பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தயாரிப்பாளர்கள் சங்கப் பிரச்னையில் காவல்துறை தலையிட என்ன முகாந்திரம் உள்ளது? தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மீது அதிருப்தி என்றால்...

News image
Updated On :21 டிசம்பர் 2018, 9:48 am

எழில்

தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விஷால் தரப்பு தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சென்னை அண்ணா சாலையில் செயல்படுகிறது. இச் சங்கத்தின் தற்காலிக அலுவலகம் தியாகராயநகர் யோகாம்பாள் தெருவில் உள்ளது. இச் சங்கத்தின் தலைவராக நடிகர் விஷாலும், துணைத் தலைவர்களாக நடிகர் பிரகாஷ்ராஜ், இயக்குநர் கௌதம் மேனன், செயலாளர்களாக எஸ்.எஸ்.துரைராஜ், திரேசன் ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில் விஷால் சிறிய திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு எதிராக செயல்படுவதாகவும், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் விதிமுறைகளுக்கு எதிராகச் செயல்படுவதாகவும், சங்க நிதியில் ரூ.7.80 கோடி விஷால் முறைகேடு செய்து விட்டதாகவும் கூறி சில தயாரிப்பாளர்கள் விஷாலுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தனர். மேலும் அவர்கள், விஷால் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தனர்.

திரைப்பட தயாரிப்பாளர்கள் ஏ.எல்.அழகப்பன், எஸ்.வி.சேகர், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சில தயாரிப்பாளர்கள் அண்ணாசாலையில் உள்ள சங்க அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை திடீரென ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர். இக் கூட்டத்தின் முடிவில் சங்க அலுவலகத்துக்குப் பூட்டுப்போடுவது என முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, அண்ணா சாலையில் உள்ள அலுவலகத்துக்கும், தியாகராயநகர் யோகாம்பாள் தெருவில் உள்ள அலுவலகத்துக்கும் பூட்டு போடப்பட்டது. ஒரு ஆண்டுக்குள் சொன்னதை செய்யாவிட்டால், சங்கத்துக்கு பூட்டுப் போடுங்கள் என்று விஷால் கூறியிருந்தார், அதனாலேயே பூட்டுப் போடுகிறோம் என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். மேலும் அவர்கள், இரு அலுவலகங்களின் பூட்டுகளுக்கான சாவிகளை மாவட்ட பதிவாளரிடம் ஒப்படைத்தனர்.

இதற்கிடையே, சங்க அலுவலகத்தின் பூட்டை திறந்து உள்ளே செல்லப் போவதாக விஷால் தெரிவித்தார். அதன்படி சங்கத்தின் செயலர்கள் எஸ்.எஸ்.துரைராஜ், கதிரேசன் ஆகியோர் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தைத் திறந்து உள்ள செல்ல இருப்பதால் தகுந்த பாதுகாப்புத் தரும்படி பாண்டி பஜார் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனர். இதையடுத்து அண்ணாசாலையில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தை மாவட்ட பதிவாளர் அலுவலக ஊழியர்கள் திறந்தனர்.

தியாகராயநகரில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்தில் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். அங்கு விஷால் தயாரிப்பாளர் சங்கத்தை திறப்பதற்காக சில தயாரிப்பாளர்களுடன் வந்தார். மேலும் அவர், அங்கு போடப்பட்டிருந்த பூட்டை உடைக்க முயன்றுள்ளார். இதைப் பார்த்த போலீஸார், விஷாலுக்கு அனுமதி மறுத்து, மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை திறக்க வருகிறார், அது வரை காத்திருக்குமாறு கூறினர். ஆனால் விஷால் அதற்கு மறுப்பு தெரிவித்து, போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். விஷால் கைது: அவருடன் வந்த சில தயாரிப்பாளர்களும் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே இப் பிரச்னையறிந்து தியாகராயநகர் காவல் துணை ஆணையர் அரவிந்தன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விஷாலிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் விஷால், அவருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் காவல்துறை அதிகாரிகள், சட்டவிரோதமாகச் செயல்பட்டால் கைது செய்ய நேரிடும் என எச்சரித்தனர். ஆனால் விஷால் தொடர்ந்து போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். சிறிது நேரத்துக்கு பின் விஷாலும், சில தயாரிப்பாளர்களும் தாங்களாக முன்வந்து காவல்துறை வேனில் ஏறி அமர்ந்தனர். இதையடுத்து போலீஸார் அவர்களை கைது செய்து, தியாகராயநகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அவர்களை வைத்திருந்தனர். இதேபோல அங்குப் பிரச்னை செய்து கொண்டிருந்த நடிகர் மன்சூர் அலிகானையும் போலீஸார் கைது செய்து, அழைத்துச் சென்றனர். சிறிது நேரத்தில் மாவட்ட பத்திரப் பதிவாளர் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தைத் திறந்தனர். 

இதற்கிடையே, கைது செய்யப்பட்ட விஷால் உள்பட 10 பேர் மீது போலீஸார் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டது உள்பட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் மாலையில் விஷால் உள்பட அனைவரும் அங்கிருந்து விடுவிக்கப்பட்டனர். குற்றவியல் நடைமுறைச் சட்டம் 145-இன்படி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்துக்குள் யாரும் நுழையக் கூடாது என்று சென்னை பெருநகர போலீஸார் வியாழக்கிழமை இரவு உத்தரவிட்டார்கள். தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்துக்கு சீல் வைத்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தது விஷால் தரப்பு. தயாரிப்பாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த அன்புதுரை தொடந்த வழக்கில், தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

குற்றவியல் நடைமுறைச் சட்டம் 145-ஐ விலக்கிக்கொள்ள வேண்டும். 145 பிரிவின் கீழ் நடவடிக்கை எடுத்தது ஏன்? தயாரிப்பாளர்கள் சங்கப் பிரச்னையில் காவல்துறை தலையிட என்ன முகாந்திரம் உள்ளது? தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மீது அதிருப்தி என்றால் புகார் தரவேண்டும். இல்லையென்றால் நீதிமன்றத்தை நாடவேண்டும். பூட்டுப் போட்டும் அளவுக்கு எதிர்த் தரப்பினருக்கு உரிமை கிடையாது. இதில் காவல்துறை ஏன் தலையிடுகிறது? தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை காவல்துறை எதிர்கொண்ட விதம் தவறானது. சங்க அலுவலகத்துக்கும் சங்க உறுப்பினர்களுக்கும் காவல்துறை பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என்று இந்த வழக்கின் விசாரணையின்போது நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.