
திருவனந்தபுரம்: மம்முட்டி பட வசனங்கள் பெண் வெறுப்பினைத் தூண்டும் விதமாக அமைந்துள்ளது என்று தைரியமாக விமர்சித்த நடிகை பார்வதியை, மம்முட்டியின் ரசிகர்கள் சமூக வலை தளங்களில் தொடர்ந்து கேலி,கிண்டல் செய்து வருகின்றனர்.
பிரபல மலையாள நடிகை பார்வதி. இவர் பூ, மரியான் மற்றும் உத்தம வில்லன் உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானவர். சமீபத்தில் கேரளாவில் நடந்து முடிந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் 'டேக் ஆப்' என்ற படத்துக்காக சிறந்த நடிகை விருது பெற்றவர். அத்துடன் கேரள அரசின் சிறந்த நடிகை மாநில விருதும் பெற்றுள்ளார்.
இவர் சமீபத்தில் இந்திய சர்வதேச திரைப்பட விழாவினை ஒட்டி 'திரைப்படங்களில் சரியான பெண்ணிய பார்வை இல்லாமை' என்ற தலைப்பில் நடந்த விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அதில் அவர் தனது கருத்தினை வலியுறுத்திக் கூறுவதற்காக, 'தான் 'கஸாபா' என்ற படத்தினை பார்த்ததாகவும், அதில் ஒருமுக்கிய நடிகர் பெண் வெறுப்பினை தூண்டும் விதமாமான வசனங்களைப் பேசி இருப்பதாகத் தெரிவித்தார். அத்துடன் ஒரு உச்ச நட்சத்திரம் இத்தகைய வசனங்களைப் பேசுவது ரசிகர்களிடம் தவறான முன்னுதாரணத்தினை உண்டாக்கும் என்றும் தெரிவித்தார்.
அவர் குறிப்பிட்ட படமான 'கஸாபா' மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்த படம் என்பதால், அவரது ரசிகர்கள் உடனடியாக சமூக வலைத்தளங்களில் நடிகை பார்வதியினை கடுமையாக விமர்சிக்கத் துவங்கினர். அத்துடன் அவர் மீது ஏராளமான வசைகளும்,கேலி கிண்டல் உள்ளிட்ட செய்கைகளும் நடந்தன. அதிகபட்சமாக அவரை ஒரு 'கீழ்த்தரமான பென்ணியவாதி என்றும் மம்முட்டி ரசிகர்கள் விமர்சித்தனர்.
இதன் காரணமாக பார்வதி தொடர்ச்சியான ட்வீட்டுகளால், ஒரு நடிகர் வேறு வேறு கதாபாத்திரங்களில் நடிப்பதை தான் குறை சொல்லவில்லை; ஆனால் நீதியற்ற தன்மை மற்றும் வன்முறையினை வெகுமக்களுக்குப் பிடிக்கும் என்ற பெயரில் செய்யக் கூடாது என்று கூறியதாக தெளிவுபடுத்தினார்.ஆனாலும் கிண்டல்கள் உடனடியாகக் குறையவில்லை.
இந்நிலையில் நடிகை பார்வதிக்கு ஆதரவாக மாநில நிதியமைச்சர் ஐசக் தாமஸ் ட்வீட் செய்திருந்தார். ஆனால் தற்பொழுது வரை நடிகர் மம்முட்டி இது தொடர்பாக எதுவும் கருத்துக் கூறவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.