6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சூர்யாவின் சூரரைப் போற்று படத்தைத் திரையிட மாட்டோம்: திரையரங்கு உரிமையாளர்கள் எச்சரிக்கை

சூர்யா நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ள சூரரைப் போற்று படத்தின் வெளியீட்டுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :25 ஏப்ரல் 2020, 7:11 am

DIN


ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படத்தைத் திரையரங்குகளில் வெளியிடுவதற்கு முன்பே நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடுவதால் நடிகர் சூர்யாவுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 1 லட்சத்து 97 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 24,400 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்று  பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதுமே மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  அத்தியாவசியப் பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணியும் நடக்கவில்லை. படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத காரணத்தால், சினிமாவை நம்பியுள்ள தொழிலாளா்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனா். திரையரங்குகளும் இயங்காததால் படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜோதிகா நடித்து வெளியீட்டுக்குக் காத்திருக்கும் பொன்மகள் வந்தாள் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. அறிமுக இயக்குநர் ஜே.ஜே. ப்ரட்ரிக் இயக்கியுள்ள இப்படத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன், பாண்டியராஜன் போன்றோர் நடித்துள்ளார்கள். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இசை - கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவு - ராம்ஜி, படத்தொகுப்பு - ரூபன்.

கரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவால் திரையரங்குகளில் படங்கள் வெளியாவது குறித்து தெளிவான நிலை இல்லாததால் பொன்மகள் வந்தாள் படத்தை அமேசான் பிரைம் தளத்தில் நேரடியாக வெளியிட முடிவு செய்துள்ளார் சூர்யா. எனினும் பெரிய நிறுவனம் தயாரிப்பில் பெரிய நடிகை நடித்த படமொன்று அமேசான் தளத்தில் நேரடியாக வெளியாவதற்குத் திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். தமிழ்த் திரையுலகில் இது தவறான முன்னுதாரணமாக அமையும், இதனால் திரையரங்குகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.

இந்த விவகாரம் குறித்து திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் ரோகிணி பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள விடியோவில் கூறியுள்ளதாவது:

பொன்மகள் வந்தாள் படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது. இது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. திரையரங்குகளுக்காகத் தயாரிக்கப்பட்ட படங்கள், திரையரங்குகளில் வெளியான பிறகுதான் மற்ற ஊடகங்களில் வெளியாகவேண்டும் என்பது விதி. அதை மீறி படத்தின் தயாரிப்பாளர் ஓடிடி தளத்துக்குக் கொடுத்துவிட்டார். இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். தயாரிப்பாளரைத் தொடர்பு கொண்டு இதைச் செய்யவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டோம். ஆனால் அவர் கேட்கவில்லை. எங்கள் கோரிக்கையை மீறி அவர் படத்தை ஓடிடி தளத்தில் திரையிடும் பட்சத்தில் அந்தத் தயாரிப்பு நிறுவனம், தயாரிப்பாளருடன் தொடர்புடைய எந்த நிறுவனங்களின் படங்களையும் நேரடியாக ஓடிடி தளத்திலேயே வெளியிடவேண்டும் என்று கூறியுள்ளோம். அந்தத் திரைப்படங்கள் எங்கள் திரையரங்குகளுக்குத் தேவையில்லை என்பது அனைத்து திரையரங்கு உரிமையாளர்களின் விருப்பம். இதுதான் எங்களின் முடிவு என்று கூறியுள்ளார்.

இதையடுத்து சூர்யா நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ள சூரரைப் போற்று படத்தின் வெளியீட்டுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையைத் தாண்டி பொன்மகள் வந்தாள் படம் அமேசான் தளத்தில் வெளியானால் சூர்யா மற்றும் 2டி நிறுவனம் தொடர்புடைய படங்களை வெளியிடத் திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று அறியப்படுகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.