திரைப்படப் பாடல்களும் பாலமுரளி கிருஷ்ணாவும்!

பாலமுரளி கிருஷ்ணா தமிழ்த் திரைப்படங்களில் பாடிய பாடல்களை நினைவூட்டினால்... 
திரைப்படப் பாடல்களும் பாலமுரளி கிருஷ்ணாவும்!

கர்நாடக இசை மேதை எம். பாலமுரளி கிருஷ்ணா இன்று நம்மிடையே இல்லாவிட்டாலும், அவர் விட்டுச்சென்ற இசை நுணுக்கங்கள், பாடிய பாடல்கள் தலைமுறைக்கும் பயணித்துக்கொண்டேதான் இருக்கும். தனது 15வது வயதில் 72 மேளகர்த்தாக்களை மனப்பாடம் செய்த குழந்தை மேதையாக திகழ்ந்தார். வயலின் கஞ்சிரா, மிருதங்கம் போன்ற இசை வாத்தியங்களை அவராகவே வாசித்துக் கற்றுக்கொண்டவர். கர்நாடக இசையில் பல சாதனைகள் புரிந்தவர்.

ஆனால், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் பாடியும் சாதனை புரிந்துள்ளார். பாலமுரளி கிருஷ்ணா தமிழ்த் திரைப்படங்களில் பாடிய பாடல்களை நினைவூட்டினால் “திருவிளையாடல்” படத்தில் வரும் “ஒரு நாள் போதுமா”, “கலைக்கோயில்” என்ற படத்தில் “தங்க ரதம் வீதியிலே”, கவிக்குயில் படத்தில் இடம்பெற்ற சின்னக்கண்ணன் அழைக்கின்றான் ஆகிய மூன்று பாடல்கள்தான் நினைவுக்கு வரும். 

இதுதவிர, இன்னும் ஏராளமான தமிழ்த் திரைப்படங்களில்  பாலமுரளி கிருஷ்ணா  பல ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார்.  

“பாண்டவர் வனவாசம்” என்ற திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழிலும் தெலுங்கிலும் தயாரிக்கப்பட்டது. அந்தப் படத்தில் பாடியுள்ளார்.

1966ம் ஆண்டு வெளிவந்த படம் “சாது மிரண்டால்”. இசை – டி.கே. ராமமூர்த்தி. நடிகர் டி.ஆர். ராமச்சந்திரனுக்காக பின்னணி பாடியிருப்பார். 

“அருள்வாயே நீ அருள்வாயே 
திருவாய் மலர்ந்து அருள்வாயே” 

உள்ளத்தில் கோயில் அமைத்தேனே தேவா
உன் பக்கம் எனை அழைத்தாயே தேவா

என்று பாடல் ஆரம்பிக்கும் இந்தப்பாடலை சிந்து பைரவி ராகத்தை அடிப்படையாகக் கொண்டு கம்போஸ் செய்யப்பட்டது.
1970ம் ஆண்டு வெளிவந்த படம் “கண்மலர்”. படத்துக்கு கே.வி. மகாதேவன் இசையமைத்திருப்பார். பட்டு இயக்கிய இந்தப் படத்தை மறைந்த நகைச்சுவை நடிகர் வி.கே. ராமசாமி தன் சகோதரர் வி.கே. ராமலிங்கத்துடன் இணைந்து தயாரித்திருப்பார். மறைந்த நடிகர் சித்தூர் வி. நாகையா, நடராஜர் சந்நிதி முன் நின்று பாடுவதாகக் காட்சி, பின்னணிக் குரலில் பாலமுரளி கிருஷ்ணா பாடியிருப்பார். 

முதல் பாடல்

ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்

ஓம் ஓம் ஓம் எனும் மந்திரத்தின் 
உட்பொருள் நாடுவார் 
என்று ஆரம்பமாகும் இந்தப்பாடல். அற்புதமான கிளாசிக் பாடல்.

இரண்டாவது பாடல்

அம்பலத்து நடராஜா உன் பலத்தை காட்டுவதற்கு
என் குலத்தை தேர்ந்தெடுத்ததேனய்யா?
உன் பதமே கதியென்று நம்பியவர் வீட்டிலே
கண் மறைக்கும் விளையாட்டு ஏனய்யா? 

