஏனெனில், இங்கு தமிழும் தமிழரும் திராவிடத்துக்கே. இந்தத் திராவிடத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடமேயில்லை. அதனால்தான், தலித் என்ற அந்நிய மொழி ஊக்கப்படுத்தப்படுகிறது.

  இந்தி எதிர்ப்புப் போரில் முதலில் உயிர் நீத்தவர் நடராசன், அதன்பிறகு உயிர் நீத்தவர் தாளமுத்து. ஆனால், நடராசன் தாளமுத்து என்று சொல்லமாட்டார்கள். தாளமுத்து நடராசன் என்றுதான் சொல்வார்கள். ஏனெனில், நடராசன் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர். தமிழுக்காகப் போராடியவர்களை அடையாளப்படுத்தப்படுவதில்கூட தாழ்த்தப்பட்டவர்கள் பின்னுக்குத் தள்ளப்படுவார்கள்.

  எனவே, ரஞ்சித் தன்னை தமிழன் தமிழன் என்று எத்தனை முறை சொல்லிக்கொண்டாலும், கபாலியில் ரஜினி, வடிவேலுவின் வசனத்தை சுட்டிக்காட்டி சொல்வதைப்போல், “நானும் தமிழன்தான்யா, நானும் தமிழன்தான்யா, நம்புங்கயா” என்று சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

  கபாலி என்ற சொல் புத்தமதம் தொடர்புடையது. புத்தமதம் என்பது தாழ்த்தப்பட்ட வகுப்பினருடன் தொடர்புடையது. எனவே, கபாலி என்ற கதாபாத்திரமே தாழ்த்தப்பட்டவர்களை மையப்படுத்தியதுதான் என்று பேசப்படுகிறது.

  எனவே, கபாலி என்ற பெயரில் தொடங்கி, ‘என் அப்பா  பாலைய்யா’ என்ற நாவலை அடையாளப்படுத்துவதிலிருந்து, ஆளப்பிறந்தவர்கள் என்ற வசனத்தைத் தொடர்ந்து, முன்னேறினால் உங்களுக்குப் பிடிக்காதுன்னா சாவுங்கடா என்ற வசனம் முடியும் வரை தாழ்த்தப்பட்டவராக இருந்தே ரஞ்சித் எழுதியிருக்கிறார் என்று குற்றம் சுமத்தப்படுகிறார்.

  சரி. தாழ்த்தப்பட்டோர் நிலையினராக இருந்து ரஞ்சித் எழுதக்கூடாதா?

  எழுதலாம், தப்பேயில்லை. ஆனால், ரஞ்சித் இதை வெளிப்படையாகச் சொல்லிவிட்டே செய்திருக்க வேண்டும்.

  கொலைக் குற்றவாளி, சந்தன மரங்களை வெட்டி வீழ்த்தியவர் என்ற ‘பல பெருமைகளைக் கொண்ட வீரப்பனை’ ஆதரித்துப் படம் எடுக்க முடிகிறது. தொலைக்காட்சித் தொடர்கள் எடுக்க முடிகிறது. இவர்களுக்கு வீரப்பன் தமிழராகத் தெரிகிறார். தமிழர்களின் குலவிளக்காகத் தெரிகிறார். பிரபாகரன் படத்தைத் தூக்கியெறிந்து வீர இளைஞர்களின் பனியன்களில் எல்லாம் இப்போது வீரப்பன் படம்தான். வீரப்பன்தான் தமிழன்.

  ஆனால், ரஞ்சித் மட்டும் தமிழனில்லை.

  மதக் கருத்துகளையும், ஜாதிக் கருத்துகளையும் தமிழ்ப்படங்கள் சொல்லாமல் இருந்ததில்லை.

  பகுத்தறிவு பேசிக்கொண்டு, தேவர் மகனையும் சபாஷ் நாயுடுவையும் கமல் தருகிறார். குங்குமப் பொட்டுக் கவுண்டரையும் ஜாக்சன் துரையையும் சத்யராஜ் தருகிறார்.

