உங்கள் வீட்டுக்கு வந்து என் கதையை நிரூபிக்க வேண்டுமா?: பாரதிராஜாவுக்கு 96 பட இயக்குநர் கேள்வி!

உங்களுக்கு நியாயம் வேண்டுமா, ஊடகக் கவனம் வேண்டுமா, இல்லை வேறு ஏதாவது ஆதாயம் தேடுகிறீர்களா? உங்கள் எதிர்பார்ப்புதான் என்ன...
உங்கள் வீட்டுக்கு வந்து என் கதையை நிரூபிக்க வேண்டுமா?: பாரதிராஜாவுக்கு 96 பட இயக்குநர் கேள்வி!

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் சி. பிரேம் குமார் இயக்கியுள்ள படம் - 96. சமீபத்தின் வெளியான இந்தப் படம் பாராட்டுகளைப் பெற்றதோடு சர்ச்சையிலும் சிக்கியுள்ளது. தன்னுடைய கதையைப் பயன்படுத்தி 96 படம் எடுக்கப்பட்டுள்ளதாக பாரதிராஜாவின் உதவி இயக்குநர் சுரேஷ் குற்றம் சாட்டியுள்ளார். பாரதிராஜாவும் இதுகுறித்துப் பேசியுள்ளார்.

இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுக்கு இயக்குநர் பிரேம் குமார் விளக்கம் அளித்துள்ளார். இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:

ஃபேஸ்புக்கில் 96 படம் தன்னுடைய கதை என்று ஒரு பதிவு எழுதப்பட்டது. இந்தக் கதை 96 படத் தயாரிப்பாளர் நந்தகோபாலிடம் நான்கைந்து வருடங்களுக்கு முன்பு சொன்னதாகவும் அவர் என்னை வைத்து எடுத்துவிட்டதாகவும் எழுதப்பட்டிருந்தது. ஒரு ஒளிப்பதிவாளரால் எப்படி கதை எழுதமுடியும் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இது என்ன கேள்வி என்று தெரியவில்லை. இதே தமிழகத்தில்தான் ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா படங்கள் இயக்கியுள்ளார். அதற்குப் பதில் உள்ளது. நான் என்னென்ன எல்லாம் எழுதி அது 96 படமாக மாறியது என்பதற்கான ஆதாரத்தை உங்கள் முன் வைத்துள்ளேன். படம் வெற்றி என்று தெரிந்தவுடன் அந்தச் சர்ச்சை ஆரம்பிக்கிறது. 

இந்தச் சர்ச்சை (சுரேஷ்) எப்போது ஆரம்பிக்கிறது என்றால், தெலுங்கில் ரீமேக் உரிமம் குறித்துப் பேசுகிறார்கள் என்றவுடன் இந்தப் பிரச்னை ஆரம்பிக்கிறது. என்னுடைய கேள்வி என்னவென்றால் ஒருவர் கதையைத் திருடிவிட்டார் என்றால் முதலில் என்ன செய்வீர்கள்? உங்கள் கதையைக் கொண்டுவருவீர்கள். என் மீது குற்றம் சுமத்தியுள்ள இருவரும் இதுதான் கதை என்றொரு விஷயத்தைக் கொண்டுவரவில்லை. நாலாவது வாரமும் காட்சிகள் அதிகரிக்கின்றன, இரு மொழிகளில் ரீமேக் குறித்துப் பேசுகிறார்கள் என்றெல்லாம் 96 படம் குறித்து நல்ல விஷயங்கள் நடந்துகொண்டிருந்தாலும் எனக்கு அவற்றில் சந்தோஷமில்லை. காரணம், என்மீது குற்றம் சுமத்தியவர்கள்தான். 

