6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நடிகர் சூர்யாவின் படங்களுக்குத் தடை விதித்துள்ளதா திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்?

திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து தான் சூர்யா படத்தைத் திரையிடுவது குறித்து...

News image
Updated On :29 ஜூலை 2020, 6:19 am

DIN

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் சில தளர்வுகளுடன் பொது முடக்கம் அமலில் உள்ளது. படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில், சினிமாவை நம்பியுள்ள தொழிலாளா்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனா். திரையரங்குகளும் இயங்காததால் படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவால் திரையரங்குகளில் படங்கள் வெளியாவது குறித்து தெளிவான நிலை இல்லாததால் நேரடியாக ஓடிடி தளங்களில் படங்களை வெளியிடத் தயாரிப்பாளர்கள் முயன்று வருகிறார்கள்.

ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படத்தை அமேசான் பிரைம் தளத்தில் நேரடியாக வெளியிட்டார் அதன் தயாரிப்பாளர் சூர்யா. எனினும் பெரிய நிறுவனம் தயாரிப்பில் பெரிய நடிகை நடித்த படமொன்று அமேசான் தளத்தில் நேரடியாக வெளியாவதற்குத் திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். தமிழ்த் திரையுலகில் இது தவறான முன்னுதாரணமாக அமையும், இதனால் திரையரங்குகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.

இந்த விவகாரம் குறித்து கடந்த ஏப்ரல் மாதம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ரோகிணி பன்னீர் செல்வம் வெளியிட்ட விடியோவில் கூறியதாவது: 

பொன்மகள் வந்தாள் படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது. இது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. திரையரங்குகளுக்காகத் தயாரிக்கப்பட்ட படங்கள், திரையரங்குகளில் வெளியான பிறகுதான் மற்ற ஊடகங்களில் வெளியாகவேண்டும் என்பது விதி. அதை மீறி படத்தின் தயாரிப்பாளர் ஓடிடி தளத்துக்குக் கொடுத்துவிட்டார். இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். தயாரிப்பாளரைத் தொடர்பு கொண்டு இதைச் செய்யவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டோம். ஆனால் அவர் கேட்கவில்லை. எங்கள் கோரிக்கையை மீறி அவர் படத்தை ஓடிடி தளத்தில் திரையிடும் பட்சத்தில் அந்தத் தயாரிப்பு நிறுவனம், தயாரிப்பாளருடன் தொடர்புடைய எந்த நிறுவனங்களின் படங்களையும் நேரடியாக ஓடிடி தளத்திலேயே வெளியிடவேண்டும் என்று கூறியுள்ளோம். அந்தத் திரைப்படங்கள் எங்கள் திரையரங்குகளுக்குத் தேவையில்லை என்பது அனைத்து திரையரங்கு உரிமையாளர்களின் விருப்பம். இதுதான் எங்களின் முடிவு என்று கூறினார். 

தற்போது இந்தப் பிரச்னை மீண்டும் தலைதூக்கியுள்ளது. சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் தாங்கள் நடிக்கும் படங்களை நேரடியாக ஓடிடி தளங்களிலேயே வெளியிட்டுக் கொள்ளலாம் என பன்னீர் செல்வம் மீண்டும் தனது கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாவது: திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து தான் சூர்யா படத்தைத் திரையிடுவது குறித்து முடிவெடுக்க முடியும். பன்னீர் செல்வம் தன்னுடைய சொந்தக் கருத்தைக் கூறியுள்ளார். மற்றபடி சூர்யா படங்களுக்குத் தடை எதுவும் தற்போது விதிக்கப்படவில்லை என ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.