  முதலியார், கவுண்டர், பிள்ளை, தேவர், படையாச்சி என்று சொல்லிகொண்டு அந்த ஜாதிப் பெயர்களைப் பெருமையான வசனங்களாகத் தமிழ் உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது.

  இவைபோன்ற படங்களை ஏற்றுக்கொள்ளும்போது, தாழ்த்தப்பட்ட ஜாதியினரின் சிந்தனையாகப் படம் எடுப்பது தப்பானதா? தப்பே இல்லைதான்.

  ஆனால், ரஞ்சித் தெளிவாக முன்கூட்டியே சொல்ல வேண்டும்.

  “தமிழகத்திலிருந்து மலேசியா செல்கிற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த கபாலி, மலேசியாவுக்குச் சென்றபிறகும் ஜாதி ஏற்றத்தாழ்வுகளைச் சந்திக்கிறார் என்கிற கோணத்திலும், இந்த ஜாதி ஏற்றத்தாழ்வுகள் தேவையில்லை என்ற கோணத்திலும்” வெளிப்படையாகவே ரஞ்சித் திரைக்கதை அமைத்திருக்கலாம்.

  “காந்தி இந்தத் துணியைக் கழற்றியதற்கும், அம்பேத்கர் சூட் கோட்டுக்கு மாறியதற்கும் இருக்கிற அரசியலைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்று ரஜினி பேசுகிறார். ரஜினி ஒன்றும் தெரியாதவரல்லர். ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டுதான் இந்த வசனத்தைப் பேசுகிறார்.

  ஆனால், காந்தி தனது உடைநிலையை மாற்றியதற்கான காரணங்களை அவர் சார்பாக இருந்து வெளிப்படுத்துகிற வசனங்கள் இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும். ஜாதி ஒழிப்புச் சிந்தனையில், காந்தியாருக்கும் அம்பேத்கருக்கும் பாதைகள் வெவ்வேறானவையாக இருந்தாலும் இலக்கு ஒன்றே ஒன்றுதான். மத ஒழிப்பைப் பேசியதாலேயே காந்தி கொல்லப்பட்டார் என்கிறபோது, அவரைப் பற்றிய நேர்மறையான வசனங்களைப் படத்தில் வைத்திருக்கலாம். அப்போதுதான் காந்தியை ஏன் வம்புக்கு இழுக்கிறார் என்ற வாதத்தை ரஞ்சித் தவிர்த்திருக்க முடியும்.

  “காவல் துறையில், காவலர் தொடங்கி ஆய்வாளர் வரை ஆதிதிராவிடர்களையே நியமனம் செய்ய வேண்டும்” என்று ஒருமுறை தந்தை பெரியார் கூறினார். பெரியார் சொல்கிற பேச்சில் உள்ள நோக்கத்தைப் புரிந்துகொண்டிருக்கிற பெரியார் சிந்தனையாளர்கள், ஜாதி மறுப்பாளர்கள், காந்தியவாதிகள், “ஜாதிகள் இல்லையடி பாப்பா, குல தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம்” என்று சொன்ன பாரதியை ஏற்றுக்கொண்டவர்கள், காமராஜரின் உண்மைப் பற்றாளர்கள் தவிர.

  பிறருக்கு ரஞ்சித் மேல் கோபம்தான் வரும். அவர்களும் ஏற்றுக்கொள்கிற வகையிலான வசனங்களை எழுதுவதற்கு ரஞ்சித்துக்குத் திறமை இருக்கிறது. அந்தத் திறனை உணர்ந்து ரஞ்சித் வசனங்களைக் கூர்மைப்படுத்தியிருக்கலாம்.

