இந்தியாவில் 5ஜி இணைய சேவை: வழக்கு தொடர்ந்தார் நடிகை ஜுஹி சாவ்லா

மனிதர்களின் பாதுகாப்புக்கு உகந்தது என்கிற சான்றிதழ் இல்லாமல் 5ஜி இணைய சேவைக்கு அனுமதி அளிக்கக்கூடாது...
இந்தியாவில் 5ஜி இணைய சேவை: வழக்கு தொடர்ந்தார் நடிகை ஜுஹி சாவ்லா

இந்தியாவில் 5ஜி இணைய சேவையைக் கொண்டு வருவதற்கு பிரபல நடிகை ஜுஹி சாவ்லா எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

4ஜி இணையதள வசதி தற்போது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பயன்பாட்டில் உள்ளது. அடுத்த தலைமுறையான 5ஜி இணையதள வசதியை உருவாக்குவதற்கான சோதனைகளில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் முன்னின்று வருகின்றன.

இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்துக்கான சோதனைகளை மேற்கொள்வதற்கு மத்திய அரசு ஏற்கெனவே அனுமதி அளித்திருந்தது. இந்த ஆய்வுக்காக ரிலையன்ஸ் ஜியோ, பாா்தி ஏா்டெல், வோடஃபோன் ஐடியா, எம்டிஎன்எல் ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, குஜராத், ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களிலும் கிராமப் பகுதிகளிலும் 5ஜி சோதனைகள் நடத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

10 மடங்கு அதிக வேகம்: குறிப்பிட்ட தகவல்களைப் பதிவிறக்கம் செய்யும் வேகம், 4ஜி தொழில்நுட்பத்துடன் ஒப்பிடுகையில் 5ஜி தொழில்நுட்பத்தில் 10 மடங்கு அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையவழி மருத்துவம், இணையழி கல்வி, ஆளில்லா சிறிய ரக விமானங்களின் (ட்ரோன்) செயல்பாடு உள்ளிட்டவற்றில் 5ஜி தொழில்நுட்பத்தை நிறுவனங்கள் சோதிக்கவுள்ளன. அதேபோல், அறிதிறன்பேசி, மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்களில் 5ஜி தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது என்பது தொடா்பான ஆய்வையும் அந்நிறுவனங்கள் மேற்கொள்ளவுள்ளன. நகரப் பகுதிகளில் மட்டுமல்லாமல், கிராமப் பகுதிகளிலும் 5ஜி தொழில்நுட்பத்துக்கான சோதனையை தொலைத்தொடா்பு நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டுமென மத்திய அரசு தெரிவித்துள்ளது. சுமாா் 6 மாதங்களுக்கு இந்த ஆய்வுகள் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்தியாவில் 5ஜி இணைய சேவையைக் கொண்டு வருவதற்கு பிரபல நடிகை ஜுஹி சாவ்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனது மனுவில் அவர் கூறியுள்ளதாவது:

5ஜி இணைய சேவையால் தற்போது உள்ள கதிர்வீச்சை விடவும் 100 மடங்கு கதிர்வீச்சு வெளிப்படும். இதன்மூலம் பூமியில் அனைத்து உயிர்களுக்கும் கடுமையான விளைவுகள் ஏற்படும். மனிதர்களுக்கு ஆபத்து விளைவித்து லாபம் ஈட்ட யாருக்கும் அனுமதி தரக்கூடாது. விளைவுகளைக் கருத்தில் கொண்டு பெல்ஜியத்தில் 5ஜி இணைய சேவை தொடர்பான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மனிதர்களின் பாதுகாப்புக்கு உகந்தது என்கிற சான்றிதழ் இல்லாமல் 5ஜி இணைய சேவைக்கு அனுமதி அளிக்கக்கூடாது எனத் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு மீதான விசாரணை நாளை (ஜூன் 2) நடைபெறவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com