புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

சர்கார் சர்ச்சை தொடர்பாக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸைக் கைது செய்யத் தடை

சர்கார் சர்ச்சை தொடர்பாக அப்பட இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸை நவம்பர் 27 வரைக் கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது...

News image
Updated On :9 நவம்பர் 2018, 9:41 am

சர்கார் சர்ச்சை தொடர்பாக அப்பட இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸை நவம்பர் 27 வரைக் கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

விஜய் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான சர்கார் படம் தீபாவளிக்கு வெளியாகி திரையிடப்பட்டு வருகிறது. அந்தத் திரைப்படத்தில் தமிழக அரசு வழங்கிய இலவசப் பொருள்கள் குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள், படத்தின் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள வரலட்சுமி சரத்குமாரின் பெயரை கோமள வல்லி என்று குறிப்பிட்டுள்ளது போன்ற காட்சிகள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை விமர்சனம் செய்யும் விதமாக அமைத்திருப்பதாகவும் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. இதனால் அதிமுகவினர் சர்கார் படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்க வலியுறுத்தியும் வியாழக்கிழமை அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சில திரையரங்குகளில் சில காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. 

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் வீட்டில் வியாழக்கிழமை நள்ளிரவில் போலீஸார் குவிக்கப்பட்டனர். நள்ளிரவுக்கு பிறகு அவர் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், அவரது பாதுகாப்புக்காகவே போலீஸார் அவரது வீட்டில் குவிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். முருகாதாஸின் முன்ஜாமீன் மனு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வந்தது. 

இந்நிலையில் சர்கார் சர்ச்சை தொடர்பாக அப்பட இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸை நவம்பர் 27 வரைக் கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஒரு படத்துக்குத் தணிக்கையில் சான்றிதழ் அளித்த பிறகு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது. படத்தில் டிவியை எதிர்த்திருந்தால் சம்மதமா? படத்தைப் படமாகப் பார்க்கவேண்டும் என்று விசாரணையின்போது உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார்.

சர்கார் படத்தில் இடம்பெற்றிருந்த அதிமுக அரசை விமரிசிக்கும் காட்சிகள் மறு தணிக்கை மூலம் நீக்கப்பட்டுள்ளன. இதையடுத்து பிற்பகல் முதல் சர்ச்சைக்குரிய காட்சிகள் இல்லாமல் தணிக்கைச் செய்யப்பட்ட புதிய வடிவம் திரையிடப்பட்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.