அன்புச்செழியன் அலுவலகத்தில் காவல்துறையினர் சோதனை!
சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியன் அலுவலகத்தில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளார்கள்...


சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியன் அலுவலகத்தில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளார்கள்.
வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த திரைப்படத் தயாரிப்பாளர் அசோக்குமார், கடந்த 21-ம் தேதி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். திரைப்பட இயக்குநரும் நடிகருமான சசிகுமாரின் மைத்துனரான அசோக்குமார், தனது இறப்புக்கு திரைப்பட ஃபைனான்சியர் அன்புச்செழியனே காரணம் என கடிதம் எழுதி வைத்திருந்தார். இதுதொடர்பாக வளசரவாக்கம் போலீஸார், அன்புச்செழியன் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து 3 தனிப்படைகள் மூலம் தேடுதல் பணியை மேற்கொண்டுள்ளனர்.
தலைமறைவாக இருக்கும் அன்புச்செழியனை தீவிரமாக தேடி வரும் நிலையில், அவரது மேலாளர் முருகனை காவல்துறையினர் விசாரணை செய்தார்கள். விசாரணையின் முடிவில் வளசரவாக்கம் காவல்துறையினர் முருகனைக் கைது செய்தார்கள். அன்புச்செழியனின் நெருங்கிய நண்பர் சென்னை ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த கட்டுமான நிறுவன உரிமையாளர் முத்துக்குமாரிடம் போலீஸார் செவ்வாய்க்கிழமை தீவிர விசாரணை மேற்கொண்டனர். அன்புச்செழியன் தலைமறைவாக இருப்பது தொடர்பான முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில், போலீஸார் அன்புச்செழியனை விரைவில் கைது செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்பட்டது.
அன்புச்செழியன் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் அன்புச்செழியன் தாக்கல் செய்த மனு விவரம்:
கடந்த 30 ஆண்டுகளாக சினிமாத் துறையினருடன் தொடர்பில் இருந்து வருகிறேன். அசோக்குமார் விவகாரத்தில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை. சசிகுமார் நடித்த தாரைதப்பட்டை படத்துக்கு நான் நிதி உதவி செய்தேன். அந்தப் படம் நஷ்டமடைந்தது. நான் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டேன். அவர்கள் கொடிவீரன் படத்தின் மூலம் எனது கடனை அடைப்பதாகக் கூறினார்கள். ஒரு படத்துக்கு நிதி உதவி செய்வதும் அந்தக் கடனை படத்தைத் திரையிடும் முன் வட்டியுடன் சேர்த்து வசூலிப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், இந்த விவகாரத்தில் வட்டிக்கு மேல் வட்டி கேட்டு மிரட்டியதாகவும் மிரட்டல் விடுத்ததாகவும் என் மீது உண்மைக்குப் புறம்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அசோக்குமாரின் தற்கொலைக்கும் எனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. எனவே, எனக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும். தேவைப்படும்போது விசாரணை அதிகாரி முன் ஆஜராக உத்தரவாதம் அளிப்பதாக அந்த மனுவில் கோரியிருந்தார். ஆனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை அன்புச்செழியன் இன்று வாபஸ் பெற்றுள்ளார். இதையடுத்து அவர் விரைவில் காவல்துறையினரிடம் சரணடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அன்புச்செழியன் தலைமறைவாக உள்ள நிலையில் அவருடைய அலுவலகத்தில் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளார்கள். கந்துவட்டி தொடர்பான ஆதாரங்கள் அலுவலகத்தில் உள்ளனவா என நீதிமன்ற அனுமதியுடன் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...