தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

மத்திய அரசு உடனே தலையிடவேண்டும்: காவிரிப் பிரச்னை தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா அறிக்கை

காவிரிப் பிரச்னை தொடர்பாக கர்நாடகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில்... 

News image
Updated On :14 செப்டம்பர் 2016, 6:27 am

காவிரிப் பிரச்னை தொடர்பாக கர்நாடகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 

காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்னையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தமிழர்கள் மீதும், தமிழர்களின் உடைமைகள் மீதும் கொலை வெறித் தாக்குதல் நடத்தியும், வாகனங்களுக்குத் தீ வைத்தும், கர்நாடக அரசுடன் அரசியல் கட்சிகளும் கைகோத்துக்கொண்டு எங்கள் மக்கள் மீது தாக்குதல் நடத்துகிற கர்நாடக அமைப்புகளின் செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது.

ஒருவார காலமாக தமிழக - கர்நாடக எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவிய நிலையிலும், பெங்களூருவில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் கலவரங்களை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசின் செயல்பாடு கொஞ்சம் வேதனைக்குரியது. இதற்கு மேலும் தாக்குதல் நடக்காத வகையில், காவிரி நதிநீர் பிரச்னையில் மத்திய அரசு உடனே தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

தமிழகம் இன்றுவரை வந்தாரை வாழவைக்கும் தமிழகமாகத்தான் இருக்கிறது. தமிழன் தமிழ்நாட்டிலேயே மைனாரிட்டியாக இருக்கிறானோ என்கிற சந்தேகம் எழுகிறது. கர்நாடகாவில் வாழும் பல லட்சம் தமிழர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது மத்திய, மாநில அரசின் தலையாய கடமை என்பதை உணரவேண்டும்.

கர்நாடகாவில் சட்டம், ஒழுங்கு சீரழிந்துள்ளது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. 144 தடை உத்தரவுக்குப் பிறகும் இத்தகைய பெரிய கலவரங்களும், பேருந்து எரிப்புகளும் இன துவேஷத்தைத்தான் வளர்க்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்திய அரசு இதுவரை இந்தப் பிரச்னையில் தலையிடாதது பெருத்த வருத்தத்தை ஏற்படுத்துவதோடு, 500 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தேசத்தில் உள்ள ஒவ்வொரு தேசிய இனங்களும் தனித்தனியாக தங்களைத் தாங்களே ஆண்டதுபோல, ஏன் எங்களை ஆண்டுகொள்ளக்கூடாது என்கிற கேள்வியை எங்கள் இளைஞர் மனத்தில் விதைத்துவிடாதீர்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். நிலைமை மோசமடைவதற்கு முன்னால் மத்திய, மாநில அரசுகள் தங்களது கடமையைச் சரிவர செய்து அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று பாரதிராஜா தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.