/

விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

நடிகர் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 10:11 am

DIN

சென்னை, டிச.14: நடிகர் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீனு ராமசாமி  இயக்கத்தில் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்த மாமனிதன் திரைப்படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமே முடிவடைந்துவிட்டது. இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அபிராமி மெகா மால் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் மாமனிதன் திரைப்பட சென்னை விநியோக உரிமையை கிளாப் என்ற நிறுவனத்திடம் வாங்கியிருப்பதால், விநியோக உரிமையை தங்களுக்குக் கொடுக்காமல் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தனர்.

வழக்கை விசாரித்த  உயர் நீதிமன்றம் மாமனிதன் திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா சார்பில் ஆஜரான வழக்குரைஞர் விஜயன் சுப்ரமணியன், அபிராமி மெகா மால் நிறுவனத்துடன் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா விநியோக உரிமை தொடர்பாக எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை. அபிராமி மால் குறிப்பிட்டுள்ள அந்த ஒப்பந்தத்துக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனவே படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என வாதிட்டார்.. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி மாமனிதன் படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.