என் கதையை 2016-ல் பதிவு செய்துள்ளேன். அனால் கதை குறித்து அவர்கள் எவ்வித விவரமும் தரவில்லை. இதனால் என் பொருள் என்னுடையதுதான் என்று சொல்கிற கேவலமான நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். என் ஸ்கிரிப்ட்டை யாரும் சோதித்துப் பார்க்கலாம். இதை வைத்துக்கொண்டுதான் விஜய் சேதுபதி, த்ரிஷாவிடம் கதை கூறினேன். 2015 சென்னை வெள்ளத்தின்போதுதான் இந்தக் கதையை எழுதினேன். 2016 ஜனவரியில் விஜய் சேதுபதியிடம் கதை சொன்னேன். அவர் சம்மதம் சொன்னபிறகு தயாரிப்பாளரிடமும் சொல்லி சம்மதம் வாங்கினேன். பிப்ரவரி மாதம் த்ரிஷாவிடம் சொல்லி, எல்லாம் சரியாக ஏற்பாடானது. இதற்குப் பிறகு கதை விவாதம் நடைபெற்றது. பிறகு எழுத்தாளர்கள் சங்கத்தில் கதையைப் பதிவு செய்தேன். ஆனால் அவர்கள் பக்கம் எவ்வித ஆதாரமும் இன்றிப் பேசுகிறார்கள். இந்தக் கதை விவாதத்தின்போது தியாகராஜா குமாரரஜா, பாலாஜி தரணிதரன் மற்றும் என் நண்பர்கள் பலரிடமும் கதை சொல்லியிருக்கிறேன். அவர்களும் கதை விவாதத்தில் நட்பு ரீதியாக வந்து வேலை செய்தார்கள். இதற்காக நான் அவர்களுக்குச் சம்பளம் தரவில்லை. அந்த விவாதத்தின்போது உருவான திரைக்கதையைத்தான் இப்போது புத்தமாக உங்கள் முன் வைக்கிறேன் (திரைக்கதை வடிவத்தைச் செய்தியாளர்களிடம் காண்பிக்கிறார்).

பாரதிராஜா சாரும் 90 சதவிகிதம் அவர்களுடைய கதைதான் என்கிறார். அவருக்குத்தான் கதை தெரியுமே. அவராவது கதை சொல்லட்டும். இல்லை கதை எழுதியதாகச் சொல்லும் சுரேஷாவது சொல்லட்டும். உங்களுக்கு நியாயம் வேண்டுமா, ஊடகக் கவனம் வேண்டுமா, இல்லை வேறு ஏதாவது ஆதாயம் தேடுகிறீர்களா? உங்கள் எதிர்பார்ப்புதான் என்ன? அதைத் தெளிவாகச் சொல்லுங்கள். மருதுபாண்டிக்கு நன்றி என டைட்டில் கார்டில் போட்டதால் அவர் தான் என்னிடம் கதையைச் சொல்லியிருக்கிறார் என்கிறார்கள். அவருக்கு நன்றி போட்டது எதற்காகவும் வேண்டுமானாலும் இருக்கலாம். அதைவைத்து நீங்களே ஒரு யூகம் செய்து குற்றச்சாட்டை வைப்பீர்களா? ஒருவரை வசைபாடுவீர்களா?

இயக்குநர் இமயம் என்று பாரதிராஜா சாரைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். என்னிடம்தான் கதை சொன்னார் என்று அவர் எவ்வித ஆதாரமும் இன்றிப் பேசுகிறார். உங்கள் உதவியாளர் உங்களிடம் 10 வருடங்கள் இருக்கிறார் என்றால் நீங்கள் அவருக்கு உதவி செய்யுங்கள். கதை உள்ளது என்கிறீர்கள். நீங்களே தயாரித்திருக்கலாம், இயக்கியிருக்கலாம். அவரை இயக்கச் சொல்லியிருக்கலாம். அவர் அப்படியொரு வார்த்தை பேசியிருக்கலாமா? நாங்கள் பேசியிருந்தால் என்ன ஆகியிருக்கும்?

அதே இடைவேளைக் காட்சி என்கிறார்கள். முதலில் வைத்த காட்சி வேறு. உன்னை எங்கு விட்டேனோ அங்கேயே தான் நான் நிற்கிறேன் ஜானு என்று விஜய் சேதுபதி சொன்னவுடன் த்ரிஷா ஓடிச் செல்வார். அங்குதான் முதலில் இடைவேளை வைத்தேன். ஆனால் அதுவரை படம் நீண்டநேரம் செல்வதால் பிறகு மாற்றி வைத்தேன். காரில் தேவதர்ஷினி இருவரையும் சந்தேகமாகப் பார்ப்பதாக அந்தக் காட்சி இருக்கும். அதுதான் படத்தின் இடைவேளைக் காட்சியாக இருக்கும். இந்தக் காட்சி அவர்களிடமும் இருந்ததாம். இதற்கு பாரதிராஜா சார் சுரேஷைக் கட்டிப்பிடித்ததாகச் சொல்கிறார்கள். அந்தக் காட்சியில் அப்படியென்ன உள்ளது?

படம் பார்த்த பாரதிராஜா சார் முதல் பத்து நிமிடத்தில் படத்தை நிறுத்தி விட்டார் என்கிறார்கள். அது பொய். அவருக்கு போன் வந்தது. அதனால் எழுந்து சென்றார். அவர் முழுப் படமும் பார்த்தார். ஷோவில் அப்படியெல்லாம் உடனடியாக நிறுத்தமுடியாது. உள்ளே போய்ச்சொல்லித்தான் நிறுத்தமுடியும். அதனால் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. 

