திருநங்கைகளைப் போற்றும் 'அவள் நங்கை' குறும்படம்!

இந்தப் படம் திருநங்கைகளின் திறமைகளுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்ற கருத்தை அழுத்தமாக முன்வைத்துள்ளது.
திருநங்கைகளைப் போற்றும் 'அவள் நங்கை' குறும்படம்!

யூ-டியூப்பில் அவள் நங்கை எனும் குறும்படம் காணக் கிடைத்தது. தர்மதுரை படத்தில் நடித்த திருநங்கை ஜீவா இந்தப் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இந்தப் படம் திருநங்கைகளின் திறமைகளுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்ற கருத்தை அழுத்தமாக முன்வைத்துள்ளது. அப்படி என்ன கதை. மிகச் சிறிய கதைதான்.

ஆனால், மிகவும் வலிமையான கதையை எளிமையாகக் கையாண்டிருக்கின்றனர் இயக்குநர் ஹரி பிரகாஷ் மற்றும் அவரது குழுவினர்.
முந்தைய காலங்களில் சினிமா துறைக்குள் நுழைவது மிகவும் கடினமானதாக இருந்து வந்தது. இப்போது நம் கையில் இருக்கும் கைப்பேசிக்குள் சினிமா அடங்கிவிட்டது என்று கூறினால் மிகையல்ல.
யாரும் படம் எடுக்கலாம். ஆனால், எந்த மாதிரியான கதையைக் கையாள்கிறோம் என்பதே முக்கியம். யூ-டியூப்பில் அதிக எண்ணிக்கையிலான குறும்படங்களும், தொடர் கதைகளும், பாடல்களும் குவிந்து கிடக்கின்றன. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட பல மொழிகளிலும் விடியோக்கள் பொழுதைப் போக்குவதற்காகக் காத்திருக்கின்றன.
ஆனால், அவை அனைத்தும் எத்தனை பேருக்குச் சென்று சேர்கிறது என்பது கேள்விக்குறி. ஸ்மார்ட்ஃபோன்களை அதிக அளவில் பயன்படுத்துவது இளைஞர்கள் தான். அவர்களை ரசிக்க வைக்க வேண்டும் என்று காதல், காமெடி என வழக்கமான பாணியைக் கையாண்டே  பல படங்களும், பாடல்களும் வந்த வண்ணம் இருக்கின்றன. ”திரைமொழியைப் பயன்படுத்தி பல நல்ல கருத்துகளை பதிவு செய்வது தேவையில்லாதது.

பொழுதுபோக்கு அம்சங்களே தேவை” என்று நினைப்பவர்கள் இங்கே இருக்கிறார்கள். ஆனால், குறைந்த அளவிலான பார்வையாளர்களைச் சென்றுசேர்ந்தால்கூட போதும், நல்ல கருத்தை அவர்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று இயங்கும் குழுக்களும் இங்கே இருக்கின்றன.
அப்படிப்பட்ட குழுக்களில் ஒன்றுதான் ஹரி பிரகாஷ் தலைமையிலான “ரோட்ஸைடு ரோமியோஸ்” குழு. இவர்கள் தயாரித்த படம்தான் அவள் நங்கை. ஒரு இயக்குநர், உதவி இயக்குநர்களுடன் சேர்ந்து தங்கள் படத்துக்காக நடிகர்களைத் தேர்வு செய்துகொண்டிருப்பது படம் தொடங்குகிறது.

அந்தத் தேர்வுக்கு திருநங்கை ஒருவரும் வருகிறார். அவரை இயக்குநர் அவமதிக்கிறார். ஒரு வாய்ப்பை கொடுங்கள் என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்திக் காட்டுகிறேன் என்கிறார் திருநங்கை. ஒரு வழியாக சமாதானம் அடையும் இயக்குநர் அவருக்கான காட்சியை விளக்கி, நடித்து காண்பிக்குமாறு கூறுகிறார். மிக அசாதாரணமாக அந்தக் காட்சியை நடித்துக் காண்பிக்கிறார் திருநங்கை ஜீவா. இறுதியில், அந்தப் படத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கிறதா? அவரை நடித்துக் காண்பிக்க சொன்ன காட்சி என்ன? என்பதை திரையில் காணுங்கள்.

ஜீவா, வாய்ப்பு கிடைத்தால் திரையுலகில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வார் என்பது உறுதி.
ரவி சக்தியின் கேமரா கோணங்கள் அருமை. இசையும் சிறப்பாக இருக்கிறது. இயக்குநர் ஹரியை தொடர்புகொண்டு பேசினேன். “எனக்கு சொந்த ஊர் தர்மபுரி. கல்லூரி வாழ்க்கைக்கு பிறகு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தேன். அதன்பிறகு, பெற்றோரிடம் அனுமதி பெற்று திரைத்துறையில் தடம் பதிக்க முயற்சி செய்து வருகிறேன். இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு ஆல்பம் பாடல் ஒன்றை தயாரித்தேன். அதன் பிறகு சமூகத்துக்கு நல்ல கருத்துகளை சொல்ல வேண்டும் என்ற நோக்கில் குறும்படங்களை இயக்கி வருகிறேன். அவள் நங்கையில் நடித்த ஜீவா எங்கள் குழுவில் இருப்பவர் என்பதில் எங்களுக்கு பெருமை.
இந்தப் படத்தின் யூ-டியூப் லிங்க்கை தங்கள் டுவிட்டவர் பக்கத்தில் நடிகர்கள் மாதவன், ஜி.வி.பிரகாஷ் குமார், இயக்குநர் சீனு ராமசாமி ஆகியோர் பகிர்ந்து கொண்டர். அவர்களின் பாராட்டும்,  கேரளத்தில் இருந்து ஒரு திருநங்கை பாராட்டியதையும் நான் மிகவும் பெருமையாகக் கருதுகிறேன்.

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு குறும்படத்தை தற்போது இயக்கி வருகிறேன்” என்கிறார் வெள்ளித்திரையிலும் நாளை ஜொலிக்கப்போகும் நம்பிக்கை இயக்குநர் ஹரி பிரகாஷ். திருநங்கைகளின் திறமையை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் “அவள் நங்கை”யை எடுத்த ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துகள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com