
வேலாயுதம் படம் வெளியாகி 10 வருடங்கள் நிறைவடைந்ததையடுத்து இயக்குநர் மோகன் ராஜா தனது ட்விட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் விஜய், ஹன்சிகா, சரண்யா மோகன், ஜெனிலியா, சூரி, சந்தானம் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகி வெற்றிபெற்ற படம் வேலாயுதம். அதுவரை தொடர் தோல்விகளை கொடுத்து வந்த நடிகர் விஜய்யின் திரையுலக வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது இந்தப் படம்.
அதற்கு முன் வந்த காவலன் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றிருந்தாலும், வேலாயுதம் திரைப்படம் தான் விஜய்யின் ரசிகர்களை தக்கவைத்துக்கொள்ள உதவியது. அண்ணன் தங்கை உறவை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருந்த இந்தப் படம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. இந்தப் படத்தில் விஜய் சூப்பர் ஹீரோவாக கலக்கியிருப்பார். மேலும் சந்தானத்தின் நகைச்சுவை காட்சிகளும் விஜய் ஆண்டனியின் பாடல்களும் இந்தப் படத்தின் வெற்றிக்கு பெரிதும் கைகொடுத்தன.
இந்த நிலையில் இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 10 வருடங்கள் ஆனதைத் தொடர்ந்து இயக்குநர் மோகன் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியிருந்தார். அதில், சொன்னா புரியாது, சொல்லுக்குள்ள அடங்காது. நீங்கள்லாம் எம்மேலயும் வச்ச பாசம். நீங்கள் காட்டும் அன்புக்காக நடிகர் விஜய் மீதும் அவரது ரசிகர்கள் மீதும் எப்பொழுதும் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.