கங்கனா ரணாவத் மீது சட்டரீதியான நடவடிக்கை- காங்.முடிவு

தன்னுடைய சமீபத்திய கருத்தால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் நடிகை கங்கனா ரணாவத்.
கங்கனா ரணாவத்
கங்கனா ரணாவத்

தன்னுடைய சமீபத்திய கருத்தால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் நடிகை கங்கனா ரணாவத்.

பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் தமிழில் ‘தலைவி’ திரைப்படத்தின் மூலம் பெரிய இடைவேளைக்குப் பின் அறிமுகமானவர். ஹிந்தியில் மிக முக்கிய நடிகையாக இருக்கும் கங்கனா தன்னுடைய அரசியல் கருத்துகளால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர்.

கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய அரசின் சார்பாக சமீபத்தில் அவருக்கு ‘பத்ம ஸ்ரீ’ விருது வழங்கப்பட்டது. இதற்கடுத்து ‘டைம்ஸ் நௌ’ செய்திக்கு அவர் அளித்த நேர்காணலில் ‘இந்தியா 2014-ஆம் ஆண்டு மோடி பிரதமரான போதுதான் உண்மையில் சுதந்திரம் அடைந்தது. 1947-ல்  கிடைத்தது பிச்சை’ எனத் தெரிவித்தார். 

இக்கருத்து வேகமாக இணையத்தில் வைரலாகத் தொடங்கிய நிலையில் பல்வேறு கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் கங்கனாவிற்கு எதிரான கண்டனத்தைப் பதிவு செய்தனர். முக்கியமாக ஆம் ஆத்மி கட்சியனர் கங்கனாவின் மீது வழக்கும் தொடுத்தனர்.

இந்நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சையில் அவர் சிக்கியிருக்கிறார். இன்ஸ்டாகிராமில் ‘நேதாஜியை பிரிட்டிஷாரிடம் ஒப்படைத்த காந்தி மற்றும் சிலர்’ என்கிற தலைப்பில் வெளியான பழைய கட்டுரையில் கங்கனா ‘நீங்கள் காந்தி ரசிகராக இருக்கலாம் அல்லது நேதாஜியின் ஆதரவாளராக இருக்கலாம் . ஆனால் ஒருபோதும் இரண்டுமாக இருக்க முடியாது. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்’ என தன் கருத்தைப் பதிவு செய்தார்.

நேரடியாக காந்தியைத் தாக்கிய இந்த வார்த்தைகளால் பலரும் அவருக்கு எதிராக கண்டனத்தைப் பதிவு செய்து வரும் நிலையில் தற்போது மகாராஷ்டிர மாநிலக் காங்கிரஸ் சட்டரீதியாக நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக அக்கட்சித் தலைவர் நானா பதோல் தெரிவித்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com