
பிக் பாஸ் போட்டியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசன் மீது போட்டியாளர் ஆயிஷா குற்றம்சாட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 போட்டி கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா, விக்ரமன், ஆயிஷா, அமுதவாணன், பாடகர் ஏடிகே, மைனா நந்தினி, ஜனனி, அஷீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
முதல் இரண்டு வாரங்களில் பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே சுவாரஸ்யமாக பல்வேறு போட்டிகள் நடைபெற்ற நிலையில், சின்னத்திரை நடிகை சாந்தி வெளியேற்றப்பட்டார். தனிப்பட்ட காரணங்களுக்காக யூடியூபர் ஜி.பி.முத்து தானாக வெளியேறினார்.
இந்நிலையில், மூன்றாம் வாரம் தொடங்கியது முதல் பல்வேறு பிரச்னைகள் கிளம்பின. பொம்மை டாஸ்க் ஒன்று போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. அதில், செரினா மற்றும் நிவா கிழே விழுந்தது, தனலட்சுமியை அஷீம் தள்ளியது, சக போட்டியாளர்களை அஷீம் தவறாக கிண்டல் செய்தது எனப் பல்வேறு பிரச்னைகள் எழுந்தன.
இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் வார இறுதி நிகழ்ச்சி சனி, ஞாயிறுகளில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், அஷீமின் செய்த தவறை கமல் கடுமையாக கண்டித்த நிலையில், அஷீமும் சக போட்டியாளர்களிடம் மன்னிப்பு கோரினார். இதனைத் தொடர்ந்து அஷீமுக்கு ஆதரவாக செயல்பட்ட போட்டியாளர்களையும் கமல் எச்சரித்தார்.
சனிக்கிழமை நிகழ்வின்போது ஆயிஷாவின் பெயரை குறிப்பிட்டு கமல் அறிவுரை வழங்கினார். இந்த அறிவுரையை கேட்டு குழம்பிய ஆயிஷா, சக போட்டியாளர்களிடம், ’தற்போது என்னை குறிப்பிட்டு ஏன் அறிவுரை வழங்கினார்’ என்று புலம்பிக்கொண்டிருந்தார்.
தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை நிகழ்வு தொடங்கியவுடன், உடல்நலக் குறைவால் விளையாட பொம்மை டாஸ்க் விளையாட விருப்பம் இல்லை என்று கூறிவிட்டு ரச்சிதாவின் பொம்மையை வேண்டுமென்றே வெளியேற்றியது ஏன்? என்று ஆயிஷாவிடம் கமல் கூறினார்.
இதைக் கேட்டு கடுப்பான ஆயிஷா, நான் வேண்டுமென்றே பொம்மையை வெளியேற்றவில்லை எனக் குறிப்பிட்டதுடன், என்னைத் தவறாக சித்தரிக்காதீங்க என்றும் கமலிடம் நேருக்கு நேர் தெரிவித்தார்.
ஆயிஷாவின் குற்றச்சாட்டை கேட்டு சற்று அதிர்ந்த கமல், ’எனக்கு சித்தரிப்பது எல்லாம் தெரியாது’ என சிரித்தபடி கூறினார்.
தொடர்ந்து, நேற்றைய நிகழ்வு முழுவதும் அழுத முகத்துடன் காணப்பட்ட ஆயிஷா, கமல் பேசும்போது கூட அவரின் முகத்தை பார்க்காமல் வேறுபக்கம் பார்த்தபடி பதிலளித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதற்கிடையே, கமலிடம் மரியாதை இல்லாமல் பேசியதாக டிவிட்டர், யூடியூப் போன்ற பல்வேறு சமூக ஊடகங்களிலும் ஆயிஷாவுக்கு எதிரான கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.
அடிக்கடி உடல்நலக் குறைவால் பாதிக்கப்படும் ஆயிஷா, இனிவரும் டாஸ்குகளில் பங்கேற்பாரா? சக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டால் ரசிகர்களால் காப்பாற்றப்படுவாரா? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு வரும் நாள்களில் பதில் தெரியவரும்.
Ayesha accuses Kamal Sir of portraying her in a wrong manner
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.