  மெட்ராஸ் திரைப்படத்தில், தாழ்த்தப்பட்டோரின் குடியிருப்பே கதைக்களம். ஆனால், ரஞ்சித்தை யாரும் குற்றம் சொல்ல முடியவில்லை. ஏனெனில், நேரிடையாகவே இது தாழ்த்தப்பட்டோரின் கதைக்களம் என்பதை வெளிப்படுத்தித் திரைக்கதை அமைத்திருந்தார்.

  தாழ்த்தப்பட்டவர்களின் கதைதான் இது என்று சொல்லியே இனிமேல் ரஞ்சித் படம் எடுக்கலாம்.

  ரஞ்சித் தன்னைத் தமிழராக நினைத்துக்கொண்டு எழுதிய வசனத்தை ‘தமிழர்கள்’ ஏற்றுக்கொள்ளாவிட்டால், தாழ்த்தப்பட்டவராக இருந்து படைக்கலாம். தாழ்த்தப்பட்டோர்களின் குரலை யாரும் புறக்கணிக்க முடியாது.

  ஆனால், எதைச் சொல்ல வருகிறீர்களோ அதைப் பட்டும்படாமல் சொல்லாதீர்கள். பட்டென்று சொல்லுங்கள். நீங்கள் இந்தப் படத்தில் இதைப் பற்றித்தான் சொல்லப்போகிறீர்கள் என்று தெரிந்து அதை விரும்பிப் பார்ப்பவர்கள் வரட்டும், வராதவர்கள் வராமலேயே போகட்டும்.

  லஞ்சத்துக்கு எதிரான படம், மத வன்முறைகளுக்கு எதிரான படம், ஆணாதிக்கத்துக்கு எதிரான படம், முதுமைக் காதலுக்கு ஆதரவான படம் என்றெல்லாம் படங்கள் வருவதுபோல், ஜாதி அடக்குமுறைக்கு எதிரான படம் என்று சொல்லியே படம் எடுக்கலாம்.

  உயர்ந்த ஜாதியினர் தங்களை அடையாளப்படுத்திக்கொள்வதற்கும், தாழ்த்தப்பட்டவர்கள் தங்களை அடையாளப்படுவதற்கும் வித்தியாசங்கள் உண்டு. தாங்கள் பெருமைக்குரிய ஜாதியைச் சார்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்வதற்கும் அழுத்தப்படுகிறவர்கள் என்று சொல்லிக்கொள்வதற்குமான வித்தியாசமே அது.

  தமிழ்த் திரையுலகைப் பொருத்தவரை, தான் இந்த ஜாதியைச் சார்ந்தவர் என்று வெளிப்படையாக முற்பட்டோரும் இதர பிற்படுத்தப்பட்டோரும் அறிவித்துக்கொண்டு, அந்தந்த ஜாதி விழாக்களில் பங்கேற்றுள்ளனர். ஆனால், தாழ்த்தப்பட்டோர் மட்டும் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டதில்லை. தங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்ற அச்சமே அதற்குக் காரணமாகும். ஆனால், இது மாயை என்று ரஞ்சித் உடைத்துக் காண்பித்திருக்கிறார்.

  தாழ்த்தப்பட்டோரின் உரிமைக்குக் குரல் கொடுப்பவர்களாக உச்ச நடிகர்கள் எம்ஜியார் உட்பட பலர் நடித்திருப்பார்கள். ஆனால், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த கதாபாத்திரமாக, முழுப்பட நாயகராக யாரும் நடித்ததில்லை. ரஞ்சித் படத்தில் மட்டும் அந்தக் கதாபாத்திரங்கள் உருவாகின்றன என்பதை உணர முடிகிறது. திரையுலகில் இருக்கும் மற்ற சமூகத்தினர், தாழ்த்தப்பட்டோர் கதாநாயகர் பாத்திரங்களை உருவாக்குகிறவரை ரஞ்சித்தை குறை சொல்வது ஏற்புடையதாகாது.

  - சி. சரவணன் - 9976252800

  இமெயில்: senthamizhsaravanan@gmail.com

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  flipboard facebook twitter whatsapp