ஷங்கர் பிறந்த நாள்: தோல்விக்கு அர்த்தம் தெரியாத அதிசய இயக்குநர்!

தமிழ்த் திரையுலகில் இந்தப் பெருமை வேறு எந்த இயக்குநருக்கும் கிடையாது.
ஷங்கர் பிறந்த நாள்: தோல்விக்கு அர்த்தம் தெரியாத அதிசய இயக்குநர்!
Published on
Updated on
5 min read

பிரமாண்டமான படங்களை மட்டுமல்லாமல் பிரமாண்டமான வெற்றிகளையும் பெற்று தமிழ்த் திரையுலகின் அந்தஸ்த்தை உயர்த்தியவர் ஷங்கர். இன்று அவருடைய பிறந்த நாள்.

12 தமிழ்ப் படங்களை எடுத்தும் இதுவரை தோல்விகளையே அடையாத இயக்குநர் என்று ஷங்கரைக் குறிப்பிடலாம். தமிழ்த் திரையுலகில் இந்தப் பெருமை வேறு எந்த இயக்குநருக்கும் கிடையாது.

தொழில்நுட்பத்தைப் படிப்படியாகப் பயன்படுத்தி, தமிழ்த் திரையுலகின் வளர்ச்சியில் அதிக அக்கறை காட்டியவர் ஷங்கர். இவருடைய வெற்றிப் பயணத்தைத் தமிழ்த் திரையுலகின் வெற்றிப் பயணமாகவே பார்க்கலாம்.

ஜென்டில்மேன் (1993)

புயலென அறிமுகமானார் ஷங்கர். ஜென்டில்மேன் படத்தைத் திரையரங்கில் பார்த்த அத்தனை பேருக்கும் திரையரங்கில் வெளிப்பட்ட கொண்டாட்டத்தை என்றைக்கும் மறக்க முடியாது. ஒரு ஜனரஞ்சகமான படத்தில் இருக்கவேண்டிய சுவாரசியத்தின் அளவை ஒரே படத்தில் அதிகரித்தவர் ஷங்கர். பரபரப்பான காட்சிகளும் அமர்க்களமான பாடல்களும் படத்தை சூப்பர் ஹிட் ஆக்கின. ஜென்டில்மேன் படத்துக்குப் பிறகு வெகுஜனத் தமிழ்ப் படத்தின் அமைப்பு மாறியது என்றே கூறலாம்.

காதலன் (1994)

படம் வெளிவரும் முன்பே பாடல்கள் ரசிகர்களைக் கட்டியிழுத்தன. ஊர்வசி ஊர்வசி, பேட்டை ராப், முக்காபுலா பாடல்களை எப்போது திரையரங்கில் பார்ப்போம் என ரசிகர்கள் காத்துக் கிடந்தார்கள். ஷங்கர் - ரஹ்மான் கூட்டணி இளைஞர்களின் ரசனைக்கு ஏற்றவிதமாக அமைந்தன. பாடல்களில் நடனமாடியதன் மூலம் தமிழ்த் திரையுலகில் பரபரப்பு ஏற்படுத்திய பிரபு தேவா, கதாநாயகனாக வெற்றி பெற்ற படம். நக்மா வேடத்துக்கு முதலில் மாதுரி தீட்சித் நடிப்பதாக இருந்தது. அவருடைய தேதிகள் மட்டும் கிடைத்திருந்தால் பிரபு தேவா - மாதுரி தீட்சித் நடனத்தை படம் முழுக்கப் பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைத்திருக்கும்.

பாடல்களைப் பார்ப்பதற்காகவே படம் பார்க்க வந்த ரசிகர்கள் அதிகம். தமிழில் ஒரு காதல் கதையை அதற்கு முன்பு இவ்வளவு பிரமாண்டமாக யாரும் சொன்னதில்லை. இதனால் ஷங்கரின் வெற்றிச் சூத்திரம் 2-வது முறையும் சரியாக அமைந்தது. ஜாலியான இந்தப் படம் நான்கு தேசிய விருதுகளைப் பெற்றது.

இந்தியன் (1996)

முதல் இரு படங்களில் பெரிய கதாநாயகர்கள் யாரும் நடிக்காமல் போனாலும் வசூலுக்குக் குறைச்சலில்லை. இந்தமுறை கமல் போன்ற உச்ச நட்சத்திரம், அழுத்தமான கதை, சுஜாதாவின் வசனம் என புதிய கலவையுடன் களமிறங்கினார் ஷங்கர்.

இன்றுவரைக்கும் ஊழலை எதிர்த்து படங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அதற்கெல்லாம் பெரிய ஊக்கம், இந்தியன் படம் அடைந்த அட்டகாசமான வெற்றி. ரஜினி நடிக்க வேண்டிய படம். அவர் மறுத்ததால் அந்த வாய்ப்பு கமலுக்குச் சென்றது. நடிப்பால் அசத்திய கமல், சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். மொத்தமாக 3 தேசிய விருதுகள் கிடைத்தன. சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பாகவும் அனுப்பப்பட்டது.

