நடிகை சித்ரா: திறமையால் ரசிகர்களை அள்ளிய முல்லை மலர்!

திரையுலகிலும் சின்னத்திரையிலும் முன்னேற பலருடைய உதவி தேவைப்படும். ஆனால் நான் சுயமாக வளர்ந்த பெண்...
நடிகை சித்ரா: திறமையால் ரசிகர்களை அள்ளிய முல்லை மலர்!

கீழ்த்தளத்துல இருந்து... ஒண்ணு, ரெண்டு மூணு என போறது நம்ம வழக்கமில்லை. மேல்தளத்துக்குப் போயிட்டு அங்கிருந்து வரலாம்.

ஒரு தொலைக்காட்சித் தொகுப்பாளர் இப்படி ஆங்கிலமே கலக்காமல் பேசியதைக் கேட்டதுண்டா?

சித்ரா, தொலைக்காட்சி நேயர்களுக்கு அறிமுகமானது இப்படித்தான். தமிழால் மயக்கினார்.

மக்கள் தொலைக்காட்சியில் ஊர் சுத்தலாம் வாங்க நிகழ்ச்சியில் ஆங்கிலச் சொற்களே கலக்காமல் சுத்தத் தமிழில் பேசினார் சித்ரா. இதனால் மற்ற தொகுப்பாளர்களிடமிருந்து தனியாகத் தெரிந்தார். அழகும் நல்ல தமிழ் உச்சரிப்பும் இருந்ததால் அவருக்கு வாய்ப்புகள் அதிகமாக வர ஆரம்பித்தன. 

முல்லை மலராக ரசிகர்கள் மனத்தைக் கவர்ந்த சித்ரா, இன்று நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார்.

சின்னத்திரையில் சுயமாகச் சாதித்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சித்ரா. 

மக்கள் தொலைக்காட்சியில் ஆங்கிலம் கலக்காமல் தமிழ் பேசி கவனம் பெற்ற சித்ரா, விஜய் தொலைக்காட்சித் தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லை கதாபாத்திரத்தில் கலக்கி, தமிழ் ரசிகர்களை அள்ளிக் கொண்டார். இந்த வாழ்க்கை இவ்வளவு சீக்கிரம் முடியவா இத்தனை கொண்டாட்டமாக இருந்தது!

இன்று சித்ரா உயிருடன் இல்லை என்பதை அவருடைய ரசிகர்களால் நம்பமுடியவில்லை. சமூகவலைத்தளங்களில் சித்ராவுக்கு இரங்கல் தெரிவிக்கும் ரசிகர்களின் பதிவுகளைக் காண முடிகிறது. 

சென்னையைச் சேர்ந்த சித்ரா, எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் படித்துள்ளார். படிக்கும்போதே மாடலிங் வாய்ப்புகள் கிடைத்துள்ளன. மக்கள் தொலைக்காட்சி தொகுப்பாளர் நேர்காணலுக்கு அவருடைய தோழி செல்லவேண்டியது. அவரால் போக முடியாததால் இவர் சென்றார். உடனடியாகத் தேர்வானார். வீட்டுக்குத் தெரியாமல் தொகுப்பாளராகச் சில காலம் பணியாற்றியுள்ளார். விஷயம் தெரிந்த பிறகு நன்கு அடி வாங்கியுள்ளார். 

அதுவரை தூயத் தமிழில் பேசிப் பழக்கம் இல்லாத சித்ரா, அதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு கச்சிதமாக தனக்கு வழங்கப்பட்ட பணியைச் செய்துள்ளார். ஆங்கிலம் கலக்காமல் தமிழ் பேசும் அரிதான தொகுப்பாளர் என்கிற முத்திரை கிடைத்துள்ளது. எனினும் மக்கள் தொலைக்காட்சியிலா வேலை பார்க்குற என்று பலரும் சித்ராவை ஆரம்பத்தில் கேலி பேசியுள்ளார்கள். மேலும் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மீடியாவில் பணிபுரிய பல நிபந்தனைகளை விதித்துள்ளார்கள். எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டார்.

மக்கள் தொலைக்காட்சிக்குப் பிறகு இதர தொலைக்காட்சிகளிலும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். அழகான தோற்றமும் அழகான குரலும் நல்ல உச்சரிப்பும் இருந்ததால் நடிக்கவும் வாய்ப்பு வந்தது. இதுதான் சித்ராவின் வளர்ச்சிக்கு மேலும் உதவியது. மிகப் பெரிய புகழுக்குக் காரணமாக அமைந்தது. 

