தந்தை நடித்ததில் பிடித்த படம் எது? பதில் சொல்கிறார்கள் வாரிசு நடிகர்கள்!

சர்வ தேச தந்தையர் தினத்தை முன்னிட்டு 80 களில் பிரபல நட்சத்திரங்களாகக் கலக்கிய சில நடிகர்களின் வாரிசுகளும், இன்றைய பிரபல நடிகர்களுமான சிலரிடத்தில் அவரவர் அப்பாக்கள் நடித்ததில் இவர்களுக்குப் பிடித்த
தந்தை நடித்ததில் பிடித்த படம் எது? பதில் சொல்கிறார்கள் வாரிசு நடிகர்கள்!
Published on
Updated on
3 min read

நேற்று தந்தையர் தினம்...

‘சர்வ தேச தந்தையர் தினத்தை’ முன்னிட்டு 80 களில் பிரபல நட்சத்திரங்களாகக் கலக்கிய சில நடிகர்களின் வாரிசுகளும், இன்றைய பிரபல நடிகர்களுமான சிலரிடத்தில் அவரவர் அப்பாக்கள் நடித்ததில் இவர்களுக்குப் பிடித்த திரைப்படங்கள் எவை? என கேட்கப் பட்டது. அதில் ஒவ்வொரு வாரிசு நடிகரும் அவரவருக்கு பிடித்த வகையில் சுவாரஸ்யமாகச் சில படங்களைப் பட்டியலிட்டுள்ளனர். 

நடிகர் விக்ரம் பிரபுவுக்கு, தன் தந்தை பிரபு நடித்ததில் ‘அக்னி நட்சத்திரம்’ திரைப்படம் தான் மனம் கவர்ந்த திரைப்படமாம். இயல்பில் வெகு இனிமையானவரான தன் அப்பாவை சற்றே கர்வமும், கோபமும் நிறைந்த அந்தப் பாத்திரத்தில் நடிக்க வைத்து, படத்தை வெற்றிப்படமாக்கிய இயக்குனர் மணிரத்னத்தின் மீது விக்ரம் பிரபுவுக்கு எப்போதுமே மிகுந்த பிரமிப்பு உண்டாம்.

'கட்டப்பா' சத்யராஜ் மகனான நடிகர் சிபி ராஜுக்கு அப்பா நடித்ததில் பிடித்த படமென்றால் உடனே நினைவுக்கு வருவது அது அமைதிப் படை அமாவாசை கதாபாத்திரம் மட்டுமே. அந்தப் படம் மீண்டும் எடுக்கப் பட்டால் வேறு யாரையும் அந்த கதாபாத்திரத்தில் பொறுத்திப் பார்க்கவே முடியாது. அவரே திரும்பவும் அந்தப் படத்தில் நடித்தால் மட்டுமே அந்த கதாபாத்திரம் பூர்த்தி அடையும் என்கிறார் சிபிராஜ். அமைதிப்படை தவிர அப்பா நடித்ததில் சிபிக்கு மிக இஷ்டமான படம் ‘பூவிழி வாசலிலே’ அப்பா நடித்த பிற அரசியல் நையாண்டி, புரட்சி, வில்லத் தனம் கலந்த நாயகன், காதல், காமெடிப் படங்களிடையே இந்தப் படம் முற்றிலும் வித்யாசமானது. வாய் பேச முடியாத குழந்தையுடன் அவர் உரையாடுவது மாதிரியான காட்சிகள் இந்தப் படத்தில் என்னை மிகவும் கவர்ந்தவை என்கிறார் சிபிராஜ்.

