ஜல்சா விமர்சனம்: தப்பி ஓடினால் என்ன ஆகும்?

முடிவைப் பார்வையாளனே அவன் இஷ்டத்துக்குக் கற்பனை செய்து கொள்ள வேண்டும் என்றால் எதற்குப் படம் எடுக்கிறீர்கள்?
ஜல்சா விமர்சனம்: தப்பி ஓடினால் என்ன ஆகும்?

ஓடிடிக்கென்று உருவாக்கப்பட ஒரு கதை, ஒரு படம்.

நள்ளிரவில் குறுக்கே வந்த ஓர் இளம் பெண் மீது கார் மோதுகிறது. காரின் வேகத்தில் தூக்கிவீசப்பட்ட அந்தப் பெண்ணுக்கு என்ன ஆனது என்றுகூட பார்க்காமல், காரை விட்டு இறங்காமல் காரை ஓட்டி வந்த வித்யா பாலன் அங்கிருந்து பறந்துவிடுகிறார். இதற்குப் பிறகு அவர் தன் குற்றத்தை மறைக்க முயல்வதுதான் படத்தின் கதை.

கார் விபத்து, பிறகு தப்பி ஓட்டம் என்கிற கதை கொண்ட பல படங்களைப் பார்த்திருப்போம். அதற்கும் இதற்கும் உள்ள பெரிய வித்தியாசம் - தவறை ஒரேடியாக மறைக்க எண்ணாமல் தனக்குள் புதைந்திருக்கும் உண்மையை வெளியே சொல்வதற்கான மனப்போராட்டத்தில் கதாநாயகி ஈடுபடுகிறார். அதிலும் காரில் மோதி தூக்கி வீசப்பட்ட பெண், தன் வீட்டுப் பணிப்பெண்ணின் மகள் எனும்போது நெருக்கடியும் மனப்போராட்டமும் மேலும் அதிகமாகிவிடுகிறது.

உண்மையைச் சொல்வதா வேண்டாமா, உண்மையைச் சொன்னால் என்ன தண்டனை கிடைக்கும், மறைத்தால் என்ன விளைவுகள் உருவாகும் என ஊசலாடும் கதாபாத்திரம் வித்யா பாலனுக்கு. கடந்த வருடம் தான் ஷெர்னி என்கிற அற்புதமான படத்தில் நடிப்புத்திறமையை வெளிப்படுத்திப் பாராட்டுகள் பெற்றார். இப்போது இன்னொரு வலுவான வேடம். வெளியே துணிச்சலான பத்திரிகையாளராகத் தெரிந்தாலும் உண்மையை வெளியே சொல்லத் திராணியில்லாமல் பயந்து பயந்து சாகும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார் வித்யா பாலன். ஒரு பெரிய நடிகரின் ஊக்கம் இல்லாமல் இதுபோன்ற கதையம்சம் உள்ள படங்களை அவ்வளவு எளிதில் உருவாக்க முடியாது. இந்த விதத்தில் பாலிவுட்டும் அதன் ரசிகர்களும் கொடுத்து வைத்தவர்கள். 

மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 14 வயது சூர்யா, அதே பாதிப்புள்ள கதாபாத்திரமாகப் படத்தில் நடித்துள்ளார். அவருடைய நடிப்பும் அந்தக் கதாபாத்திரம் ஏற்படுத்தும் தாக்கமும் மனத்தை என்னவோ செய்கிறது. பணிப்பெண்ணாக நடித்த ஷெஃபாலி ஷாவின் நடிப்பில் தான் படமே உள்ளது. என்ன ஒரு மகத்தான நடிகை அவர். அதிலும் கடைசிக்கட்டங்களில் அவர் என்ன நினைக்கிறார், என்ன செய்யப் போகிறார் என்பதை அறிந்துகொள்ள முடியாதபடி நடிப்பில் அதகளம் செய்திருக்கிறார். இந்தப் படத்தில் நடிப்புக்காக ஷெஃபாலி ஷாவுக்கும் சூர்யாவுக்கும் நிறைய விருதுகள் கிடைக்கும். கிடைக்கவேண்டும். கெளரவ் சாட்டர்ஜியின் இசை, காட்சிகளின் சூழலை மனத்தில் ஆழமாகப் பதிய வைக்கிறது. 

