அனைவருக்கும் லாபமளித்த படம்: எல்கேஜி குறித்து ஆர்ஜே பாலாஜி!

அனைவருக்கும் லாபமளித்த படம்: எல்கேஜி குறித்து ஆர்ஜே பாலாஜி!

இந்தப் படம் அனைவருக்கும் மகிழ்ச்சியும் லாபத்தையும் சிறந்த நினைவுகளையும் தந்துள்ளது...
Published on

ஆர்ஜே பாலாஜி நடிப்பில் கே.ஆர். பிரபு இயக்கியுள்ள படம் எல்கேஜி. ப்ரியா ஆனந்த், ஜே.ஜே. ரித்தீஷ், நாஞ்சில் சம்பத் போன்றோரும் நடித்துள்ளார்கள். பிப்ரவரி 22 அன்று படம் வெளியானது. இந்தப் படம் வசூலில் சாதனைகள் செய்து தமிழ்த் திரையுலகை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இந்தப் படத்துக்காக சம்பளம் பெற்றுக்கொள்ளாமல் நடித்த ஆர்ஜே பாலாஜி தற்போது அதன் லாபத்திலிருந்து ஒரு பகுதியைச் சம்பளமாகப் பெற்றுள்ளார். 

எல்கேஜி படம் வெளிவருவதற்கு முன்பே, விநியோக உரிமை, தொலைக்காட்சி - டிஜிடல் உரிமங்கள், வெளிநாட்டு உரிமம் போன்றவற்றால் படத் தயாரிப்பாளருக்கு லாபம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பட வெளியீட்டுக்குப் பிறகும் எல்கேஜி படம் வசூலில் ஒரு பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. 

3.5 கோடி பட்ஜெட்டில் உருவான எல்கேஜி படம், வெளியான மூன்றாவது நாளிலிருந்து லாபம் அளிக்க ஆரம்பித்துவிட்டது. முதல் மூன்று நாள்களில் ரூ. 8.80 கோடி வசூலைத் தமிழ்நாட்டில் அள்ளி, 2019-ல் அதிக வார இறுதி வசூலைக் கண்ட மூன்றாவது படம் என்கிற பெருமையைத் தட்டிச் சென்றது. சக்தி ஃபிலிம் ஃபேக்டரிக்கு ரூ. 3.50 கோடிக்கு மினிமம் கியாரண்டி என்கிற முறைப்படி இந்தப் படம் விற்கப்பட்டுள்ளது. ஆனால் முதல் மூன்று நாள்களிலேயே விநியோகஸ்தரின் பங்காக ரூ. 4.25 கோடி கிடைத்துள்ளது. பிரபல நடிகர்கள் யாரும் நடிக்காத இந்தப் படம் ஆர்ஜே பாலாஜியின் புகழையும் அவருடைய நகைச்சுவையையும் அதிகம் நம்பி வெளியானது. சமூகவலைத்தளங்களில் இப்படங்களின் விளம்பரங்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள 10 அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து மேம்படுத்த உள்ளதாக எல்கேஜி பட வெற்றி விழாவில் அறிவித்துள்ளார் ஆர்ஜே பாலாஜி. இப்படத்தைத் தயாரித்த வேல்ஸ் இண்டர்நேஷனல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்தப் படத்திலும் ஆர்ஜே பாலாஜி கதாநாயகனாக நடிக்கவுள்ளார். 

இந்தப் படம் தற்போது 50-வது நாளைக் கடந்துள்ளது. இதையடுத்து ஆர்ஜே பாலாஜி ட்விட்டரில் கூறியுள்ளதாவது:

இந்தப் படம் அனைவருக்கும் மகிழ்ச்சியும் லாபத்தையும் சிறந்த நினைவுகளையும் தந்துள்ளது. ஒவ்வொரு வாரமும் அரை டஜன் படங்கள் வெளியாகின்றன. பைரசி வேறு. இந்தச் சூழலில் எல்கேஜி படம் 50-வது நாளைக் கடந்ததற்குக் காரணம் உங்களுடைய ஆதரவினால்தான். மனமார்ந்த நன்றிகள் என்று கூறியுள்ளார். 

எல்கேஜி படம், நாளை காலை 11 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com