இயக்குனரும், பிரபல நடிகருமான பாக்யராஜ் மகன் நடிகர் சாந்தனுவுக்கு அவரது அப்பா நடித்த படங்களில் மிகப் பிடித்தமானது என ஒரு சின்ன லிஸ்ட் வைத்திருக்கிறார். அப்பா சர்க்கஸ் பபூன் போல வேடமிட்டு வங்கியைக் கொள்ளையடிக்கும் காட்சியுடன் கூடிய ‘ருத்ரா’ திரைப்படம், ராசுக்குட்டி, தாவணிக்கனவுகள், விடியும் வரை காத்திரு, டார்லிங்...டார்லிங்...டார்லிங் உள்ளிட்ட திரைப்படங்கள் தன்னால் என்றுமே மறக்க முடியாத திரைப்படங்கள் எனக் குறிப்பிடுகிறார் சாந்தனு பாக்யராஜ். இவற்றுள் தாவணிக் கனவுகளை தன் அப்பாவின் ‘பயோ பிக்’ வாழ்க்கைச் சித்திரம் என்று சொன்னாலும் தவறில்லை என்கிறார் சாந்தனு.

இந்த நடிகர்களை எல்லாம் அவரவர் அப்பா நடித்த படங்களில் தங்களுக்குப் பிடித்த படங்களை பட்டியலிட வைத்த  இந்த ‘சர்வதேச தந்தையர் தினம்’ எப்படி வந்தது தெரியுமா?

சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டிலும் ஜூன் 3-ஆவது ஞாயிறுக்கிழமை தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதன்படி இந்த ஆண்டில் ஜூன் 18-ல் தந்தையர் தினம் அனுசரிக்கப்பட்டது.

தந்தையர் தினம் கொண்டாடப்படுவதின் பின்னணியில் சுவாரசியமான வரலாறு உள்ளது. தந்தையர் தினம் உருவாகக் காரணமாக இருந்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த சோனோரா ஸ்மார்ட் டோட் என்ற பெண் ஆவார். தனது தந்தையின் தியாகத்தைப் போற்றும் வகையில் இவர்தான் முதலில் தந்தையர் தினத்தை உருவாக்கினார்.

அமெரிக்காவின் அர்கான்சா மாகாணத்தில் 1882-ஆம் ஆண்டு சோனோரா பிறந்தார். அவருக்கு 16 வயது இருந்தபோது தாய் இறந்துவிட்டார். அதன் பிறகு அவரது தந்தை வில்லியம் ஸ்மார்ட், சோனோராவையும் அவருடைய 5 சகோதரர்களையும் மிகவும் சிரமப்பட்டு வளர்த்து ஆளாக்கினார்.

ஒருமுறை அன்னையர் தினத்தை முன்னிட்டு தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் சோனோரா தனது தந்தையுடன் பங்கேற்றார். அப்போது, தன்னையும் தனது சகோதரர்களையும் வளர்த்து ஆளாக்கிய தனது தந்தையின் தியாகத்தைப் போற்றும் வகையில் தந்தையர் தினத்தை அனுசரிக்க அவர் முடிவு செய்தார். பின்னர், வில்லியம் உள்நாட்டுப் போரில் உயிரிழந்தார். தந்தையின் நினைவாக அவரது பிறந்த தினமான ஜூன் 5-ஆம் தேதியை சோனோரா, தந்தையர் தினமாக முதன்முதலில் அனுசரிக்கத் தொடங்கினார். தந்தையர் தினம் கொண்டாடும் தனது யோசனையை அமெரிக்க அரசுக்கும் சோனோரா அனுப்பிவைத்தார். முதலில் இரு மாகாண அரசுகள் அவரது யோசனையைப் பரிசீலிக்க குழு அமைத்தது.

பின்னர் காலமாற்றத்தில் ஜூன் 3-ஆவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக கொண்டாடப்பட்டது. அமெரிக்க அரசும் தந்தையர் தினத்துக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்தது.

இப்படித்தான் சர்வதேச தந்தையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மூன்றாம் வாரத்தில் உலகம் முழுதும் கொண்டாடப் படத் தொடங்கியது.

அது சரி நேற்று நீங்கள் உங்கள் அப்பாவுக்கு சொன்னீர்களா? தந்தையர் தின வாழ்த்துகள்!

சொல்ல மறந்திருந்தால் இன்று கூட சொல்லி விடலாம். அப்பாக்கள் மகிழ்வார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com