தற்கொலை முடிவால் ரசிகர்களை விட்டுப் பிரிந்த சின்னத்திரை நட்சத்திரங்கள்

நம் வீட்டு வரவேற்பறையில் தினமும் பார்க்கும் பிரபலங்கள் திடீரென உலகை விட்டுச் செல்வதை...
தற்கொலை முடிவால் ரசிகர்களை விட்டுப் பிரிந்த சின்னத்திரை நட்சத்திரங்கள்

சின்னத்திரை நடிகர், நடிகைகளின் தற்கொலைகள் எப்போதும் அதிர்ச்சியைத் தரக்கூடியவை. நம் வீட்டு வரவேற்பறையில் தினமும் பார்க்கும் பிரபலங்கள் திடீரென உலகை விட்டுச் செல்வதை எந்த ஒரு ரசிகராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இன்று காலையில் வந்த தற்கொலை செய்தி - பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவினுடையது.

சமீபகாலமாக தற்கொலைகள் அதிகரிக்கிறதோ என்று எண்ணும் அளவுக்கு பல தற்கொலைச் செய்திகளை ரசிகர்கள் அறிய நேர்கிறது. தற்போது, சித்ராவின் தற்கொலைக்குச் சமூகவலைத்தளங்களில் ஏராளமான பேர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

குடும்பம் மற்றும் பணப் பிரச்னையால் தவிக்கும் சின்னத்திரை நட்சத்திரங்களுக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கவேண்டும் என்கிற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

தங்கள் வாழ்க்கையின் முடிவைத் தானே தேடிக்கொண்ட சின்னத்திரை பிரபலங்கள், நடிகர் நடிகைகளின் சமீபத்திய பட்டியல்கள் இவை. இது மேலும் அதிகரிக்கக்கூடாது என்பதுதான் ஒவ்வொரு ரசிகரின் வேண்டுகோள். 

நடிகை வைஷ்ணவி

பாபா, தீனா படங்களில் நடித்த வைஷ்ணவி, சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து தமிழக மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்.

ஏற்கெனவே திருமணமான தேவ் ஆனந்த் என்கிற தொலைக்காட்சி நடிகருடன் வைஷ்ணவிக்கு நட்பு ஏற்பட்டது. தனக்கு 2-வது மனைவியாக இருக்க வேண்டும் என்று வைஷ்ணவியை தேவ் ஆனந்த் வற்புறுத்தியதாகவும் நண்பர்களாகவே தொடரலாம் என்று வைஷ்ணவி கூறியதாகவும் வைஷ்ணவியின் பெற்றோர் தெரிவித்தார்கள். 2-வது மனைவியாக இருக்கும்படி தேவ் ஆனந்த் வற்புறுத்தியதால் மனமுடைந்து 2006 ஏப்ரலில் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். 

நடிகை ஷோபனா

சென்னை கோட்டூர்புரத்தில்நடிகை ஷோபனா (32), 2011 ஜனவரியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

கோட்டூர்புரம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜெயராம். இவரது மகள் ஷோபனா. சில்லுன்னு ஒரு காதல், நகரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிகளில் நகைச்சுவைத் தொடர்களிலும் நடித்துள்ளார். 

உடல்நலப் பாதிப்பு காரணமாக சில நாள்கள் படப்பிடிப்புக்கு செல்லாமல் வீட்டில் ஓய்வு எடுத்துள்ளார் ஷோபனா. இந்நிலையில் ஷோபனாவை வீட்டில் தனியாக விட்டுவிட்டு அவரது தாயார் அருகில் உள்ள கடைக்குச் சென்றிருந்தார். சிறிது நேரத்தில் திரும்பிவந்து பார்த்தபோது, தூக்கில் தொங்கிய நிலையில் ஷோபனா இறந்து கிடந்தார். 

நடிகை சபர்ணா

2016 நவம்பரில் 29 வயது நடிகை சபர்ணா சென்னை மதுரவாயலில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். தன் கையைக் கத்தியால் அறுத்து தற்கொலை செய்துகொண்டதாகக் காவலர்கள் தெரிவித்தார்கள். 

வருமானம் இல்லாமல் தவித்ததால் இந்த முடிவை அவர் மேற்கொண்டதாகக் கூறப்பட்டது. சன் தொலைக்காட்சியில் வெளியான பாசமலர் உள்ளிட்ட பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். சில படங்களிலும் நடித்துள்ளார்.  

நடிகை ஸ்ரவானி 

மனசு மமதா, மெளனராகம் போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் ஸ்ரவானி நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் ஹைதராபாத் மதுராநகரில் உள்ள தனது வீட்டின் கழிப்பறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

டிக்டாக் செயலி மூலம் அறிமுகமான தேவ்ராஜ் ரெட்டி என்கிற நபர் தனது சகோதரியிடம் பணம் கேட்டுத் துன்புறுத்தியதாக ஸ்ரவானியின் சகோதரர் ஷிவா பேட்டியளித்தார். ஸ்ரவானி தற்கொலை தொடர்பாக தேவ்ராஜ் ரெட்டி உள்பட மூவரைக் காவல்துறை கைது செய்தது. 