சன் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற தொடரான சின்ன பாப்பா, பெரிய பாப்பாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டார்லிங் டார்லிங் டார்லிங்கிலும் நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்தார். மற்றொரு பெரிய தொடரான சரவணன் மீனாட்சியிலும் நடித்தார். தொகுப்பாளராக இருந்து நடிகையாக மாறியபோதும் கிண்டல்களை எதிர்கொண்டுள்ளார். தொகுப்பாளரான உனக்கு நடிக்க எல்லாம் வருமா என்கிற கேள்வியை எதிர்கொண்டுள்ளார். மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வாய்ப்பு கிடைத்தபோது அதைச் சிலர் தட்டிப் பறித்ததாகவும் சித்ரா கூறியுள்ளார். நடிகை ஆனபோதும் வீட்டில் எதிர்ப்பு வந்துள்ளது. உனக்குப் பக்குவம் பத்தாது என அக்கறையுடன் எடுத்துச் சொல்லியுள்ளார்கள். ஆனாலும் நடிப்பு மீதான தனது ஆர்வத்தை அவர் விட்டுக்கொடுக்கவில்லை. காரில் செல்லும்போது என் நிலைமையை நினைத்து பலமுறை அழுதுள்ளேன். கார் தான் எனக்கு ஆறுதலாக இருந்தது. வெளியே அது தெரியாது. புன்னகையால் என் கவலையை வெளியே காட்டிக்கொள்ள மாட்டேன் என்றார் சித்ரா. 

கலர்ஸ் தொலைக்காட்சியில் வேலுநாச்சியார் தொடரில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு சினிமா நடிகர் போல இக்கதாபாத்திரத்துக்காக மெனக்கெட்டுள்ளார். முதலில் எட்டு கிலோ வரைக்கும் எடையைக் குறைத்துள்ளார். அரிசியைத் தவிர்த்து காய்கறி, பழங்கள் மட்டும் சில காலத்துக்குச் சாப்பிட்டுள்ளார். சிலம்பம் சுற்றுவது, மரம் ஏற்றுவது, நாற்று நடுவது என பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டார். 

தொலைக்காட்சிகளில் நடிக்க ஆரம்பித்தபோது சினிமா வாய்ப்புகளும் வந்திருக்கிறது. ஆனால் முதலில் தொலைக்காட்சியில் சாதிக்க வேண்டும் என அந்த வாய்ப்புகளை மறுத்துள்ளார். 

சாதித்த ஒரு நட்சத்திரமாக சித்ரா இருந்தாலும் தான் மிகவும் சென்சிடிவ்வான பெண். பல விஷயங்களை எண்ணி மிகவும் கவலைப்படுவேன் என்று கூறியுள்ளார். 

அரசுப் பள்ளி மாணவர்களின் மனநலன் சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்வதிலும் தன்னை ஈடுபடுத்தியுள்ளார். நேரம் கிடைக்கும்போது அரசுப் பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களிடம் மனம் விட்டுப் பேசி அவர்களுக்கு வழிகாட்டியதாகவும் சொல்லியுள்ளார். தொலைக்காட்சி நடிகர்கள் பலருக்கும் சிவகார்த்திகேயன் தான் பெரிய ஊக்கமாக உள்ளார். சித்ராவுக்கும் அவர் தான் மானசீக வழிகாட்டி. தொகுப்பாளராக இருந்து நடிப்பில் உயரம் தொட்டிருப்பதில் எத்தனை சவால்களைச் சந்தித்திருப்பார் என்று ஆச்சர்யப்பட்டுள்ளார்.  

நடிகையாகப் புகழைப் பெற்றாலும் தொகுப்பாளராக இருப்பதுதான் சித்ராவுக்குப் பிடிக்கும். தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தாங்கி பிடிக்கும் பணி தொகுப்பாளருடையது. அதற்காக நிறைய கஷ்டப்படுவேன் என்று பேட்டியளித்துள்ளார். 

நடிகையாகி பல போராட்டங்களுக்குப் பிறகே பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. ஏழு தொடர்களில் நடித்த பிறகு சன் தொலைக்காட்சியின் தொடரிலும் நடித்த பிறகு கிடைத்த இந்த வாய்ப்பு சித்ராவுக்குப் பெரிய திருப்புமுனை. முல்லை மாதிரி ஒரு மருமகள் வேண்டும் என்று ரசிகர்கள் எண்ணும் அளவுக்குப் பெயர் பெற்றார். 

கடந்த வருடம் தனக்கு மிகவும் நன்றாக அமைந்தததாக சித்ரா கூறியுள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸால் நம்பமுடியாத அளவுக்குப் புகழ் கிடைத்தது. முதல்முறையாக பல நாடுகளுக்குச் சென்றுள்ளார். குவைத், மலேசியா, சிங்கப்பூர் எனப் பறந்துள்ளார். 

