

நடிகர் ராகவா லாரன்ஸ் - இயக்குநர் வெங்கட் பிரபு இணைகிற படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் மாநாடு என்கிற படம் உருவாகவுள்ளதாகக் கடந்த வருடம் அறிவிக்கப்பட்டது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு, 2019 கோடைக்காலத்தில் படம் வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பிறகு இந்த வருடம் ஜூன் 25 முதல் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மாநாடு படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்டதாக அறிவித்தார் படத்தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம் தான் நிகழ்ந்ததே தவிர, படம் தொடங்க இயலவில்லை. அதனால் சிம்பு ’நடிக்க இருந்த’ மாநாடு படத்தைக் கைவிடுவதைத் தவிர்க்க இயலவில்லை. சிம்புவின் அன்பும் நட்பும் தொடரும். வெங்கட் பிரபு இயக்க, மாநாடு படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும். விரைவில் அந்த அறிவிப்பு வரும் என்று அவர் அறிக்கை வெளியிட்டார். இதன் பிறகு, சிம்புவின் புதிய படம் குறித்து டி.ராஜேந்தர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். சிம்பு அடுத்ததாக மகா மாநாடு என்கிற படத்தை இயக்கி நடிக்க உள்ளதாகவும் அந்தப் படத்தின் பட்ஜெட் ரூ. 125 கோடி என்றும் அறிவித்தார். 5 மொழிகளில் உருவாகவுள்ள இந்தப் படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்கவுள்ளது என்றும் கூறினார். பிறகு, திடீர் திருப்பமாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி - சிம்பு இடையே புதிய ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, மாநாடு படத்தில் நடிக்க தான் தயாராக இருப்பதாக சிம்பு அறிவித்தார். படப்பிடிப்புக்குச் சரியாக வந்து ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் அவர் உத்தரவாதம் அளித்ததால் மாநாடு படத்துக்கு மீண்டும் உயிர் வந்தது. எனினும் படப்பிடிப்பு இதுவரை தொடங்கப்படவில்லை. 2020 ஜனவரியில் தொடங்கப்படும் எனச் சமீபத்தில் கூறப்பட்டது.
இந்நிலையில் ராகவா லாரன்ஸுடன் இணைந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ள இயக்குநர் வெங்கட் பிரபு கூறியதாவது:
கடவுள் அன்பானவர். நல்லதே நினைப்போம். நல்லதே பேசுவோம். நல்லதே நடக்கும். எனவே இது நடைபெற்றுள்ளது. லாரன்ஸ் பிரதருக்கு நன்றி. தகவல்கள் விரைவில் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பதற்கான சாத்தியங்கள் உருவாகியுள்ளன. இருவரும் இணையும் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.