இளையராஜா இசை நிகழ்ச்சி நடைபெறுவதை யாராலும் தடுக்க முடியாது: விஷால் ஆவேசம்
பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவைக் கெளரவிப்பதற்காக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில்...


பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவைக் கெளரவிப்பதற்காக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இசையராஜா - 75 என்கிற பெயரில் இசை விழா ஒன்று நடைபெறவுள்ளது. அடுத்த வருடம் பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகங்களின் பிரபல நட்சத்திரங்களும் இளையராஜாவுடன் பணியாற்றிய இயக்குநர்களும் இவ்விழாவில் கலந்துகொள்ளவுள்ளார்கள். இந்த இரு தேதிகளிலும் தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இளையராஜா இசை நிகழ்ச்சி தொடர்பாக தயாரிப்பாளர்கள் அனைவரையும் விஷால் கலந்தாலோசிக்கவில்லை என்று தயாரிப்பாளர்களின் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
இதன் விளைவாக, விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகத்தைக் கண்டித்து தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் சென்னையில் நேற்று போராட்டம் நடத்தினார்கள். பொதுக்குழுவிடம் ஆலோசிக்காமல் விஷால் தன்னிச்சையாக முடிவு எடுக்கிறார். பிரச்னைகள் தொடர்பாகப் பொதுக்குழுவைக் கூட்டவேண்டும் என்று போராட்டம் நடத்திய தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்தார்கள். கடந்த நிர்வாகம் சேமித்து வைத்த ரூ. 7 கோடி வைப்பு நிதி என்ன ஆனது என்றும் இவர்கள் கேள்வியெழுப்பினார்கள். மேலும் விஷால் குறித்து முதலமைச்சரிடம் முறையிட உள்ளதாகவும் அவர்கள் கூறினார்கள். விஷால் பதவி விலகக் கோரி, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் இரு அலுவலகங்களுக்குத் தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் பூட்டு போட்டார்கள்.
இந்த விவகாரம் குறித்து விஷால் தரப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்கள். இதையடுத்து தியாகராய நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்குப் போட்ட பூட்டை உடைக்க விஷால் இன்று வந்தார். ஆனால் பூட்டை உடைக்கக் காவல்துறையினர் அனுமதி மறுத்தார்கள். பதிவுத்துறையினர் வந்து பூட்டைத் திறப்பார்கள் என்று காவலர்கள் விஷாலிடம் தகவல் தெரிவித்தார்கள். இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார் விஷால். எதிர்தரப்பினர் போட்ட பூட்டை உடைக்க அனுமதி மறுத்ததால் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விஷால் மற்றும் அவருடைய ஆதரவு தயாரிப்பாளர்கள் பலரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்கள். இந்த விவகாரம் தொடர்பாக பாரதிராஜா, ஏ.எல். அழகப்பன், எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் தமிழக முதல்வரை இன்று சந்தித்தார்கள். விஷாலுக்கு எதிரான புகார் மனு முதல்வரிடம் அளிக்கப்பட்டது. சிறப்பு அதிகாரியை நியமித்து ஒரு நிர்வாகக் குழுவை அமைக்கவேண்டும். விஷால் தலைமையிலான நிர்வாகக் குழுவின் கணக்குகளுக்கு விளக்கம் கேட்கவேண்டும். 4 மாதங்களில் முறையாகத் தேர்தல் நடத்தவேண்டும் போன்ற கோரிக்கைகள் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளன. இறுதியாக, தயாரிப்பாளர் சங்க அலுவலகங்களில் எதிரணியினர் போட்ட பூட்டுகள் திறக்கப்பட்டுள்ளன. பதிவுத்துறை அதிகாரிகள் தயாரிப்பாளர் சங்க அலுவலகங்களின் பூட்டுகளைத் திறந்துள்ளார்கள்.
இந்நிலையில் இளையராஜா இசை நிகழ்ச்சி தொடர்பான சர்ச்சைக்கு நடிகர் விஷால் பதில் அளித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:
அனைத்தையும் இழந்துள்ள தயாரிப்பாளர்களுக்கு நான் நல்லது செய்ய எண்ணுகிறேன். அதற்காக என்னைக் குறி வைக்கிறார்கள். என்ன நடந்தாலும் இதை நாங்கள் செய்துமுடிப்போம். என்னுடைய மனசாட்சி தெளிவாக உள்ளது. கடவுளும் உண்மையும் என் பக்கம் உள்ளார்கள். தொடர்ந்து முன்னேறுவேன். இளையராஜா சார் இசை நிகழ்ச்சி நடத்துவதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...