இதுபோன்ற படங்களில் குறைகள் பெரிய அளவில் இருந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் கதை மீதான பிடிப்பு போய், கவனம் சிதறிவிடும்.  படத்தில் சிசிடிவி காட்சிகளைக் காவல்துறையினர் தவிர்த்தது ஏன் என்பதற்கான காரணம் நன்றாக உள்ளது. ஆனால் அரசியல்வாதியின் மகன் சிசிடிவி காட்சிகளுக்கு வீணாகப் பயப்படுவதும் அவனிடம் காவலர்கள் காசு கறப்பதும் யதார்த்தத்தை மீறிய கற்பனைகள். மேலும் ஓர் அரசியல்வாதி அவ்வப்போது வித்யா பாலனின் வாழ்க்கையில் குறுக்கிடுவதாகச் சொல்வதிலும் சுவாரசியம் எதுவுமில்லை. 

கடைசிக்காட்சியில் ஷெஃபாலி ஷா தவறு செய்துவிட மாட்டார் என்று பார்வையாளர்கள் எண்ணும்படி தான் அவருக்கும் சிறுவன் சூர்யாவுக்கும் இடையிலான பாசப்பிணைப்பு நமக்குக் காட்டப்படுகிறது. இதனால் நம் மீது திணிக்கப்படும் அந்தப் பரபரப்பில் அர்த்தம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இன்னொன்று, கார் விபத்தில் தூக்கி வீசப்பட்ட அந்தப் பெண் ஒருவேளை இறந்திருந்தால் கதையும் ஷெஃபாலியின் நடவடிக்கையும் எப்படி இருந்திருக்கும் என்கிற கேள்வியும் எழாமலும் இல்லை. படம் அந்தக் கோணத்தில் திரும்பியிருந்தால் நமக்கு வேறொரு சுவாரசியமான படம் கிடைத்திருக்குமோ? மேலும் சில கதாபாத்திரங்களின் தொடக்கமும் முடிவும் தெரிவதில்லை. வித்யாவிடமிருந்து பிரிந்த கணவர், வித்யாவுக்கும் நிறுவன உரிமையாளருக்குமிடையே உள்ள உறவு போன்றவற்றில் ஒரு தெளிவு இல்லை. படத்தில் வித்யா பாலன் மட்டுமில்லை, இயக்குநரும் சில இடங்களில் தப்பி ஓடிவிடுகிறார். 

திரைப்படங்களில் ஓபன் எண்டிங் என்கிற திரைக்கதை உத்தி மிகவும் நுட்பமாகக் கையாளப்பட்ட வேண்டிய ஒன்று. தீபிகா படுகோன் நடித்த கெஹ்ரையான் படத்தில் அது சரியாகப் பொருந்தியது. ஜல்சாவிலும் அதே உத்தியைப் புகுத்தித் தப்பிக்கும் போது கடுப்புதான் ஏற்படுகிறது.

ஓர் இயக்குநர் இதுதான் கதையின் முடிவு எனப் பார்வையாளர்களுக்குச் சொல்ல வேண்டும். முடிவைப் பார்வையாளனே அவன் இஷ்டத்துக்குக் கற்பனை செய்து கொள்ள வேண்டும் என்றால் எதற்குப் படம் எடுக்கிறீர்கள்? கதையை ஒரு தாளில் எழுதிக் கொடுத்துவிடுங்கள். அடி வங்காளக் கடலே பாடலுக்கு விதவிதமாகக் கற்பனை செய்து பார்ப்பதுபோல எங்கள் இஷ்டத்துக்கு ஏதோ ஒன்றை நினைத்துக் கொள்கிறோம். மண்டேலா படத்திலும் இந்தப் பிரச்னை ஏற்பட்டது. எதற்காக முழுப் படத்தையும் பார்த்தோமோ அந்தப் புதிரை அவிழ்க்காமல் போகும்போது பார்வையாளனின் முகத்தில் கரியைப் பூசுவது போலாகி விடுகிறது. மூன்றாம் பிறை, சேது, ரமணாவில் எல்லாம் ஓபன் எண்டிங் வைத்திருந்தால் என்ன ஆவது?

மற்றபடி ஜல்சா பார்க்க வேண்டிய படம்தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com