மேலூர் தம்பதி தொடர்ந்த வழக்கு: நடிகர் தனுஷுக்கு ஆதரவாக தீர்ப்பு!

மேலூர் தம்பதி தொடர்ந்த வழக்கு: நடிகர் தனுஷுக்கு ஆதரவாக தீர்ப்பு!

தனுஷ் தங்கள் மகன் என்றும், பிளஸ் 2 படித்த போது சென்னைக்குச் சென்றவர் தங்களைக் கைவிட்டு விட்டதாகவும், தங்கள் வாழ்க்கை செலவுக்கு மாதந்தோறும் பணம் தர வேண்டும் எனவும்...

நடிகர் தனுஷ் தங்கள் மகன் எனக் கூறி மேலூரைச் சேர்ந்த தம்பதியர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.

தனுஷ் தங்கள் மகன் என்றும், பிளஸ் 2 படித்த போது சென்னைக்குச் சென்றவர் தங்களைக் கைவிட்டு விட்டதாகவும், தங்கள் வாழ்க்கை செலவுக்கு மாதந்தோறும் பணம் தர வேண்டும் எனவும், மேலூரைச் சேர்ந்த கதிரேசன்- மீனாள் தம்பதியர் மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அதில், தனுஷ் தங்கள் மகன் தான் என்று நிரூபிக்க போதிய ஆதாரங்கள் உள்ளன. அவரது இடது காரை எலும்பின் மேல் ஒரு மச்சமும், இடது முழங்கையில் ஒரு தழும்பும் இருப்பதாக குறிப்பிட்டிருந்தனர். இதையடுத்து, மேலூர் தம்பதியர் குறிப்பிட்டுள்ள அங்க அடையாளங்கள் நடிகர் தனுஷின் உடலில் உள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டியுள்ளது என்று கூறி நடிகர் தனுஷை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றத்தில் ஆஜரான தனுஷின் உடலில் உள்ள அங்க அடையாளங்களை பதிவாளர் (நீதித்துறை) முன்னிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் தலைமையிலான மருத்துவர்கள் ஆய்வு செய்தனர். பிறகு தனுஷின் உடலில் உள்ள அடையாளங்களைச் சோதனையிட்ட மருத்துவர்கள், அது தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்தனர். மதுரை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டீன் வைரமுத்து ராஜா இணையத்தளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். தனுஷின் உடலில் மேலூர் தம்பதியர் சொன்ன அங்க அடையாளங்கள் இல்லை. அதேபோல மச்சத்தை அழிக்க முயற்சி நடந்திருந்தால் அதற்கான அடையாளங்கள் நிச்சயம் இருக்கும் என்றும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். அங்க அடையாளங்களைத் தடயமில்லாமல் அழிப்பது கடினம் என்று கூறினார். 

இவ்வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடிகர் தனுஷ் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் தனுஷுக்கு ஆதரவாகத் தீர்ப்பு கிடைத்துள்ளது. மேலூர் தம்பதியரின் மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com