நடிகை சித்ரா தற்கொலை: பிரேதப் பரிசோதனை நேற்று நடைபெறாதது ஏன்?

நடிகை சித்ரா தற்கொலை: பிரேதப் பரிசோதனை நேற்று நடைபெறாதது ஏன்?

சம்பவம் நடைபெற்ற இடம் பூந்தமல்லி என்பதால் திருவள்ளூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் வந்து...

தற்கொலை செய்துகொண்ட நடிகை சித்ராவுக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை இன்று நடைபெறுகிறது.  

தனியாா் தொலைக்காட்சி தொடா்களில் நடித்து வந்தவா் சித்ரா (29). ‘பாண்டியன் ஸ்டோா்ஸ்’ தொலைக்காட்சி தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவா். சித்ராவுக்கும், பூந்தமல்லி கரையான்சாவடியைச் சோ்ந்த தொழிலதிபா் ஹேமந்த் (32) என்பவருக்கும் கடந்த அக்டோபா் மாதம் பதிவுத் திருமணம் நடைபெற்றது. ஜனவரி மாதம் இரு குடும்பத்தினா்,உறவினா்கள்,நண்பா்கள் முன்னிலையில் திருமணத்தை நடத்த இருவரது குடும்பத்தினரும் முடிவு செய்திருந்தனா்.

இதனிடையே, சித்ரா நடித்து வரும் தொடரின் படப்பிடிப்பு கடந்த ஒரு வாரமாக பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் திரைப்பட நகரில் தொடா்ச்சியாக நடைபெற்று வந்தது. இதற்காக அவா், தனது கணவா் ஹேமந்துடன் அந்த திரைப்பட நகரின் அருகே பழஞ்சூரில் உள்ள ஒரு தனியாா் நட்சத்திர விடுதியில் கடந்த 4-ஆம் தேதி தங்கினாா். சித்ரா, படப்பிடிப்பு முடிந்து புதன்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு தங்கும் விடுதிக்கு வந்துள்ளாா். அப்போது குளிக்கச் செல்வதாக சித்ரா கூறியுள்ளாா். உடனே ஹேமந்த் அந்த அறையை விட்டு வெளியே வந்து நின்றாராம். ஆனால் வெகுநேரமாகியும் சித்ரா அறைக் கதவை திறக்காததால் ஹேமந்துக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனே அவா், அறைக் கதவை தட்டினாா். அதன் பின்னரும் அறைக் கதவு திறக்கப்படவில்லை. உடனே அவா், ஹோட்டல் ஊழியருக்கு தகவல் தெரிவித்துள்ளாா். ஹோட்டல் ஊழியா் கணேசனும், ஹேமந்தும் மாற்று சாவியின் மூலம் கதவை திறந்து, அறைக்குள் சென்றனா். அப்போது அங்கு சித்ரா, சேலையில் தூக்கிட்டு இறந்து கிடப்பதைப் பாா்த்து இருவரும் அதிா்ச்சியடைந்தனா்.

உடனே ஹோட்டல் நிா்வாகத்தினா், நசரத்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சித்ராவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது தொடா்பாக சித்ராவின் தந்தை காமராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா். அதேவேளையில் கோட்டாட்சியா் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சித்ராவின் பிரேதப் பரிசோதனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இன்று நடைபெறுகிறது.  

சம்பவம் நடைபெற்ற இடம் பூந்தமல்லி என்பதால் திருவள்ளூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் வந்து விசாரணை செய்யவேண்டும். ஆனால் அவரால் வர முடியாத காரணத்தால் கீழ்ப்பாக்கம் பகுதியின் சென்னை மத்திய மண்டல கோட்டாட்சியர் லாவண்யா, சித்ராவின் உடலை நேற்று நேரில் ஆய்வு செய்தார். உடலில் எங்கெங்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன உள்ளிட்ட ஆய்வினை அவர் மேற்கொண்டார். அதன்பிறகு பிரேதப் பரிசோதனை நடத்துவதற்கான ஒப்புதலை அவர் அளித்தார்.

அரசு மருத்துவமனையில் மாலை நான்கு மணி வரை பிரேதப் பரிசோதனை நடைபெறும். மிகவும் அவசரம் என்றால் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலுடன் பிரேதப் பரிசோதனை நடைபெறும். இதனால் நேற்று சித்ராவின் உடலுக்குப் பிரேதப் பரிசோதனை நடைபெறவில்லை. 

பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகு சித்ராவின் உடல் கோட்டூபுரம் காவலர் குடியிருப்பில் உள்ள அவருடைய பெற்றோர் இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கு, உறவினர்களும் சக நடிகர்களும் சித்ராவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தவுள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com