நடிகர் சாய் பிரசாந்த்

தொலைக்காட்சி தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர் சாய் பிரசாந்த். 2016 மார்ச் மாதம், தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். மன உளைச்சல் காரணமாக இந்தத் துயர முடிவை மேற்கொண்டார். 

35 வயது சாய் பிரசாந்த் - வடகறி, நேரம், ஐந்தாம் படை, தெகிடி உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதேபோல ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

சாய் பிரசாந்த் முதல் மனைவி நிரஞ்சனாவுடன் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக, இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்தத் தம்பதிக்கு ரக்ஷிதா(8) என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில், சாய்பிரசாந்த் ஒரு ஆண்டுக்கு முன்பு, சுகிதா என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சுகிதா, கோவையில் உள்ள தனது தந்தை வீட்டுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் வீட்டில் சாய்பிரசாந்த் தனியாக இருந்தார். இதற்கிடையே, சுகிதா, சாய்பிரசாந்தின் செல்போனுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், நீண்டநேரமாகியும் சாய்பிரசாந்த் செல்பேசியில் பேசவில்லை. இதனால் சந்தேகமடைந்த சுகிதா, வீட்டின் உரிமையாளரைத் தொடர்பு கொண்டு வீட்டில் சாய்பிரசாந்த் இருக்கிறாரா என்று பார்க்குமாறு கூறியதாக தெரிகிறது. உடனே வீட்டின் உரிமையாளர், ஜன்னல் வழியாக வீட்டைப் பார்த்தார். அங்கு வரவேற்பு அறையில் சாய்பிரசாந்த் விஷம் குடித்து இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

சாய் பிரசாந்த் வீட்டில் இருந்து ஒரு கடிதத்தை காவல்துறை கைப்பற்றியது. அதில்,

சுஜிதாவுக்கு... உன் மீது அதிக அளவில் காதல் வைத்திருந்தேன். என் காதல் எப்போதும் உண்மையானது. என் சாவுக்கு வேறு யாரும் காரணமல்ல, நானே காரணம் என்று உருக்கமாக எழுதியிருந்தார். தன் மனைவிக்கு அவருடைய நகைகளுடன் கூடுதலாக ரூ. 5 லட்சமும் வழங்கப்படும் என்றும் எழுதியிருந்தார். தனக்கு சின்ன திரையில் வாய்ப்பளித்தவர்களுக்கு கடிதத்தில் நன்றி தெரிவித்தார்.

நடிகர் முரளி மோகன்

சென்னையில் பால முரளி மோகன் (54), சிவாஜி, ரெண்டு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில நடித்துள்ளார். தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.

2014 ஜூன் மாதம், பால முரளியின் மனைவி சுமதி, உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தாம்பரத்துக்குச் சென்றார். வீட்டில் தனிமையில் இருந்த முரளி மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஆறு மாதங்களாக பட வாய்ப்பு எதுவும் இல்லாததால் பால முரளி மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்பட்டது.

இயக்குநர் பாலாஜி யாதவ்

சின்னத்திரை இயக்குநர் பாலாஜி யாதவ், 2015 ஏப்ரலில் தற்கொலை செய்துகொண்டார்.

அரசி, துளசி உள்ளிட்ட பல தொலைக்காட்சித் தொடர்களை இயக்கியுள்ளார். சரியான வாய்ப்புகள் இல்லாததால் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தொலைக்காட்சிகளில் டப்பிங் தொடர்களில் அதிகமாகிவிட்டதால் ஒரு வருடமாக வேலையில்லாமல் தவித்தார். வீட்டுக் கடனை செலுத்த முடியாமலும் இதர பிரச்னைகளாலும் மனவேதனை தாங்காமல் தற்கொலை செய்துகொண்டார் என பாலாஜி யாதவின் மனைவி பேட்டியளித்தார். 

நடிகர் பிரதீப்

2017 மே மாதம், பிரபல டிவி நடிகர் பிரதீப் தற்கொலை செய்துகொண்டார்.

டிவி தொடரில் தன்னுடன் நடித்த நடிகை பவானி ரெட்டியை அவர் திருமணம் செய்தார். சுமங்கலி தொடரில் நடித்து வந்தார். இந்நிலையில் ஆந்திராவில் உள்ள புப்பலகுடா பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். 

வீட்டிலேயே தற்கொலை செய்துகொண்ட இருவர்

கரோனா முடக்கம் காரணமாக வேலை இல்லா சோகத்தால், தமிழ் சின்னத்திரை நடிகர், நடிகை வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார்கள். 

சென்னையை அடுத்த கொடுங்கையூர் முத்தழ்மிழ் நகரைச் சேர்ந்தவர்கள் சின்னத்திரை நடிகர்களான ஸ்ரீதர் மற்றும் அவரது சகோதரி ஜெய கல்யாணி. இருவரும் தொலைகாட்சித் தொடர்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தனர்.

இந்நிலையில் இந்த வருட ஜூன் மாதம் அவர்களது வீடு இரு நாள்களாகத் திறக்கப்படாமல் இருந்ததுடன், வீட்டிலிருந்து துர்வாடையும் வீசியுள்ளது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கதவி உடைத்து திறந்த போது இருவரது சடலங்களும் அழுகத் துவங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன.    

அவர்கள் இருவரும் நிதி நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com