சுதந்திர தின அறிக்கையில் திரைத்துறை சிக்கல்களுக்குத் தீர்வு அளியுங்கள்: முதல்வருக்கு பாரதிராஜா கோரிக்கை

நாளை, நாட்டின் சுதந்திர நாள். அந்நாளன்று தங்களுடைய சுதந்திர தின அறிக்கையில்...
சுதந்திர தின அறிக்கையில் திரைத்துறை சிக்கல்களுக்குத் தீர்வு அளியுங்கள்: முதல்வருக்கு பாரதிராஜா கோரிக்கை

சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்தது போல திரைப்படப் படப்பிடிப்புகளுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு இயக்குநர் பாரதிராஜா கோரிக்கை வைத்துள்ளார்.

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் சில தளர்வுகளுடன் பொது முடக்கம் அமலில் உள்ளது. படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில், சினிமாவை நம்பியுள்ள தொழிலாளா்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனா். திரையரங்குகளும் இயங்காததால் படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவால் திரையரங்குகளில் படங்கள் வெளியாவது குறித்து தெளிவான நிலை இல்லாததால் நேரடியாக ஓடிடி தளங்களில் படங்களை வெளியிடத் தயாரிப்பாளர்கள் முயன்று வருகிறார்கள்.

கடந்த 4 மாதங்களாக ஊரடங்கு உத்தரவால் அதிக இழப்புகளைச் சந்தித்துள்ளார்கள் திரையரங்கு உரிமையாளர்கள். எனவே, கரோனா ஊரடங்குத் தளர்வில் திரையரங்குகளை உரிய விதிமுறைகளுடன் இயங்க அனுமதிக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் அரசிடம் கோரிக்கை வைத்தார்கள். நாள்தோறும் குறைந்தபட்சம் 2 காட்சிகளுக்காவது அனுமதியளிக்க வேண்டும் என்பது அவர்களுடைய கோரிக்கையாக இருந்தது.

ஆகஸ்ட் 1 முதல் திரையரங்குகள் மீண்டும் இயங்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியானதால் அரசின் அறிவிப்பைத் திரையரங்கு உரிமையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். 

கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து, மத்திய அரசு கடந்த மாா்ச் 25-ஆம் தேதி தேசிய அளவிலான பொது முடக்கத்தை அறிவித்தது. எனினும், பொருளாதார செயல்பாடுகள், ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரப் பிரச்னையைக் கருத்தில் கொண்டு ஜூன் மாதம் முதல் பொது முடக்கத் தளா்வை மத்திய அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது.

மூன்றாவது கட்ட பொது முடக்கத் தளா்வுக்கான விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது. பள்ளி, கல்லூரிகள், மெட்ரோ ரயில் சேவை, திரையரங்குகள், நீச்சல் குளங்கள், மதுக்கூடங்கள், அருங்காட்சியகங்கள் உள்ளிட்டவற்றை ஆகஸ்ட் 31 வரை திறக்கக் கூடாது என்று அறிவுறுத்தியிருந்தது.

பிறகு, தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். திரையரங்குகள் இயங்க அனுமதி இல்லை எனத் தமிழக அரசு தெரிவித்தது. இதனால் தமிழ்த் திரையுலகம் ஏமாற்றமடைந்தது. 

இந்நிலையில் திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு இயக்குநர் பாரதிராஜா கோரிக்கை வைத்துள்ளார். தமிழ்நாடு திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாட்டில் பொதுமுடக்கம் தொடங்கி இன்றோடு 150 நாள்கள் ஆகிவிட்டன. திரையரங்கை மூடியும் படப்பிடிப்புகளை நிறுத்தியும் 150 நாள்கள் ஆகின்றன என்கிற வேதனையை தமிழ் சினிமா முதல்முறையாக இப்போது சந்தித்துள்ளது.

80க்கும் மேற்பட்ட படங்களும் படப்பிடிப்புகளும் தேங்கி நிற்கின்றன. 

சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்தது போல திரைப்படப் படப்பிடிப்புகளுக்கும் ஸ்டூடியோ அல்லது வீடுகளுக்குள் அனுமதி அளிக்க வேண்டும்.

நாளை, நாட்டின் சுதந்திர நாள். அந்நாளன்று தங்களுடைய சுதந்திர தின அறிக்கையில் எங்கள் திரைத்துறை சிக்கல்களுக்கான விடுதலையும் இடம்பெற வேண்டும் என விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com