இளையராஜா - பிரசாத் ஸ்டூடியோ பிரச்னை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் இடையிலான பிரச்னை தொடர்பான வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
இளையராஜா - பிரசாத் ஸ்டூடியோ பிரச்னை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
Updated on
1 min read

இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் இடையிலான பிரச்னை தொடர்பான வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இளையராஜாவின் இசை அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோ. இங்குதான் பல ஆண்டு காலமாக இளையராஜா இசையமைத்து வருகிறாா். அவருக்கென தனி தியேட்டா் ஒதுக்கி கொடுத்திருந்தது பிரசாத் நிா்வாகம். இளையராஜா தனது அத்தனை படங்களுக்கும் அங்குதான் இசை அமைத்தாா். இளையராஜாவின் திறமையை மதித்து எல்.வி.பிரசாத் இதனை செய்தாா். இப்போது ஸ்டூடியோ வருமானம் இல்லாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது. தனியாா் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அங்கே அமைந்துள்ள பல ஸ்டூடியோக்களில் படமாக்கப்பட்டு வருகின்றன. அதில் வரும் வருமானத்தைப் பெருக்கும் விதமாக, எல்.வி.பிரசாத்தின் வாரிசுகள் இளையராஜாவின் ஸ்டூடியோவை இடித்து விட்டு, மாற்று தியேட்டா் கொண்டு வர முடிவு செய்தனா். இதனால் அங்கே இப்போது இளையராஜாவின் இசைப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம், இயக்குநர் பாரதிராஜா தலைமையில் திரையுலகினா் பிரசாத் ஸ்டூடியோவில் ஒன்று கூடினார்கள். அவர்கள் பிரசாத் ஸ்டூடியோ நிா்வாகத்தினரைச் சந்தித்துப் பேசினார்கள். யாருக்கும் பாதகம் இல்லாமல் இந்தப் பிரச்னையைச் சுமுகமாக முடிக்க வேண்டும். கால அவகாசம் தந்து அதுவரை இளையராஜாவைப் பணிசெய்ய அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்த் திரையுலகினர் சார்பில் பிரசாத் ஸ்டூடியோவிடம் அறிக்கை கொடுத்துள்ளோம் எனச் செய்தியாளர்களிடம் கூறினார் பாரதிராஜா.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார். பிரசாத் ஸ்டுடியோவில் கடந்த 42 ஆண்டுகளாக சுமார் 6000 பாடல்கள் இசையமைத்துள்ளேன். வாடகை கொடுக்கத் தயாராக உள்ளேன். இட உரிமை தொடர்பாக இரு தரப்புக்கும் இடையிலான வழக்கு ஏற்கனவே 17வது உதவி சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இட உரிமை தொடர்பாகப் போதுமான ஆவணங்கள் தாக்கல் செய்தும் சிட்டி சிவில் நீதிமன்றம் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும். பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து தன்னை காலி செய்ய தடை விதிக்கவேண்டும் என்று இளையராஜா தொடர்ந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

இந்நிலையில் இந்த வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com