
கரோனா தொற்று பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதுமே மே 17-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில், சினிமாவை நம்பியுள்ள தொழிலாளா்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனா். திரையரங்குகளும் இயங்காததால் படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவால் திரையரங்குகளில் படங்கள் வெளியாவது குறித்து தெளிவான நிலை இல்லாததால் நேரடியாக ஓடிடி தளங்களில் படங்களை வெளியிடத் தயாரிப்பாளர்கள் முயன்று வருகிறார்கள்.
ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படத்தைத் திரையரங்குகளில் வெளியிடுவதற்கு முன்பே நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட முயன்ற நடிகர் சூர்யாவுக்கு ஏராளமான தடையை ஏற்படுத்தினார்கள். பெரிய நிறுவனம் தயாரிப்பில் பெரிய நடிகை நடித்த படமொன்று அமேசான் தளத்தில் நேரடியாக வெளியாவதற்குத் திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையைத் தாண்டி பொன்மகள் வந்தாள் படம் அமேசான் தளத்தில் வெளியானால் சூர்யா மற்றும் 2டி நிறுவனம் தொடர்புடைய படங்களை வெளியிட மாட்டோம் எனத் திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பு தனது எதிர்ப்பைப் பலமாகப் பதிவு செய்தது.
ஆனால் பாலிவுட்டில் வேகவேகமாகக் காட்சிகள் மாறி வருகின்றன.
அமிதாப் பச்சன், ஆயுஷ்மன் குரானா நடிப்பில் ஷூஜித் சிர்கார் இயக்கத்தில் உருவான குலாபோ சிதாபோ (Gulabo Sitabo) படம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 12 முதல் அமேசானில் குலாபோ சிதாபோ வெளியாகவுள்ளது.
தமிழ்த் திரையுலகமும் இதே பாணியைப் பின்பற்றுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.