சமந்தாவா, நயன்தாராவா? வைஜயந்தி மாலா, ஸ்ரீதேவி வரிசையில் அடுத்தது யார்?

ஹிந்தியில் நடிகைகள் வைஜயந்தி மாலா, ஸ்ரீதேவிக்குப் பிறகு ஜொலிக்கப் போவது யார்? சமந்தாவா, நயன்தாராவா?
நடிகைகள் வைஜயந்தி மாலா, ஸ்ரீதேவி, நயன்தாரா, சமந்தா.
நடிகைகள் வைஜயந்தி மாலா, ஸ்ரீதேவி, நயன்தாரா, சமந்தா.
Published on
Updated on
4 min read

தமிழகத்திலிருந்து சென்று ஹிந்தித் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவர்கள் நடிகைகள் வைஜயந்தி மாலாவும் ஸ்ரீதேவியும்.

இப்போதும் தீபிகா படுகோன், கத்ரினா கைஃப்,  ஆலியா பட், கங்கணா ரணாவத் எல்லாம் ஹிந்தியைக் கலக்கினாலும் தமிழிலிருந்து சென்ற வைஜயந்தியும்  ஸ்ரீதேவியும் பெற்ற உச்சி இடத்தைப் பெற்றிருப்பதாகக் கூற முடியாது.

ஆனால், 2022-ல் நினைக்க முடியாத அதிசயமொன்று நிகழ்ந்துகொண்டிருக்கிறது, மீண்டும் தற்போது தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் புயலைப் போல நடிகர், நடிகைகள் ஹிந்தியில் நடிக்கச் சென்றுகொண்டிருக்கிறார்கள், திரையில் மின்னத் தொடங்கியிருக்கிறார்கள்.

முன்னெப்போதுமில்லாத அளவுக்குத் தென்னகத்தில் வெற்றி பெற்ற பல நட்சத்திரங்கள் இப்போது வரிசைகட்டி ஹிந்தித் திரையுலகிற்குள் நுழைந்துகொண்டிருக்கிறார்கள்!

வைஜயந்தி மாலா
வைஜயந்தி மாலா

பாலிவுட்டில் விரைவில் ஜொலிக்கப் போகிற நட்சத்திரங்களில் பல தென் இந்தியாவில் உதித்தவையாக இருக்கப் போகின்றன. வெற்றிக் கொடி கட்ட வரிசையில் இருப்பவர்கள் - முதலில் சமந்தா. அடுத்தடுத்து நயன்தாரா, ராஷ்மிகா மந்தனா... அப்படியே விஜய் சேதுபதி, விஜய் தேவரகொண்டா,

இன்னமும் ஹிந்தியில் படங்கள் எதுவும் வெளிவராத நிலையிலேயே பெரும் எதிர்பார்ப்பைத் தோற்றுவித்திருக்கிறார்கள் சமந்தாவும் நயன்தாராவும். இவர்களைப் பற்றியும் இவர்களுடைய படங்களைப் பற்றியும் தொடர்ந்து செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

இருவருமே தமிழில் வெளிவந்த பிரம்மாண்டமான வெற்றிப் படங்களில் இடம் பெற்றிருக்கின்றனர். இருவருக்குமே தனிப்பட்ட முறையிலும் சமூக ஊடகங்களிலும் எண்ணற்ற ரசிகர்களைக் கொண்டிருக்கின்றனர். கரண் ஜோஹருக்கு அளித்த ஒரேயொரு பேட்டியிலேயே நிறைய கோல்களை அடித்துத் தள்ளினார் சமந்தா. இருவருமே தங்களுடைய திறம்பட்ட தனிப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி வருபவர்கள்!

ஸ்ரீதேவி
ஸ்ரீதேவி

இவர்கள் இருவருடைய என்ட்ரியும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் ஒருவர் நிச்சயமாக அடுத்த ஸ்ரீதேவியாக ஜொலிக்க அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன, நயன்தாராவுக்குத் திருமணமாகிவிட்ட நிலையில், குறிப்பாக சமந்தா.

தமிழில் தெறி, மெர்சல் என ஹிட் தந்தவர் சமந்தா. தெலுங்கில் மஜிலி, ரங்கஸ்தலம், மனம் என ஏராளமான சூப்பர் ஹிட் படங்கள். தி பேமிலி மேன் ஓடிடி தொடரில் சர்ச்சைக்குரிய பாத்திரத்தில் நடித்துப் பெரிதும் பேசப்பட்டார். அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் ஊ சொல்றியா என்ற ஒரே ஒரு ஐட்டம் டான்ஸ் அவருடைய லெவலையே மாற்றிக் காட்டியது.

தெலுங்கில் விரைவில் இவர் நடித்த சாகுந்தலம் வெளிவரவுள்ளது. விஜய் தேவரகொண்டாவுடன் குஷி என்ற படத்திலும் நடிக்கவிருக்கிறார் சமந்தா.

தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் பெரும் வரவேற்புப் பெற்ற சமந்தா, ஹிந்தியில் ஆயுஷ் குரானாவுடன் இணைந்து நடிக்கிறார். இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படம், அடுத்தாண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்தியில் மேலும் அக்க்ஷய் குமாருடனும் இணைந்து சமந்தா நடிக்கப் போவதாகவும் பேச்சு அடிபடுகிறது.