என்று நடராஜன் சந்நிதியில் திடீரென்று சித்தூர் நாகைய்யா தோன்றிப் பாடி மறைந்து விடுவார். பாட்டை பின்னணியில் பாடியிருப்பார் பாலமுரளி கிருஷ்ணா. இவர் பாடி முடித்தவுடன், “பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க” என்று ஆரம்பித்து முழுப்பாடலையும் எஸ். ஜானகி பாடியிருப்பார். இன்றெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம் இந்தப் பாடலை. கண்ணதாசனின் ஆன்மீக வரிகளுக்கு இசை மாலை சூட்டியிருப்பார் கே.வி. மகாதேவன்.

1977ஆம் ஆண்டு, டி.என்.பாலு இயக்கத்தில் “உயர்ந்தவர்கள்” என்ற படம் வெளிவந்தது. கண்ணதாசன் வரிகளுக்கு சங்கர்-கணேஷ் இரட்டையர்கள் இசையமைத்திருப்பார்கள். கமலஹாசனும் சுஜாதாவும் காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். கோவிலில் பாலமுரளி கிருஷ்ணா கச்சேரி செய்வது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அந்தக் கச்சேரியில் பாடலைப்பாடி நடித்திருப்பார்

ராமா...... கிருஷ்ணா....
கிருஷ்ணா.... ராமா....

ராமனும் நீயே கிருஷ்ணனும் நீயே
ராதையின் வடிவம் சீதையின் தாயே
நாதனின் தரிசனம் கோதையின் யோகம்
ஸ்ரீராம சீதா நான் பாடும் ராகம் 

1977ஆம் ஆண்டு வெளிவந்த படம் “நவரத்தினம்” இசை குன்னக்குடி வைத்தியநாதன். இப்படத்தில் இரண்டு பாடல்கள் பாடியிருப்பார். ஒரு பாடல் தமிழ், தெலுங்கு, கன்னடம் & மேற்கத்திய இசையிலும் பாடியிருப்பார். இரண்டாவது பாடலை வாணி ஜெயராமோடு சேர்ந்து டூயட் பாடலாக பாடியிருப்பார். “குருவிக்கார மச்சானே” என்று அந்தப் பாடல் ஆரம்பிக்கும். இப்பாடல், நூறு சதவீத நாட்டுப்புறப்பாடல். நாட்டுப்புற பாடல் என்று கூட பார்க்காமல் மிகவும் அழகாக பாடியிருப்பார்.

1979ஆம் ஆண்டு கே. பாலசந்தர் இயக்கத்தில், கண்ணதாசன்  எழுதிய தத்துவ வரிகளுக்கு எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்த படம் நூல்வேலி. 

மவுனத்தில் விளையாடும் மனசாட்சியே
மவுனத்தில் விளையாடும் மனசாட்சியே
ஆயிரம் நினைவாகி ஆனந்தக் கனவாகி
ஆயிரம் நினைவாகி ஆனந்தக் கனவாகி

என்று இந்தப் பாடல் ஆரம்பமாகும். “நூல்வேலி” தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாரிக்கப்பட்டது. தெலுங்குப் பதிப்பிலும் பாலமுரளி கிருஷ்ணாதான் பாடியிருப்பார். தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்த பாடல்.

1981ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் “தெய்வத் திருமணங்கள்” இப்படத்தில் மூன்று கதைகள். 1. மீனாட்சி கல்யாணம் 2. வள்ளித் திருமணம் 3. சீனிவாசா கல்யாணம். மூன்று கதைகளுக்கும் மூன்று வெவ்வேறு இயக்குநர்கள் & இசையமைப்பாளர்கள். சீனிவாசா கல்யாணம் கதைக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருப்பார். பாடலை வாணி ஜெயராமோடு சேர்ந்து பாலமுரளி கிருஷ்ணா பாடியிருப்பார். வாணி ஜெயராம் பாடியவுடன்