ஜீன்ஸ் (1998)

இந்தியனின் வெற்றிக்குப் பிறகு இந்தியத் திரையுலகின் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவராக ஆனார் ஷங்கர். இந்தமுறை காதலன் போல இன்னொரு ஜாலியான படமெடுத்தார். 

இரண்டு பிரசாந்துகள், இரண்டு ஐஸ்வர்யா ராய்கள், இரண்டு நாசர்கள் என படத்தின் கதையிலேயே பிரமாண்டம் இருந்தது. அதிகப் பொருட்செலவில் உருவான இந்தியப் படம் என விளம்பரம் செய்யப்பட்டது. ஒரு பாடலுக்கு உலகின் ஏழு அதியசங்களையும் படமெடுத்தது எதிர்பார்ப்பைக் கூட்டியது. வழக்கம்போல ரசிகர்கள் இந்தப் படத்துக்கும் அதிக ஆதரவை அளித்தார்கள். பிளாஷ்ஃபேக் காட்சியில் ராதிகாவின் நடிப்பு மறக்க முடியாததாக அமைந்தது. இந்தியன் போல ஜீன்ஸும் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பாக அனுப்பப்பட்டது.

முதல்வன் (1999)

ஊழல், அதிகார துஷ்பிரயோகத்தை அழுத்தமாகப் பேசிய இன்னொரு ஷங்கர் படம். இந்தமுறை சொந்தத் தயாரிப்பில் படமெடுத்தார் ஷங்கர். இந்தக் கதையிலும் ரஜினி நடிக்க வேண்டியது. ஆனால் அரசியல் காட்சிகள் அதிகமாக இருந்ததால் ரஜினி மறுத்துவிட்டார். மீண்டும் அர்ஜூனை அழைத்தார் ஷங்கர்.

ஒருநாள் முதல்வராக ஊழலில் ஈடுபடும் அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அர்ஜூன் அளிக்கும் தண்டனைகள் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றன. இப்படியெல்லாம் வித்தியாசமாகச் சிந்திக்க முடியுமா என திரையுலகினர் ஷங்கரைக் கண்டு வியந்தார்கள். 

இந்த வெற்றி அளித்த தெம்பில் முதல்வன் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்தார் ஷங்கர். ஆனால் தமிழ் அளவுக்கு அங்குப் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.

பாய்ஸ் (2003)

சமூகக் கருத்துகளை ஒரு படத்தில் வெளிப்படுத்தினால் அடுத்ததாக இளமையாகப் படம் பண்ணுவது ஷங்கரின் வழக்கம். அந்த வரிசையில் பாய்ஸ்.

ரஹ்மானின் பாடல்கள் வழக்கம் போல எதிர்பார்ப்பை அதிகப்படுத்தின. முற்றிலும் புதிய நடிகர், நடிகைகளைக் கொண்டு இளமையான கதையுடன் பாய்ஸை உருவாக்கினார் ஷங்கர்.   

ஆனால், கதையில் ஒரு சிறிய தவறைச் செய்தார். அதிக விமரிசனங்களை எதிர்கொண்டார். இருந்தும் புதுமுகங்கள் நடித்த ஒரு படத்துக்குக் கிடைத்த வசூல் என்பது நிச்சயம் அதிகம் தான். ஷங்கர் திரை வாழ்க்கையில் சற்றே சறுக்கிய படம் என்றால் அது பாய்ஸ் தான். இந்தப் படத்தின் மூலம் திரையுலகுக்குப் பல புதிய திறமைகள் கிடைத்தன.

அந்நியன் (2005)

முதல்முறையாகக் கடினமான விமரிசனங்களை எதிர்கொண்ட ஷங்கர், வீறு கொண்டு எழுந்த படம் இது. இன்னொரு வித்தியாசமான கதை. திரைக்கதையில் இந்தளவுக்கு எந்தப் படத்திலும் ஷங்கர் மெனக்கெட்டதில்லை என்று கூடச் சொல்லலாம். ஒரே கதாபாத்திரம் மூன்று வேடத்தில் நடிக்கும்போது ரசிகர்களுக்குக் குழப்பம் ஏற்படும். அதை அழகாகக் கையாண்டார். 

ஊழலுக்கும் அநியாயத்துக்கும் துணை போகும் நபர்களைத் தண்டிக்கும் வேடத்தில் அசத்திய விக்ரம் தேசிய விருது பெற்றார். ஜென்டில்மேனுக்குப் பிறகு வெகுஜனப் படத்துக்கான சுவாரசிய அளவை மற்றொரு முறை அதிகரித்தார் ஷங்கர். முதல்வனுக்குப் பிறகு ஷங்கரின் திறமையை இன்னொரு முறை ரசிகர்களும் திரையுலகினரும் வியந்து பாராட்டினார்கள்.

