உலகின் கொடூரமான விலங்கு மனிதன் தான்: யானைக்கு நேர்ந்த கொடுமை பற்றி நடிகர் ஆரவ் வேதனை

அவை மிகவும் அப்பாவிகள். எனக்குத் தீங்கிழைக்க எப்போதும் எண்ணியதில்லை.
உலகின் கொடூரமான விலங்கு மனிதன் தான்: யானைக்கு நேர்ந்த கொடுமை பற்றி நடிகர் ஆரவ் வேதனை

உலகின் கொடூரமான விலங்கு மனிதன் தான் என நடிகர் ஆரவ் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே உள்ள சைலன்ட் வேலி வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த வனப்பகுதியைச் சோ்ந்த கா்ப்பிணி யானை ஒன்று, கடந்த சில தினங்களுக்கு முன் உணவு தேடி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு வந்தது. அப்போது, சில விஷமிகள், அன்னாசி பழத்துக்குள் சக்திவாய்ந்த வெடிபொருளை வைத்து அந்த யானைக்கு கொடுத்துள்ளனா். அந்தப் பழத்தைச் சாப்பிடுவதற்கு முயன்றபோது, அதிலிருந்த வெடிபொருள் வெடித்ததில் யானையின் வாயில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, வலியால் துடித்த அந்த யானை, மக்கள் யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் வெள்ளியாறில் தண்ணீரில் நின்றபடி கடந்த 27-ஆம் தேதி உயிா்விட்டது. அந்த யானை தண்ணீரில் நின்றபடி உயிா்விடும் புகைப்படம் தீவிரமாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த விவகாரம் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு தரப்பினரும் இச்சம்பவம் தொடா்பாக அதிா்ச்சியும் கண்டனமும் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில் ராஜபீமா என்கிற படத்துக்காக யானைகளுடன் இணைந்து நடித்துள்ளார் பிக் பாஸ் புகழ் ஆரவ். கேரளச் சம்பவம் பற்றி இன்ஸ்டகிராமில் அவர் எழுதியதாவது:

யானை எல்லோரையும் நம்பியது. அன்னாசி பழத்தைச் சாப்பிடும்போது குண்டு வெடித்தது. அப்போது அதிர்ச்சியடைந்த யானை, தன்னைப் பற்றிக் கூட எண்ணியிருக்காது. அடுத்த 18, 20 மாதங்களில் பிறக்கவிருந்த குட்டி யானைப் பற்றித்தான் எண்ணியிருக்கும். மனிதர்கள் ஏன் இவ்வாறு செய்கிறார்கள்? மனிதம் எங்குப் போனது?

கேரளாவின் பாலக்காட்டு மாவட்டத்தில் ஒரு மாத காலம் அந்த அப்பாவி மிருகங்களுடன் நான் இருந்துள்ளேன். யானைகளைக் கட்டியணைத்து, அதனுடன் சேர்ந்து தூங்கி, சாப்பிட்டு வாழ்ந்துள்ளேன். அவை மிகவும் அப்பாவிகள். எனக்குத் தீங்கிழைக்க எப்போதும் எண்ணியதில்லை. தினமும் என்னைக் கட்டியணைத்து வரவேற்று சிரிக்கும். நாளின் இறுதியில் யானைகளைப் பிரிய எனக்கு மனமே இருக்காது. ஆரம்பத்தில் யானைகளைப் பார்த்து நான் பயந்தேன். ஆனால் பழகும்போது தெரிந்தது, யானைகள் குழந்தை உள்ளம் கொண்டவை என. எல்லையற்ற அன்பை நம் மீது செலுத்தும். நம்மிடமிருந்து செல்லத்தையும் அன்பையும் எப்போதும் எதிர்பார்க்கும். யானை பற்றிய செய்தியைக் கண்டு நான் மிகவும் வேதனையடைந்துள்ளேன். விலங்குகள் மனிதர்கள் விடவும் மேன்மையானவை. உலகின் கொடூரமான விலங்கு மனிதன் தான். உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல. அனைவரும் ஒன்றாக வாழ்வோம் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com