சமந்தா
சமந்தா

தென் இந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டாரெனக் கொண்டாடப்படும் நயன்தாரா, ஷாருக் கான் இணையாக ஜவான் படத்தில் நடிக்கிறார். 2023 ஜூன் மாதத்தில் ஜவான் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐயா, சந்திரமுகி தொடங்கி சிஓ2 வரை மாறுபட்ட பாத்திரங்களிலும் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் பாத்திரங்களிலும் சிறப்பாக நடித்துக் கலக்கிவரும் நயன்தாரா, ஹிந்தியிலும் முத்திரை பதிப்பார் எனக் கருதப்படுகிறது. இவருடைய திருமண நிகழ்ச்சியையே நல்ல விலைக்குப் பெற்று, ஆவணப் படமாக கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் ஒளிபரப்புகிறது நெட்பிளிக்ஸ்.

நயன்தாரா
நயன்தாரா

தமிழில் வில்லனாகவும் அதிரடித்து வரும் விஜய் சேதுபதி, ஹிந்தியில் கத்ரினா கைஃபுடன் மெரி கிறிஸ்துமஸ் படத்திலும், தமிழில் வெளிவந்த மாநகரம் படத்தின் ரீமேக்கான சந்தோஷ் சிவனின் மும்பைகார் படத்திலும் நடிக்கிறார். இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வரப் போகிறது மும்பைகார்.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

புஷ்பா பல மொழி சூப்பர் ஹிட் திரைப் படத்தில் நடித்த - தென்னிந்திய ரசிகர்கள் அனைவருக்கும் நெருக்கமான நடிகை ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் கொடிகட்டிப் பறக்கும் ராஷ்மிகா மந்தனா, ஹிந்தியில் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு இணையாக நடிக்கும் சாந்தனு பக்சியின் மிஷன் மஞ்சு திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகவிருக்கிறது.

இதுமட்டுமின்றி, அமிதாப் பச்சன், நீனா குப்த ஆகியோருடன் குட்பை படத்திலும் நடிக்கிறார் ராஷ்மிகா மந்தனா. மேலும், ரன்பீர் கபூருக்கு இணையாக இவர் நடிக்கும் அனிமல் படம் அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா

அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம், டியர் காம்ரேட்  போன்ற படங்களில் சிறப்பாக ஸ்கோர் செய்த இளைஞர் விஜய் தேவரகொண்டா. சமந்தாவுடன் இவர் நடிக்கும் ஹிந்தித் திரைப்படமான குஷி இந்த ஆண்டு இறுதியில் வெளிவரவுள்ளது.

ஆமிர் கானின் லால் சிங் சத்தா திரைப்படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார் நாகார்ஜுனவின் மகனும் தெலுங்கு நடிகருமான நாக சைதன்யா. தெலுங்கில் பிரேமம், மஜிலி, பங்காருராஜு, தேங்க் யூ படங்கள் எல்லாம் இவர் பெயர் சொல்லக் கூடியவை. ஹிந்தியில் மேலும் எதிர்பார்த்திருக்கிறார்.

நாக சைதன்யா
நாக சைதன்யா

மலையாளத்தில் பிரேமம் படத்தில் இரண்டாவது நாயகியாக அறிமுகமாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றவர் அனுபமா பரமேஸ்வரன். பின்னர், மலையாளம் மட்டுமின்றித் தமிழ், தெலுங்கு திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கிப் பரவலாகக் கவனம் பெற்றார். விரைவில் பெரிய நிறுவனமொன்றின் ஹிந்திப் படத்தில் நடிக்கவிருக்கிறார் எனக் கூறப்படுகிறது.

அனுபமா பரமேஸ்வரன்
அனுபமா பரமேஸ்வரன்

விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி தெலுங்குப் படத்தின் மூலம் வெளிச்சத்துக்கு வந்த நடிகை ஷாலினி பாண்டே, ஹிந்தியில் முதன்முதலாக நடித்த ஜயேஷ்பாய் ஜோர்தார் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தின் ஹீரோ ரன்வீர் சிங்.

(தென்னகத்திலிருந்து செல்லாவிட்டாலும் ஏற்கெனவே ஜொலித்தவர்கள் பட்டியலில் ஹேமாமாலினி, ரேகா போன்றோருக்குச் சிறப்பிடங்கள் உண்டு. உச்சத்தைத் தொடாவிட்டாலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றோரும் வடக்கே சென்று திரும்பியவர்களே).

விஜய் தேவரகொண்டா
விஜய் தேவரகொண்டா

தற்போதைய நிலைமையைப் பார்க்க, இந்தப் பட்டியல் இன்னமும் நீண்டுசெல்ல எல்லாவிதமான வாய்ப்புகளும் இருக்கின்றன. இவர்களைத் தவிர்த்து, சிறப்புத் தோற்றங்களில் நடிகர் விஜய், சூர்யா எல்லாரும் தோன்றத் தொடங்கியிருக்கிறார்கள். இவர்களும் முழு ஹிந்திப் படங்களில் நடிக்கத் தொடங்கினால் வியப்பதற்கில்லை.

தெற்கிலிருந்து வீசத் தொடங்கியுள்ள புயல், வடக்கை வீழ்த்துமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com