தை பிறந்தால் வழி பிறக்கும்: தமிழக முதல்வருக்கு பாரதிராஜா நன்றி

இந்தப் பொங்கல் முதல், தமிழ் சினிமா மீண்டும் வீறுகொண்டு செயல்பட அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம்
தை பிறந்தால் வழி பிறக்கும்: தமிழக முதல்வருக்கு பாரதிராஜா நன்றி

100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக தமிழக முதல்வருக்கு இயக்குநர் பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தை அடுத்து கடந்த மாா்ச் மாதம் முதல் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டன. அதன்படி, கடந்த 7 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால் திரைப்படங்களையும், திரையரங்குகளையும் நம்பி பணியாற்றுவோரின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, தமிழகத்தில் திரையரங்குகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனா். அதனை ஏற்று மாவட்ட நிா்வாகத்தின் முன்அனுமதி பெற்று 50 சதவீத இருக்கைகளுடன் 10-ஆம் தேதி முதல் திரையரங்குகளைத் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி பொதுமக்களை அனுமதிக்க திரையரங்குகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

திரையரங்குகளில் 100 சதவீதப் பாா்வையாளா்களை அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளா்கள் சங்கம் கோரிக்கை வைத்தது. நடிகர் விஜய், தமிழக முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார். சிம்புவும் இதுதொடர்பாக இன்று அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.  திரையரங்குகளில் அரசு வலியுறுத்தியுள்ள வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரும் இயக்குநருமான பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளித்ததற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இந்த அனுமதிக்கு உறுதுணையாக இருந்த அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு நன்றி. 

100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்கும்போது திரையரங்குகளும் பார்வையாளர்களும் தமிழக அரசு கொடுத்துள்ள அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கருத்தில் கொண்டு செயல்படவும் வேண்டுகிறோம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்கிற சொல்லுக்கு ஏற்ப, இந்தப் பொங்கல் முதல், தமிழ் சினிமா மீண்டும் வீறுகொண்டு செயல்பட அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம் என்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com