செங்கண் நெடுமால் திருக்கோலம்
திகளும் அழகு மணக்கோலம்

என்று அந்தப்பாடல் ஆரம்பமாகும். சீனிவாசா கல்யாணத்தில் தாயே தன் மகளுக்கு அலங்கரித்து விடுவார். அதைக் கவிஞர் கண்ணதாசன்

“சங்கமமாகும் நாயகனை
தாய் தன் கையால் சிங்காரித்தாள்” 

என்று எழுதிய வரிகளை இனிமையான குரலில் பாலமுரளி கிருஷ்ணா பாடியிருப்பார். இந்தப்பாட்டுக்கு இது ஒரு சிறிய உதாரணம். பாட்டைக் கேட்டால், தாயா தன் மகன் கல்யாணத்திற்கு அலங்கரித்து விடுகிறாள் என்று வியப்பு ஏற்படும். 

1986ஆம் ஆண்டு வெளிவந்த படம் “மகாசக்தி மாரியம்மன்” கே.வி. மகாதேவன் இசையமைத்த படம். சதாசிவ பிரம்மேந்திரர் பற்றிய ஒரு பாடலை பாலமுரளிகிருஷ்ணாவைக்கொண்டு பாட வைத்திருப்பார் இசையமைப்பாளர்.

மேற்சொன்ன  படங்கள் தவிர, பாலமுரளி கிருஷ்ணா, சுபதினம், இசைபாடும் தென்றல், குமார சம்பவம், திசை மாறிய பறவைகள், வடைமாலை, தாய் மூகாம்பிகை, சிகரம், சுப்ரமணியபுரம் பசங்க மற்றும் பிரபா ஆகிய தமிழ்த் திரைப்படங்களிலும் பாடியிருக்கிறார்.

பாலமுரளி கிருஷ்ணாவின் தாய்மொழி தெலுங்காக இருந்தாலும், தமிழ்நாட்டில் வாழ்ந்து, கன்னட மொழி படமான “ஹம்சகீதே” படத்தில்  “ஹிமத்ரி சுதே பாகிமாம்” பாடலை பாடியதற்காக சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை 1976ஆம் ஆண்டு பெற்றார். இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பம்சம், இசையும் பாலமுரளி கிருஷ்ணாவே. சிறந்த பின்னணி பாடகருக்கான கன்னட மாநில விருதையும் பெற்றார். இந்தப் படத்தை தயாரித்தவர் ஜி.வி. அய்யர். இதிலிருந்தே பாலமுரளி கிருஷ்ணாவின் தேசிய ஒருமைப்பாடு எல்லாருக்கும் புரியும். இந்தப் படத்துக்கு பிறகு தொடர்ந்து “ஆதி சங்கராச்சாரியா” (1983), மாதவாச்சாரியா (1986), ராமானுஜாச்சாரியா (1989), பகவத் கீதா (1993) ஆகிய நான்கு படங்களுக்கு பாலமுரளி கிருஷ்ணா இசையமைத்தார். நான்கு படங்களையும் தயாரித்தவர் ஜி.வி. அய்யர். இந்த நான்கு படங்களில் “பகவத் கீதா” சமஸ்கிருத மொழியில் எடுக்கப்பட்டது.

“மாதவாச்சாரியா”  கன்னடப்படத்துக்குச் சிறப்பாக இசையமைத்ததற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை இரண்டாவது முறை பெற்றார்.

ஒரு சில மலையாள திரைப்படங்களிலும் பாலமுரளி கிருஷ்ணா பாடியுள்ளார். சுவாதித் திருநாள் என்ற மலையாள படத்தில் பாடியதற்காக சிறந்த பின்னணிப் பாடகருக்கான கேரள அரசின் மாநில விருது 1987ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. 

பாலமுரளி கிருஷ்ணா கண்டுபிடித்த “மகதி” ராகத்தை மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் கே. பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த “அபூர்வராகங்கள்” படத்தில் பயன்படுத்தியிருப்பார். 

பாலமுரளி கிருஷ்ணா கர்நாடக இசையில் பெரிய  அளவில் சாதனை பண்ணியிருந்தாலும் தென்னிந்திய தமிழ்த் திரைப்படங்களிலும் பல சாதனைகள் புரிந்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com