செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

என் மகள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி, கொல்லப்பட்டார்: நடிகை பிரதியுஷாவின் தாய் குற்றச்சாட்டு!

தவசி, மனுநீதி, சவுண்ட் பார்ட்டி போன்ற தமிழ்ப் படங்களில் நடித்த நடிகை பிரதியுஷா, 2002-ம் ஆண்டு...

News image
Updated On :6 நவம்பர் 2017, 7:26 am

எழில்

நடிகை பிரதியுஷா இறந்து 15 வருடங்களாகிவிட்டன. தவசி, மனுநீதி, சவுண்ட் பார்ட்டி போன்ற தமிழ்ப் படங்களில் நடித்த நடிகை பிரதியுஷா, 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் அது தற்கொலை அல்ல, என் மகள் கொலை செய்யப்பட்டார் என்று பிரதியுஷாவின் தாய் சரோஜினி பேட்டியளித்துள்ளார்.

பிரதியுஷா, சித்தார்த் என்பவரைக் காதலித்தார். ஆனால் இந்தக் காதலை இருவீட்டாரும் மறுத்ததால் இருவரும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்ததாகக் கூறப்பட்டது. பிறகு இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். அதில் பிரதியுஷா மரணமடைய, சித்தார்த் சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தார். தற்கொலைக்கு முயற்சி செய்ததற்கும் பிரதியுஷாவின் தற்கொலைக்கு உடந்தையாக இருந்ததற்கும் சித்தார்த்துக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை கிடைத்தது. 

தனது மகளின் மரணம் குறித்து நடிகை பிரதியுஷாவின் தாய் சரோஜினி தெலுங்கு ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

பிப்ரவரி 23, 2002 அன்று அடுத்த நாள் நடைபெறவிருந்த கன்னடப் படத்தின் தொடக்க விழாவுக்காக பெங்களூர் செல்ல ஆயத்தமாக இருந்தார் பிரதியுஷா. நல்ல உடல்நிலையுடன் அப்போதுதான் என் மகளைப் பார்த்தேன்.

சித்தார்த்துடனான என் மகளின் காதலை நான் ஏற்றுக்கொண்டேன். திருமணத்துக்கு முன்பு இருவரும் அவரவர் தொழிலில் கவனம் செலுத்தவேண்டும் என்று அறிவுரை வழங்கினேன்.

என் மகள் தற்கொலை செய்திருக்கமாட்டாள், அவளுடைய திரையுலக வாழ்வு நன்றாகச் சென்றுகொண்டிருந்ததால் இம்முடிவை அவள் எடுத்திருக்க வாய்ப்பில்லை.

என் மகளின் இறுதிச்சடங்குகளின்போது எனக்கு எந்தச் சந்தேகமும் வரவில்லை. என் மகளின் மரணத்துக்குப் பலர் காரணம் என்று தெரிந்திருந்தால் அவளை அடக்கம் செய்ய அனுமதித்திருக்க மாட்டேன்.

என் மகளின் மரணத்துக்குக் காரணமான உண்மைகளை மறைக்க சதி நடந்தது. ஏனெனில் என் மகளின் மரணத்தில் தெலுங்கு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்புகொண்டிருந்தார்கள்.

சம்பவத்தன்று அவளைப் பலர் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றிருக்கிறார்கள். அவள் வாயில் வலுக்கட்டாயமாக விஷம் ஊற்றியுள்ளார்கள். அவளுடைய காதலர் தன் உதட்டில் விஷத்தைத் தடவிக்கொண்டு மயக்கம் அடைந்ததுபோல் நடித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் விடுதலை ஆகியிருக்கலாம். ஆனால் ஆண்டவன் அவர்களைத் தண்டிப்பார் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.