சிவாஜி (2007)

ரஜினி - ஷங்கர் - ஏ.வி.எம். - ஏ.ஆர். ரஹ்மான் என்கிற கூட்டணி மிகப் பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியது. இந்தியாவில் இலவசக் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் கட்ட அமெரிக்காவிலிருந்து திரும்பும் சிவாஜி (ரஜினி) சந்திக்கும் சவால்களும் கருப்புப் பணத்தை ஒழிக்க எடுக்கும் நடவடிக்கைகளும் ரஜினி ரசிகர்களுக்குக் கொண்டாட்டமான படமாக அமைந்தது. ஒரு ரஜினி படம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படிப்பட்ட ஒரு படத்தைக் கச்சிதமாகத் தனது பாணியில் வழங்கினார் ஷங்கர். 

சிவாஜியின் மகத்தான வெற்றியால் ரஜினி - ஷங்கர் கூட்டணி மேலும் தொடர்ந்தது.

எந்திரன் (2010)

2010 முதல் தொழில்நுட்பம், ஷங்கரின் முக்கியக் கருவியாகிவிட்டது. ஹாலிவுட் படங்களைப் போல நம்மாலும் எடுக்க முடியும் என்று நிரூபிக்க முயல்கிறார். அதன் தொடக்கம், எந்திரன்.

கமல் நடிக்க ஒப்புக்கொண்ட படம். பிறகு ரோபாவாக ரஜினி நடித்தார். ரோபோவை மையக் கதாபாத்திரமாகக் கொண்டிருந்தாலும் தெளிவான திரைக்கதை மூலம் சாதாரண ரசிகர்களுக்கும் புரியும்படி படம் எடுத்திருந்தார். ரஜினிக்கு இந்தியா முழுக்க அதிக ரசிகர்களை உருவாக்கியதில் எந்திரனுக்கும் பங்கு உண்டு. ரஜினி, ஐஸ்வர்யா ராய் என இந்தியாவின் இரு பெரும் நட்சத்திரங்களைச் சரியாகப் பயன்படுத்தி வெற்றிக்கனியை மீண்டும் பறித்தார் ஷங்கர். 

நண்பன் (2012)

3 இடியட்ஸ் படத்தின் கதையைத் தமிழ் ரசிகர்களுக்கும் சொல்ல வேண்டும் என்பதால் முதல்முறையாக ரீமேக் படத்தை இயக்கினார் ஷங்கர். முதல்முறையாக ஷங்கர் இயக்கத்தில் நடித்தார் விஜய்.

விஜய் நடித்த படம் என்பதால் இளைஞர்களின் ஆதரவு படத்துக்கு அதிகமாக இருந்தது. ஷங்கர் எண்ணியது போல படத்தின் கருத்து ரசிகர்களின் மனத்தில் அழுத்தமாகப் பதிந்தது. இன்றைக்கும் தொலைக்காட்சிகளில் பலமுறை இந்தப் படம் ஒளிபரப்பப்படுகிறது. உணர்வுபூர்வமான காட்சிகளும் வாழ்க்கைத் தத்துவங்களும் தமிழிலும் இந்தக் கதைக்கு வெற்றியை அளித்தன. 

ஐ (2015)

பாய்ஸுக்கு அடுத்ததாக அதிக விமரிசனங்களை எதிர்கொண்ட இன்னொரு ஷங்கர் படம். தன் வாழ்க்கையை மாற்றியமைத்தவர்களை விக்ரம் பழிக்குப் பழி வாங்கும் படம். இன்னும் நன்றாக வந்திருக்கலாம் என்று படத்தைப் பார்த்தபோது பலருக்கும் தோன்றினாலும் வழக்கம் போல வசூலில் எந்தக் குறையும் வைக்காத மற்றொரு ஷங்கர் படமாக இருந்தது.

2.0 (2018)

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவான 3-வது படம். எந்திரனின் 2-ம் பாகம். 

லைகா நிறுவனம் தயாரித்தது. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்தார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். இசை - ஏ.ஆர். ரஹ்மான். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவானது. படம் வெளியான முதல் வாரத்தில் உலகளவில் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. இத்தகவலை லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. ரஜினி - ஷங்கர் கூட்டணி அமைந்தாலே அந்தப் படம் வசூலில் சாதனை படைக்கும் என்பது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டது.

அடுத்த படங்கள்



தெலுங்கு நடிகர் ராம் சரண் மற்றும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோருடன் இணைந்து இரு படங்களை ஷங்கர் இயக்கவுள்ளார். இதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அந்நியன் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளார். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், ஷங்கா் இயக்கத்தில், கமல் ஹாசன், காஜல் அகா்வால் நடிப்பில் ‘இந்தியன் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com