இந்த வருடம் தனது பிறந்த நாளான மே 2-ம் தேதி, உள்ளூரிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் தனது ரசிகர்களை அழைத்து பெரிய அளவில் கொண்டாடத் திட்டமிட்டிருந்தார். ஆனால் கரோனாவால் அத்திட்டத்தை ஒத்திவைத்தார். 

இன்ஸ்டகிராமில் மிகவும் கண்ணியமான புகைப்படங்களையே பதிவேற்றியுள்ளார் சித்ரா. நாகரிக உடையில் சற்று மாற்றம் தெரிந்தாலும், முல்லைக்கு இது சரியாக இருக்காது என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் கொடுத்துள்ளார்கள். இன்ஸ்டகிராமில் 15 லட்சம் ரசிகர்கள் சித்ராவுக்கு உண்டு. தொலைக்காட்சி நடிகைகளுக்கு அதிகமாக ரசிகைகள் தான் கிடைப்பார்கள். ஆனால் சித்ராவுக்கு திரைப்பட நடிகை போல ஏராளமான ரசிகர்கள் கிடைத்துள்ளார்கள். இவருக்குக் கிடைத்துள்ள இந்த ஆதரவைப் பார்த்து, காசு கொடுத்து கமெண்ட்ஸ் போடச் சொல்றியா என்றும் சிலர் விமர்சனம் செய்துள்ளார்கள். இதுபோன்ற விமர்சனங்களைக் கண்டுகொள்ளாதே என அறிவுறுத்தியுள்ளார் நடிகர் கவின். இப்படியெல்லாம் அசிங்கப்பட்டால் தான் திடமான மனநிலை கிடைக்கும் என்கிற அவருடைய அறிவுரையைப் பின்பற்றியுள்ளார். 

கடந்த வருடம் தனது பெற்றோரின் திருமண நாளை விமரிசையாகக் கொண்டாடியிருக்கிறார். இருவருக்கும் இரண்டு மோதிரம் வாங்கிக் கொடுத்து, அம்மாவுக்குக் கொலுசு வாங்கித் தந்துள்ளார். அப்பாவை அம்மாவுக்கு மோதிரம் போட்டுவிட்டு, கொலுசை மாட்டிவிடச் செய்திருக்கிறார். இனிமேல் அத்தருணங்கள் கிடைக்காது என்று முன்பே செய்துவிட்டாரோ என இப்போது எண்ணத் தோன்றுகிறது. 

திரையுலகிலும் சின்னத்திரையிலும் முன்னேற பலருடைய உதவி தேவைப்படும். ஆனால் நான் சுயமாக வளர்ந்த பெண் என்று பேட்டியளித்துள்ளார் சித்ரா. என் நடிப்புத் திறமையைப் பார்த்துதான் எனக்கு வாய்ப்புகள் வந்தன. சொல்லிக்கொள்கிற அளவுக்கு யாரும் உதவி செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

தமிழ்ப் பெண்களுக்குப் பெரிய திரையில் மட்டுமல்ல, சின்னத்திரையிலும் வாய்ப்புகள் குறைவாகக் கிடைப்பது பற்றி குரல் எழுப்பியிருக்கிறார். வெள்ளையாக இருக்கும் பெண்களுக்கு ஏன் முக்கியத்துவம் தருகிறார்கள் எனத் தெரியவில்லை. இப்போதுள்ள தொலைக்காட்சிகளும் இயக்குநர்களும் தமிழ்ப் பெண்களுக்கு வாய்ப்பு தருவதில்லை. கேரளா, கர்நாடகாவைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு தருகிறார்கள். அப்போது தமிழ்ப்பெண்களுக்கு யார் தான் வாய்ப்பு தருவார்கள் என்கிற கேள்வி என்னிடம் பல நாள்களாக உள்ளது. நம் பெண்களிடமும் அழகும் திறமையும் உள்ளது. இந்தப் பிரச்னைக்கு எப்போது தீர்வு எனத் தெரியவில்லை என்று பேசியிருக்கிறார்.   

கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான ஹேமந்த் என்பவருடன் சித்ராவுக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஜனவரியில் திருமணம் என்ற நிலையில் இரு மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் பதிவுத்திருமணம் நடைபெற்றதாகக் காவல்துறை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. 

திறமையால் வளர்ந்த சித்ரா, நொடியில் எடுத்த முடிவால் இன்று ரசிகர்களையும் தன்னுடன் நடித்த நடிகர்களையும் குடும்பத்தினரையும் கதற வைத்திருக்கிறார். மேலும் பல சாதனைகளுடன் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்திருக்க வேண்டிய வாழ்க்கை இது. இரங்கல் எழுதும் நிலைமைக்குச் சென்றது யார் துர்பாக்கியம்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com