நலன் குமாரசாமியிடம் சமீபத்தில் பேசினேன். அவரிடமும் இதேபோல ஒரு கதை உள்ளது என்றார். இந்தப் படத்தைப் பார்த்து என்னைப் பாராட்டினார். இயக்குநர் ராமிடமும் இதுபோல ஒரு கதை இருப்பதாகக் கேள்விப்பட்டேன். இதுவொன்றும் புதுமையான கதை இல்லை. அவதார், ஜுராஸிக் பார்க் போல கற்பனையில் புதிதாக உதித்த படம் கிடையாது. பலருக்கும் இந்தப் படத்தில் உள்ளது போன்ற அனுபவம் ஏற்பட்டிருக்கும். பலர் எனக்கு போன் செய்து அவர்கள் வாழ்க்கையில் நடந்த கதை போல உள்ளது என்றார்கள். இதுபோல பெருந்தன்மையாகப் பாராட்டுபவர்களும் உள்ளார்கள். ஆனால் இதுபோல எந்த ஓர் ஆதாரமும் இல்லாமல் ஆதாயம் தேட நினைப்பவர்களும் உள்ளார்கள். 

படம் வெளியானபோது ஆட்டோகிராப்புடன் ஒப்பிட்டுப் பேசினார்கள். இரண்டும் வெவ்வேறு படங்கள் என்றார் இயக்குநர் சேரன். அவர் மிகவும் பெருந்தன்மையுடன் நடந்துகொண்டார்.

வசனம் உள்பட 90 சதவிகித 96 படத்தின் கதை அவர் எழுதியது போல உள்ளது என்கிறார் சுரேஷ். எனில், அவர்கள் நிச்சயம் திரைக்கதையை எழுதியிருப்பார்கள் அல்லவா. அது எங்கே? 2016 முதல் 96 படம் குறித்து விளம்பரம் செய்துவருகிறோம். அப்போதே படக்கதை குறித்து அவர்கள் கேட்டிருக்கவேண்டும். ஆனால் படம் வெற்றி பெற்ற பிறகு குறை சொல்கிறார்கள். 

பாரதிராஜா சார் தயாரிப்பாளரை அழைத்துப் பேசியுள்ளார். படத்தைப் பாராட்ட அழைத்துள்ளார் என்று நினைத்து அவர் சென்றுள்ளார். வந்து என்னிடம் தயாரிப்பாளர் சொன்னது, என்னிடம் சில புகைப்படங்கள் காண்பித்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை என்றுதான் அவர் சொன்னார். ஆனால் அங்கு அவர் தயங்கிப் பேசியதாகவும் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் பேசுகிறார்கள். நான் தயாரிப்பாளரிடம் சொன்னது - எதுவாக இருந்தாலும் என்னிடம் பேசச் சொல்லுங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன் என்றேன். ஆனால் இன்றுவரை சுரேஷோ பாரதிராஜா சாரோ என்னிடம் பேசவில்லை. இந்தப் பிரச்னை உருவானவுடன் மருதுபாண்டியன் மூலமாக பாரதிராஜா சார் அவருக்கு போன் செய்யச் சொன்னார். நான் போகவில்லை. படம் நன்றாக ஓடிகொண்டிருக்கிறது. அவர்களுடைய நோக்கம் தெரிகிறது. இப்படி வாரா வாரம் ஒருவர் வர வாய்ப்பு உள்ளது. நான் அவர்களுடைய வீட்டுக்குப் போய் இது என் கதை என்று நான் பதில் சொல்லவேண்டுமா? இது எனக்குத் தேவையா? வீட்டுக்குச் செல்வது எனக்குத் தேவையில்லாத விஷயம். உங்களிடம் வலுவான ஆதாரம் இருந்தால், அதற்கென வழிமுறை உள்ளது. எழுத்தாளர்கள் சங்கத்திடம் சென்று முறையிடுங்கள். இல்லாவிட்டால் நீதிமன்றத்துக்குச் செல்லுங்கள். நியாயம் இருந்தால் ஜெயிக்கப்போகிறார்கள். இது இரண்டும் செய்யாமல் வீட்டுக்கு அழைத்ததே தவறாகத் தெரிந்தது. நான் வரவில்லை, என் மடியில் கனம் இல்லையென்றால் வந்திருக்கவேண்டியதுதானே எனச் சொல்கிறார்கள். நான் ஏன் போகவேண்டும்? நான் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று என்னை நிரூபிக்கவேண்டுமா என்று பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com